|
Sunday, September 05, 2004
Gangai konda Cholapuram - # 3
கங்கை கொண்ட சோழபுரம் - # 3
For a picture version of this post, go here.
ஓலைகளையும் தாண்டி, இடுக்குகளின் வழியே காற்று மெல்லப் பரவியது. தரை மட்டத்தில் நடமாடிய மனிதர்களின் பேச்சுக்குரல் ‘கசமுசா’ என்று எங்களை எட்டின.
ஏறக்குறைய அந்தரத்தில் நின்றவாறு, பாதங்கள் துறுதுறுக்க, நாங்கள் பாடம் கேட்டுக்கொண்டிருந்தோம்.
சற்று நேரத்தில் அதற்கும் மேல்தளத்திற்குப் போவது பற்றிய பேச்சு கிளம்பியது. (”சும்மா தைரியமா ஏறுங்க...அப்படித்தான் explore பண்ணணும்.” – டாக்டர்) . இந்த சமயத்தில்தான், எங்களுடன் முதல்நாளே வந்திருக்க வேண்டிய நண்பர், ‘எங்கே விட்டுவிடப்போகிறோமோ’ என்ற பயந்தவாறு சாரத்தின் மீது ஏறி, வியர்த்து வழிய வந்து சேர்ந்துகொண்டார்.
“இதுக்கு மேல ஏறமுடியாதுங்க...கீள படிக்கட்டைப் பிரிச்சிட்டம்.” என்றார் ஒருத்தர்.
அதையெல்லாம் கவனத்தில் வைத்துக்கொள்ளூம் பொறுமை எங்களுக்கில்லை. மேற்கொண்டு ஏற முடியாதவர்களைத் தவிர்த்து, டாக்டரும், மற்றவர்களும், இடைப்பட்ட பகுதியை ட்ரம், டப்பாக்கள் கியவற்றை வைத்து வசதி செய்துகொண்டு, ஏறியேவிட்டார்கள். மேலே மேலே வளைந்து வளைந்து சென்ற கம்பங்களைப் பற்றிக்கொண்டு சென்று, கலசம் வரையிலும் சென்றும்விட்டார்கள். அங்கு, நந்திகளின் மேல் அமர்ந்தவாறே (இதனாலேயே குழு நண்பர் ஒருவர் ‘நந்தியைக் கண்ட நாயகர்’ என்ற சரித்திரப் பெயர் பெற்றார்), இளநீர் தாகசாந்தி நடந்தது. என்ன சொல்லுங்கள், வெய்யில் பொழுதுக்கு குளிர்ந்த இளநீரைப் போல் வேறு ஒன்றும் இனிப்பதிலை.
மதியம் சுமார் நான்கு மணிக்கு, கோயிலின் தளங்களிலிருந்து இறங்கி, மறுபடியும் தரையைத் தொட்டு, பசியின் அவசரத்தின் எல்லோருமாக ஒரு வாழைத் தாரையே காலி செய்த பிறகு, (என்னதான் ஒப்பிட முடியாது என்றாலும்) இமயமலையைத் தொட்டுவிட்ட டென்ஸிங், ஹில்லரி போன்ற சாதனையாளர்கள் எப்படி உணர்ந்திருப்பார்கள் என்று புரிவது போல் இருந்தது.
அரை மணி நேரம் கழித்து ‘ஜெயங்கொண்டா’னில் மதிய உணவிற்குச் சென்ற பொழுது, எல்லோருமே அலுத்துக் களைத்திருந்தோம்.
வெயில் தாழ ஆரம்பித்திருந்த பொழுது, இராஜேந்திர சோழனின் அரண்மனை இருந்ததாகச் சொல்லப்பட்ட ‘மாளிகை மேட்’டிற்குச் சென்றோம். அங்கு ஒரிடத்தில் வரிசையாக வைக்கப்பட்டிருந்த சிதைந்த உருவச் சிலைகளை ராய்ந்தோம். ஓரிடத்தில், உடலின் மேல்பக்கம் மட்டுமே உருப்படியாக இருந்த ஒரு பெண்ணின் சிலை காணப்பட்டது. அதன் கீழே, இரும்புத் தகட்டில், ‘பெண் உருவம்’ என்று எழுதப்பட்டிருந்தது. “அடடா...இதுவல்லவா கண்டுபிடிப்பு?” என்று வியந்தவாறு, அதற்கு மேல் சிற்ப ஆராய்ச்சியில் இறங்காமல், இராஜேந்திர சோழனின் மாளிகையின் இடிபாடுகள் என்று சொல்லப்பட்ட இடத்திற்குச் சென்றோம்.
சிமெண்ட்டால் கட்டம் கட்டப்பட்ட ஒரு இடத்தில், செங்கல்லால் ஆன சில குட்டிச்சுவர்கள் நின்றன. ‘தமிழகத்தை சிறப்பாக ஆண்ட ஒரு பெருமன்னனின் அரண்மனை, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வளவாவது மிஞ்சியிருக்கிறதே’ என்ற எண்ணம் மேலோங்கியது உண்மை.
அருகிலேயே இருந்த மியூசியம் ஒன்றையும் பார்த்துவிட்டு, மீண்டும் க.கொ.சோழபுரத்தின் அழகிய புல்வெளிகளில் அமர்ந்து, சூரியன் தென்னங்கீற்றுகளுக்கிடையில், கோயிலின் மதில்சுவற்றுக்குக் கீழே மறைவதைக் கண்டு இரசித்துவிட்டு, அங்கிருந்து கிளம்பினோம்.
டாக்டர் கலைக்கோவன் அங்கிருந்தே திருச்சியை நோக்கிக் கிளம்ப, அவருக்கும் அவரது குழுவினருக்கும் நன்றி கூறிவிட்டு, நாங்கள் சிதம்பரத்தை நோக்கிப் பயணமானோம்.
இரவு பதினோரு மணிக்கு வண்டி என்பதால், சிதம்பரம் கோயிலை பார்த்துவிடலாம் என்று நினைத்தவாறு நாங்கள் உள்ளே நுழைய, அப்பொழுதே மணி ஒன்பது (வாயிலில் செருப்பு கண்காணிப்பாளர் எங்களை ஒரு மாதிரியாகப் பார்த்தார்).. ஆர்வக்கோளாறில் நாங்கள் அன்று கற்றுக்கொண்ட பாடங்களையெல்லாம் அங்கிருந்த மண்டபங்களை ஆராய்வதில் செலவழிக்க, நேரம் போனதே தெரியவில்லை.
ஒன்பதரை மணிக்கு திடீரென்று சாப்பாட்டின் நினைவு வந்தது. அடித்து பிடித்துக்கொண்டு அருகில் இருந்த ஒரு ஓட்டலில் நுழைந்தோம்.
பத்தரை மணி சுமாருக்கு, மக்கள் நடமாட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டிருந்த சிதம்பரத்தின் வீதிகளின் வழியே நடந்து சென்றோம். வெளியூர் செல்லும் பஸ்கள் ‘பாம்’ என்று சப்தமிட்டவாறு நகர ரம்பித்திருந்தன. ரயில் நிலையத்தை நாங்கள் அடைந்த பொழுது எங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
ரயில் இரண்டு மணி நேரம் லேட்.
விதியை நொந்துகொண்டு காத்துக்கொண்டிருக்க மனம் வரவில்லை. விதியை நொந்துகொள்ளாமல், அரட்டையடித்துக்கொண்டு, ‘மசாலா டீ’ வாங்கிக் குடித்துப் பொழுதைப் போக்கிவிடுவது என்று முடிவு செய்துகொண்டோம். கோட்ஸேவின் மரணம், 1942வில் இந்திய அரசியலின் நிலைமை, நேருஜியின் அரசியல் கொள்கைகள், என்று சுவாரஸ்யமான பேச்சில் இரவு கழிந்தது. அந்த அமைதியான ரயில் நிலையத்தில், நேரம் போனதே தெரியவில்லை.
இரவு இரண்டு மணிக்கு இராமேஸ்வரம் எக்ஸ்ப்ரெஸ் பெருமூச்சுவிட்டவாறு சிதம்பரத்தை அடைந்தது. மறுநாள் காலை ஒன்பது மணிக்கு எங்களை சென்னையில் கொண்டு வந்து சேர்த்துவிட்டது.
அத்துடன், இந்தக் கட்டுரையும் முடிந்தது.
நன்றி, வணக்கம்.
Photos (for the GKC Trip), courtesy : Mr. S. Kamalakkannan.
Posted at 04:09 am by pavithra
Tuesday, August 31, 2004
Gangai konda Cholapuram - #2
கங்கை கொண்ட சோழபுரம் - 2
For a picture version of this post, go here.
ஓலை வேயப்பட்ட இடங்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், கீஈஈஈஈஈழே...மனிதர்கள் எறும்புகளைவிடச் சிறிய புள்ளிகளாகத் தெரிந்தனர். அவ்வப்பொழுது சிலர் ‘என்னவோ சாரத்தில் அசைகிறதே?” என்று நிமிர்ந்து பார்க்க, ஓலை வழியே கையைசைத்தோம். (அதைப் பார்த்து அவர்கள் என்ன நினைத்தார்களோ, கடவுளுக்கே வெளிச்சம். “ஐயோ! அங்க ஆரோ மனுசங்க இருக்காங்கடீ!’ என்ற குரல் ஒன்று கேட்டதாக ம(மெ)கா திருப்தியுடன் நண்பர் ஒருவர் அறிவித்தவுடன் ஏற்பட்ட சந்தோஷத்தைத் தவிர்க்க முடியவில்லை.)
சாரப் பலகைகளின் மேல் நின்றவாறு, காரைப் பூச்சால் அமைக்கப்பட்டிருந்த சிற்பங்களை ரசித்தோம். ஓரிடத்தில் லிங்கோத்பவர் கம்பீரமாகக் காட்சியளித்தார். அருகிலேயே தட்சிணாமூர்த்தி சாந்தமாக அமர்ந்திருந்தார். இன்னோர் இடத்தில், குழந்தை விநாயகரின் கூந்தலில், சிவபெருமான அருமையுடன் கொன்றை மலர்களை சூட்டிக்கொண்டிருந்தார்!
‘நாஸிகா’ என்று கூறப்படும் வளைவுகள் வெவ்வேறு தெய்வ உருவங்களுக்கிடையில் கச்சிதமாக அமைக்கப்பட்டிருந்தன. கோரமான பற்கள் தெரியும் புன்னகையுடன், சிங்க முகங்களும் எங்களை வரவேற்றன.
டாக்டர். கலைக்கோவன் எங்களுடன் சேர்ந்துகொண்டவுடன், வாழ்நாளில் அதுவரை நாங்கள் அடைந்திராத நூதனமான ஒரு அனுபவம் எங்களுக்கு வாய்த்தது. தரையிலிருந்து அத்தனை அடி உயரத்தில், எங்களை நழுவவிடாமல் காப்பாற்றிகொண்டிருந்த சில மரப்பலகைகளின் மீது, க.கொ.சோழபுரத்தின் விமானத்தின் மேற்பகுதியைப் பற்றிய பாடம் ஆரம்பமாகியது.
‘ நாஸிகா’, ‘நேத்ர நாஸிகா’, ‘சாலா’, என்று விதவிதமாக வார்த்தைகள் புகுந்து புறப்பட்டன. ‘போதிகைகளை’ப் பற்றியும் பேச்செழுந்தது. (கவனிக்க: கோயில் தூண்களில் மேற்புறம், அவை கூரையைத் தொடும் இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் வடிவத்திற்கு, ‘போதிகை’ என்று பெயர்.). இந்தப் போதிகைகள் பெரும்பாலும் சீராக, நடுவில் எந்த இடைவெளியும் இல்லாமல் மேற்புறம் பயணிக்கும். அப்படி இடையில் வெட்டு விழுந்தால்—க.கொ.சோழபுரத்தைப் போல்—அது இராஜ ராஜ சோழனின் காலம், அதற்குப் பிற்பட்ட காலத்திற்குப் பிறகு கட்டப்பட்டது என்று உறுதியாகச் சொல்லலாம். போதிகைகளில் சாதாரணப் போதிகைகளும் உண்டு. போதிகையின் நடுவே வெட்டு விழுந்து, அது துருத்திக்கொண்டு இருப்பது போலும் அமைப்பது உண்டாம். குலோத்துங்க சோழனின் காலத்தில், இந்த முறை மாறிவிட்டது.
போதிகைகளின் மேற்புறம், ‘வாஜனம்’, ‘கபோதம்’ ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன. பிரம்மாண்டமான கோயில் என்பதால், கோயிலின் வெவ்வேறு பாகங்களும் அதற்கேற்ற அளவில் அமைக்கப்பட்டிருந்தன.
விமானத்தின் உட்புற அமைப்பை வெளிப்பார்வையிலிருந்து மறைக்கும் விதமாக, வெளிப்புறம் திறமையாக அமைக்கப்பட்டிருந்த வித்தையை நாங்கள் அறிந்துகொண்டோம். உட்புறம், சுவர் மூலை திரும்பும் இடத்தில் லேசாக வளைக்கப்பட்டிருந்ததல்லவா? வெளிப்புறம், விமானம் எண்கோணமாக அமைக்கப்பட்டிருந்தது. வெளிப்புற அமைப்பை வைத்து, உட்புறம் விமானத்தின் அமைப்பை சொல்ல முடியாதபடி அக்கால ஸ்தபதிகள் விமானத்தைத் திறமையாக அமைத்திருந்தனர். விமானம் மேலே செல்லச் செல்ல, எண்கோண அமைப்பு காப்பாற்றப்பட்டு வந்தது. கடைசித் தளத்தில் அது மறைந்து, வட்டமான வடிவத்தை எட்டிவிட்டது.
இம்மாதிரிப் புதுவிதமான விமான/சிற்ப வடிவங்களை அமைப்பதில் சோழர்கள் அதிகத் திறன் வாய்ந்தவர்கள்.
விமானத்தின் உயரம் ஏற ஏற, அதன் சுற்றளவு சிறுகச் சிறுக, விமானத்தின் அங்கங்களும் அளவில் குறுகிக்கொண்டே, தளத்திற்குத் தளம் உள்வாங்கியவாறு அமைக்கப்பட்டிருக்கின்றன.
பொதுவாக, ஒரு தளத்திற்கு மூன்று அடிப்படை உறுப்புகள் உண்டு: ‘அதிட்டானம் (Base), சுவர், மற்றும் கூரைப்பகுதி. இந்த மூன்றும் சேர்ந்ததுதான் ஒரு தளம் என்று குறிக்கப்படுகின்றது. இந்த அடிப்படை அமைப்புக்ளை வைத்துக் கொண்டு, அவற்றை மேலும் மேலும் அழகுபடுத்திக்கொண்டே செல்வதில் சோழர்களுக்கு நிகர் சோழர்களேதான். அப்படிப் பார்த்தால், ‘அதிட்டானம்’ என்ற பகுதியே பல்வேறு பகுதிகளாக மாறி, அமைக்கப்படும் வடிவம், அமைக்கின்ற சிற்பியின் திறன், அவர் வாழ்ந்த காலகட்டம், இவற்றிற்கேற்றாற்போல் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படும். ஏன்? சில சமயம், ஒரு தளத்தோடு நில்லாமல், பல தளங்கள் அமைக்கும்பொழுது, ‘அதிட்டானம்’ என்ற பகுதியே நீக்கப்படுவதும் உண்டு!
இத்தனை நுணுக்கத்துடன் தளங்கள் அமைக்கப்பட்டதற்கு இரு முக்கிய காரணங்கள் உண்டு. ஒன்று: அழகுணர்ச்சி என்று சொல்லப்படும் ‘aesthetic sense’. செய்யும் எதையும் இரசனையுடன் செய்தல். மற்றொன்று—வழிபாட்டுத்தலம் என்பதனால். இறைவன் குடிகொண்டுள்ள இடம், அவனைப் பார்க்க யிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்லும் இடம், மிக அழகானதாக, பார்ப்பவர் மனதைக் கொள்ளை கொண்டு போகும் விதமாக அல்லவா இருக்க வேண்டும்?
இந்தியாவின் விமான அமைப்புகள் மொத்தம் மூன்று வகைகளைச் சார்ந்தவை:
1. நாகரா(Nagara) அமைப்பு (சதுர வடிவம்)
2. வேசரா(Visera) அமைப்பு (வட்ட வடிவம்)
3. திராவிட(Dravida) வடிவம் (பல கோணங்கள்—அதாவது facets கொண்டது)
தமிழ் நாட்டுக் கோயில்களில், நாகர அமைப்புடன் பரவலாகப் பல கோயில்களை காண முடியும். முழுக்க முழுக்க திராவிட அமைப்பில் விமானங்கள் கொண்ட கோயில்கள் நம்மிடையே இல்லை. முழுதாக வேசர அமைப்பில் விமானங்கள் கொண்ட கோயில்களும் இல்லை.
தமிழகக் கோயில்களைப் பொறுத்த வரையில், விமான அமைப்பில் சிறந்து விளங்கியவர்கள் முதலாம் இராஜராஜ சோழர், மற்றும் இராஜேந்திர சோழர். தஞ்சைக் கோயிலை வடிவமைத்த இராஜராஜர், தனது விமானத்தை சதுரமாகவே எழுப்பினார். முடிவில், உச்சியில் இருந்த கலசத்தை மட்டும் திராவிட விமான அமைப்பில் எழுப்பினார். இராஜேந்திர சோழர் ஒரு படி மேலே போய், க.கொ.சோழபுரத்தின் விமானத்தில் மூன்று விதங்களைக் காட்டினார்.
க.கொ.சோழபுரத்தில் உள்ளது போல், மூன்று விதமான விமான அமைப்புகளை உள்ளடக்கிக் கொண்டு, வெளியிலிருந்து பார்த்தால் உட்புறமாக விமானம் எப்படி அமைக்கப்பட்டுள்ளது என்று உணர்ந்து கொள்ளமுடியாதபடி நேர்த்தியாக அமைக்கப்பட்ட விமானம், இந்தியாவிலேயே வேறெங்கும் கிடையாதாம்.
எவ்வளவு உன்னதமான படைப்பு இது!
Posted at 05:02 am by pavithra
Wednesday, August 25, 2004
Gangai konda Cholapuram - #1
கங்கை கொண்ட சோழபுரம் - 1
For a picture version of this post, go here.
கங்கை கொண்ட சோழபுரம்.
சோழ மன்னர்களில் பெரும்புகழ் வாய்ந்தவரும், முதலாம் இராஜ ராஜ சோழரின் புதல்வருமான இராஜேந்திர சோழர் அமைத்த கோயில். கங்கை வரையிலும் சோழர்கள் சென்று, வென்று வந்ததன் அடையாளமாக எழுப்பப்பட்ட கலைப் பொக்கிஷம். அசப்பில் தஞ்சைப் பெரிய கோயிலைப் போன்றே இருந்தாலும், சற்றே பெண்மைத்தனம் நிரம்பியது என்று சொல்வார்கள். வாயில்பகுதிகள் சிதிலமடைந்து காணப்பட்டாலும், கோயிலின் பிரம்மாண்டமும், அதன் அழகும் நம்மைக் கவர்ந்து விடுகின்றன.
நாங்கள் க.கொ.சோழபுரம் போய்ச் சேர்ந்த பொழுது, கோயிலின் விமானம் ஓலைகளால் மூடப்பட்டு, சாரங்களால் சூழப்பட்டு, முகம் தெரியாமல் உடையணிந்திருந்த கோஷாப் பெண்மணியை நினைவுபடுத்தியது. கோயில் வளாகத்தின் பச்சைப் பசேல் புல்வெளிகளில் சற்று நேரம் நடமாடிவிட்டு, அங்குமிங்கும் கேமராக்களை வைத்து சில புகைப்படங்களையும் எடுத்துவிட்டு, நிமிர்ந்தபொழுது, ASIக்காரர்கள் எங்கள் முன் காட்சி தந்தனர்.
அவர்களுடன் கோயிலின் உள்ளே சென்று, சிவபெருமானை தரிசித்தோம். தரிசனம் முடிந்தவுடன், டாக்டர் கலைக்கோவன் எங்களை சந்நிதியின் ஒருபுறமாக அழைத்துச் சென்றார். ‘Sandhara Cella’ என்று அழைப்படும், கர்ப்பகிரஹத்திற்கும் வெளிச்சுவருக்கும் நடுவில் செல்லும் பாதையில் நுழைந்தோம்.
நாங்கள் நின்று கொண்டிருந்த தளத்தின் முடிவில், கூரை கருங்கல்லால் மொத்தமாக மூடப்பட்டிருந்தது. அடுத்த தளத்திற்கு மேலே சென்று பார்த்தால்தான், விமானம் வரையில் செல்லும் சுவர் எப்படி அமைக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள இயலும். ஆக...சாரத்தின் மேலேறுவதில் முதல் கட்டம் தொடங்கியது.
அப்பொழுதே மணி ஒன்று. வேண்டாத சாமான்களை பிரகாரத்தின் ஓரத்தில் கம்பிக் கதவு போட்டிருந்த ஒரு அறைக்குள் பத்திரப்படுத்திவிட்டு, ‘ஒரு புதுமையான அனுபவத்தைப் பெறப்போகிறோம்’ என்ற உணர்வுடன், க.கொ.சோழபுரக் கோயிலின் சாரத்தின் மீது ஏறினோம்.

கட்டைகளின் மீது ஜாக்கிரதையாகக் கால் வைத்தபடி, நடுநடுவே குனிந்து எங்கோ பாதாளத்திலிருந்த தரையைப் பார்ப்பதே புதிய அனுபவமாக இருந்தது. முதல் தளத்திற்கு வந்தவுடன், டாக்டர் எங்களை விமானத்தின் உட்புறம் அழைத்துச் சென்றார்.
இந்தத் தளத்திலும், திருச்சுற்றின் (Sandhara Cella பகுதி) கூரை, கற்பலகைகளால் மூடப்பட்டிருந்தது. மெல்ல, தலைக்கு மேல் குறுக்கும் நெடுக்குமாக கட்டப்பட்டிருந்த கம்பங்களைத் தாண்டிக்கொண்டு (“‘அடிமைப்பெண்’ மாதிரி வாங்கப்பா...“ - டாக்டர். கலைக்கோவன்), கர்ப்பக்கிருஹத்திற்கு நேர் மேலேயிருந்த அறைக்குள் நுழைந்தோம்.
கோயிலின் விமானத்தின் உட்புற அமைப்பே ஒரு architectural அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும். தஞ்சைக் கோயிலில், விமானத்தின் உட்புறம் சதுரமாக அமைக்கப்பட்டிருக்கும். விமானம் மேலே செல்லச் செல்ல, மூலைகளில் right-angles காப்பாற்றப்பட்டுமிருக்கும். க.கொ.சோழபுரத்தின் விமானத்தின் உட்பகுதி, மூலைகளில் லேசாக வளைக்கப்பட்டிருந்தது. விமானம் அமைப்பதில் இதுவும் ஒரு வகை என்பதைத் தெரிந்துகொண்டோம்.
அடுத்தடுத்த தளங்களுக்கு நாங்கள் மேலேற (இம்முறை சாரத்தின் வழியாகச் செல்லாமல், உட்புறம் சரிவாக, கைப்பிடிகள் எதுவுமற்ற படிக்கட்டுகள் வழியாகவே மேலேறினோம்), வெளிப்புறம் காட்சி தந்த விமான அமைப்பிற்கும், உட்புறம் அது அமைக்கப்பட்டிருந்த விதமும் எங்களை அதிசயத்தில் ஆழ்த்திவிட்டது. உட்புறம் விமானத்தில் சுவர்கள் குறுகலாகிக்கொண்டே, உச்ச்ச்ச்ச்ச்...சியில், எங்கள் கண்களுக்குப் புலப்படாத இருளில் மறைந்து போக, வேலையாட்கள் சிலர் அவர்களுக்கே உரிய தைரியத்துடன், சர்க்கஸின் acrobats தோற்றுப்போகும் வகையில் கம்பத்திற்குக் கம்பம் தாவிக்கொண்டு, உச்சியை நோக்கி ஏறினார்கள். அவர்களின் குரல்களையும், அவ்வப்பொழுது அவர்கள் அடித்த டார்ச்சு வெளிச்சத்திலும், விமானத்தின் உச்சி எங்கள் கண்களுக்குத் தெரிந்தது.
விமானத்தின் உட்புற அமைப்பைக் கண்டு வியந்துவிட்டு, வெளியே வந்தோம். உட்சுவருக்கும் வெளிச்சுவருக்கும் இடையே நின்றுகொண்டு, அண்ணாந்து பார்த்த பொழுது, அதிசயமான, மிக அழகிய காட்சி ஒன்று தென்பட்டது. வெளிச்சுவரும் உட்சுவரும் செங்குத்தாக மேலேறுவதற்குப் பதிலாக, சிறிய படிகளாக, கொஞ்சம் கொஞ்சமாக குறுகிக்கொண்டே மேலேறின- தலைகீழாக்கிய படிக்கட்டைப் போல (பார்க்க புகைப்படம்). இதை ‘corbelling’ என்று சொல்கிறார்கள்.
உட்புறச் சுவர்களின் ஒரங்களில், எங்கள் டார்ச் விளக்கின் வருகையைக் கண்டு பயந்து ஓடிய பூச்சிகள் சுவர்களில் ஓட்டிக்கொண்டு, நாங்கள் போவதை பயத்துடன் கவனித்தன. விளக்கு வெளிச்சத்தில், சுவற்றில் அவை குமிழ் குமிழாகப் பளபளத்த காட்சியைப் பார்த்தவுடன், பிரும்மாண்டமான அரண்மனை ஒன்றில், சுவற்றில் பதிக்கப்பட்ட விலையுயர்ந்த இரத்தினங்களும், வைர வைடூர்யங்களும்தான் நினைவுக்கு வந்தன.(‘The Mummy’ படத்தில், சுவற்றில் இருக்கும் பூச்சிகள் போல :-)
இதுவரை நாங்கள் ஏறிவந்த படிக்கட்டுகளும், சிமெண்ட் பூசப்பட்ட தளங்களும் இனி இல்லை. இதற்கு மேல் நிலைக்குச் செல்ல வேண்டுமானால், சாரங்களின் உதவியைக் கொண்டு, அங்கு வேலை செய்தவர்களைப் போல், கம்பத்திற்குக் கம்பம் தாவினால்தான் உண்டு.
இந்த சந்தர்ப்பத்திற்காகவல்லவா கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வந்தது? அதை விட்டுவிட்டால் எப்படி? கையால், சாரமாகப் பொருத்தப்பட்ட கம்பங்களின் மேலேயே ஜாக்கிரதையாகக் கால் வைத்து ஏறத் தொடங்கினோம். ஏறி, பலகைகள் கோர்க்கப்பட்ட தளத்திற்கு வந்து சேர்ந்தோம்.
Posted at 12:19 am by pavithra
Sunday, August 08, 2004
குன்னாண்டார் கோயில்
For a picture version of this post, go here.
மலையடிப்பட்டியிலிருந்து கிளம்பிய நாங்கள், சுமார் இரண்டரை மணிக்கு குன்னாண்டார் கோயில் என்ற சிறிய கிராமத்திற்கு வந்து சேர்ந்தோம்.
படைபடைக்கிற வெயிலில், ஒரு சிறிய மலைப்பகுதியின் கீழ்ப்புறத்தில் அமைந்திருந்த அந்தக் கோயிலுக்கு நாங்கள் வந்து சேர்ந்த பொழுது, சுடச்சுட, ஆவி பறக்க, ASIக்காரர்களின் உபயத்தில் எங்களுக்கு விருந்து ஒன்று தயாராக இருந்தது.
பெரிய பெரிய பாத்திரங்களில், பதினைந்து பேருக்கு தயார் செய்யப்பட்டு, சூடு பறக்க எங்களுக்குப் பரிமாறப்பட்ட விருந்தை, கோயிலின் மண்டபம் ஒன்றில் வயிறார சாப்பிட்டுவிட்டு, கோயிலின் வாயிற்படிக்கட்டில் வரிசையாக அமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டோம்.
மதியக் காற்று, அந்த நிழலில் சுகமாக வீசியது. கிராமத்துச் சிறுவர்கள் சிலர், எங்களுக்கெதிரில் இருந்த சில மண்டபங்களின் தூண்களைப் பற்றிக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்தனர்.
மூன்று மணி சுமாருக்கு, நாங்கள் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆர்வமாக இருந்த ஆய்வுப் பணியில், டாக்டர்.கலைக்கோவன் எங்களை முதன்முதலாக ஈடுபடுத்தினார்.
குன்னாண்டார் கோயிலின் முன் மண்டபங்களைத் தாண்டி, குடைவரைக்குமுன்பாக இருந்த முகமண்டபத்தை அடைந்தோம். முன்னேற்பாடாகக் கையோடு எடுத்து வந்திருந்த டார்ச்சு லைட்டுகளையும், அளக்கும் டேப்களையும் வெளியே எடுத்தோம். விவரங்களைக் குறித்துக்கொள்வதற்கு நோட்டுப்புத்தகங்களைப் பிரித்து எடுத்துக்கொண்டோம்.
அடுத்த மூன்று மணி நேரங்களும், குடைவரையின் கருவறையை அளந்து, ஆவுடையாரின் அமைப்பை அங்கம் அங்கமாக ஆராய்ந்து, முகமண்டபத்தின் ஒவ்வொரு பக்கமும் செதுக்கப்பட்டிருந்த சிற்பங்களை அணு அணுவாக ரசித்து, அவற்றைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்து கொண்டு...
“இது ஒன்றும் அவ்வளவு சுலபமான வேலையில்லை—சுத்த பத்தம், அது இது என்றெல்லாம் பார்க்காமல், முனைந்து வேலை செய்ய வேண்டும்; அப்படி செய்தால்தான் அதற்குரிய ஈடுபாடு வரும்; பலனும் கிடைக்கும்” என்று முன்கூட்டியே, அன்று காலையில் டாக்டர்.கலைக்கோவன் எங்களுக்கு எச்சரிக்கை செய்திருந்தது நன்கு நினைவிலிருந்ததால், குப்பை கூளங்களும், உரித்த தேங்காய் மட்டைகளும், வருடக்கணக்காக வழிந்து ஓடியிருந்த எண்ணெய்ப் பிசுக்கும், விதவிதமான வண்ணங்களில் சிதறி ஓடியிருந்த பெயர் தெரியா திரவங்களின் மிச்சங்களும், பழங்காலத்துக் கோயில்களுக்கேயுரிய பூச்சிகளின் அணிவகுப்பும் எங்களை பாதிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
மாறாக, முகமண்டபத்திற்குள் அவ்வப்போது பிரவேசித்த ‘சில்’லென்ற காற்று எங்களுக்குப் புத்துயிர் கொடுத்தது; தடவிப் பார்த்த சிற்பங்களுடன், டாக்டர்.கலைக்கோவனின் உதவியால் எங்களால் பேச முடிந்தது; இதுவரை நாங்கள் அறியாத பல விஷயங்களை அறிந்துகொள்ள முடிந்தது. கோயில்களின் பலவித பாகங்கள் என்னென்ன, செதுக்கப்பட்ட சிற்பங்கள் அணிந்துள்ள அணிகலன்கள் என்னென்ன, அவற்றை எப்படி இனம் கண்டு கொள்வது, போன்ற பல விஷயங்கள் எங்களுக்கு பரிச்சயமாயின. கோயில்களை ஒரு சில முறைகளிலேயே பார்த்துப் பழகியிருந்த நாங்கள் அன்று புதிய பாடங்கள் கற்றுக்கொண்டோம். ஒரே மதியத்தில் எங்கள் அணுகுமுறை மாறியது என்றுதான் சொல்ல வேண்டும்.
எடுக்கவேண்டிய குறிப்புகளையெல்லாம் எடுத்த பிறகு, நாங்கள் வெளியே வந்து வெளிக்காற்றை சுவாசித்த பொழுது, மணி ஆறைத் தாண்டியிருந்தது.
குன்னாண்டார் கோயிலின் பின்பக்கம் இருந்த மலைச்சரிவுக்குச் செல்ல, சில படிக்கட்டுக்கள் வெட்டப்பட்டிருந்தன. அவற்றில் ஏறிச்சென்று, இடிந்தும் அழிந்தும் போயிருந்த கோட்டைச் சுவர்களைப் பார்த்தவாறு, மலைச்சரிவின் மேற்புறத்தில் சாய்ந்துகொண்டோம்.
சூரியன் மேற்கில் இறங்கிக்கொண்டிருக்க, இருள் மெல்ல மெல்ல பரவிக்கொண்டிருந்தது. மாலை வீடு திரும்பும் பறவைகளின் சப்தம் கலப்படமாக காதுகளில் விழுந்தது. எங்களுக்குப் பின்புறம் அழகிய மயில் ஒன்று, ‘யார் இந்த மனிதர்கள்?’ என்று பார்க்கும் பாவனையில், இடிந்த மதில் சுவரின் மேல் ஒய்யாரமாக வந்து நின்றது. பொழுது சாய்ந்துகொண்டிருந்த அந்தி வேளையில், கோட்டைச் சுவரின் மீது மயிலின் உருவம் தெளிவாகத் தெரிய, இயற்கையின் அற்புதமான ஓவியம் ஒன்றை நாங்கள் கண்டோம்.
எதிற்புறம் இருந்த மரங்கள் காற்றில் சலசலத்தன. மதில் சுவரின் மீதிருந்த மயிலின் குரலுக்கு, அந்த மரங்களிலிருந்து பதில் அகவல்கள் கேட்டன.
“யாராவது கவிதை பாடுங்களேன். இந்த சூழலுக்குப் பொருத்தமாக இருக்கும்.” என்றார் டாக்டர்.கலைக்கோவன்.
கவிதைக்குப் பொருத்தமாகத்தான் இருந்தது அந்த இடமும், நேரமும். சிறிது நேரம் அதை ரசித்துக் கதையும் கவிதையும் பேசிவிட்டு, நன்கு இருள் விரிந்த பின்னர் அங்கிருந்து கீழே இறங்கினோம்.
இரவு வேனில் திருச்சி திரும்பும்பொழுது, அனைவரும் பாட்டும் கூத்துமாகக் கொட்டம் அடித்துவிட்டு (“நான் இந்தப் பாட்டைப் பாடுவேன், இது என்ன சினிமா பாட்டோட மெட்டுன்னு சொல்லுங்க, பார்ப்போம்?" - திருமதி லலிதா) டாக்டரின் வீட்டிற்குச் சென்றோம். மேலும் சில மணி நேரங்கள், அவர் வீட்டில் அறுசுவை உணவு அருந்திவிட்டு, அவரவர் ஹோட்டல் அறைகளுக்குத் திரும்புகையில், மணி பத்தரை ஆகியிருந்தது.
பி.கு: 'குன்னாண்டார் கோயில்' குறித்து நானும், நண்பர் கமலக்கண்ணனும், 2003 ஆம் வருடம் தஞ்சையில் நடந்த Historical Congressஉக்காக ஒர் ஆய்வுக் கட்டுரை தயார் செய்து சமர்ப்பித்தோம். அந்தக் கட்டுரையும் விரைவில்...
Posted at 09:51 pm by pavithra
Friday, July 30, 2004
மலையடிப்பட்டி
For a picture version of this post, go here.
புதுக்கோட்டை மாவட்டத்தின் கீரனூரிலிருந்து சுமார் 17 கி.மீ தொலைவில் உள்ளது மலையடிப்பட்டி. விசலூரிலிருந்து 2 கி.மீ தூரத்தில் இருக்கிறது.
மரங்கள் நிறைந்த பகுதியில் விசலூர்க்கோயில் அமர்ந்திருந்ததென்றால், மலையடிப்பட்டி, மொட்டைப் பாறைப் பிரதேசத்தில், ஒரு மலைக்குன்றில் குடையப்பட்டு, வெளிப்பார்வைக்கு சூனியமாகவும், உட்புறம், வெயில் வேளைக்குக் குளிர்ச்சியாக, எங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்ப்பது போல் தன் வாயில் கதவுகளைத் திறந்து வைத்துக்கொண்டு காத்திருந்தது.
மலையடிப்பட்டியில் இரு குடைவரைக்கோயில்கள் உள்ளன: ஒன்று சிவபெருமானுக்கு, இன்னொன்று திருமாலுக்கு. நாங்கள் முதலில் திருமால் கோயில் கொண்டிருந்த குடைவரைக்கோயிலையே தரிசித்தோம். இந்தக்கோயிலில் உள்ள பழைமையான ஒரு கல்வெட்டு, சோழ அரசன் இராஜகேசரியின் ஏழாம் ஆட்சியாண்டைச் சார்ந்ததாம். ‘ஒளிபதி விஷ்ணுகிருகம்’ என்ற வார்த்தைகள், இக்கோயில் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. காலத்தைப் பொறுத்தவரையில், சிவபெருமான் குடைவரைக்கும் பிற்பட்டது என்று தகவல். சுமார் ஒன்பது, அல்லது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
வாயிலைத் தாண்டி, பாதங்களில் மணல் கொதிக்கக் கொதிக்க வேகமாக நடந்து சென்று குடைவரையை அடைந்தோம். மூன்று வாயில்களுள், திறந்திருந்த நடு வாயிலின் வழியே உள்ளே நுழைந்தோம்.
பொதுவாகவே, குடைவரைக்கோயில்கள் மூன்று பகுதிகளைக்கொண்டவை- முகமண்டபம், முகமண்டபத்தையும் கருவறையையும் பிரிக்கும் பகுதி (இதை facet என்று சொல்கிறார்கள்), அப்புறம் கருவறை. மலையடிப்பட்டியின் facet மூன்று வாயில்களைக் கொண்டது. வாயில்களுக்கு ‘அங்கணம்’ என்று பெயர்.
முக மண்டபத்திலும் பல்வேறு சிற்ப அதிசயங்கள் காரை பூசப்பட்டுக் காணப்பட்டன. உள்ளே நுழைந்தவுடன், கையில் மலர்களுடன், சுதை பூசப்பட்ட இரு அடியவர்கள், புன்னகையுடன் எங்களை வரவேற்றனர் (கைகளில் யுதங்களை வைத்திருந்தால் மட்டுமே, அவர்கள் ‘துவாரபாலகர்கள்’). முகமண்டபத்திலிருந்து, கருவறைக்கு முன் உள்ள மண்டபத்திற்கு செல்லும் வாயிலில், சிங்கங்களை அடித்தளமாகக் கொண்டு இரு அழகிய தூண்கள் எழும்புகின்றன. தூண்களில், முத்து மாலைகள் போன்ற மணிகள் மிக நுட்பமாக செதுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றிற்கு ‘மாலாஸ்தானம்’ என்று பெயர்.
முகமண்டபத்திற்கு அடுத்த உள்மண்டபத்தில், வலது கைப்பக்கம், திருமாலின் திருவுருவம், தேவியருடன் காணப்படுகிறது. ‘வைகுந்தநாதர்’ என்பது இவரது திருநாமம். அவருக்கு வலப்புறத்தில், வராக மூர்த்தி வீற்றிருக்கிறார்.
வைகுந்தநாதருக்கு நேரெதிர் சுவற்றில், புடைப்புச் சிற்பமாக, நரசிம்ம மூர்த்தி, கம்பீரமாகக் காட்சி தருகிறார்.
தலைக்கு மேலே, கூரையில் பல வண்ண ஓவியங்களும் காணப்பட்டன.
திருமயம் கோயிலை ஒரு முறை பார்த்தவர்களுக்கு, அந்தக் கோயிலுக்கும், ‘மலையடிப்பட்டி’ குடைவரைக் கோயிலுக்கும் உள்ள ஒற்றுமை உடனே கண்ணில் பட்டுவிடும். ஆம், இங்கு மஹாவிஷ்ணு, மஞ்சளும் சிவப்புமாக ‘டால’டித்த ஆதி சேஷனின் மீது சயனித்துக்கொண்டிருந்தார். அவரது கரங்களின் ஆதரவைப் பெற்ற மார்க்கண்டேயரும், பூமிதேவியும் மண்டியிட்டு அமர்ந்திருந்தனர். ஒரு ஓரத்தில் மது கைடபர்கள் என்னும் அரக்கர்கள் கடவுளின் கோபத்திற்குப் பயந்து ஓடும் பாவனையில் செதுக்கப்பட்டிருந்தனர். கருடனும், தேவர்களும், இன்னபிற தெய்வ புருஷர்களும் இந்தக் காட்சியைப் பார்த்து ஆரவாரித்தனர்,
சாதாரண மனிதர்கள் இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு, இவ்வளவுடன் நின்று விடுவார்கள். இது நாள் வரையில் அப்படியே இருந்த எங்களுக்கு, சரித்திர ஆராய்ச்சியாளர்கள் இதே விஷயங்களைப் பார்க்கும் முறையே வேறு என்பது புரிய ஆரம்பித்தது. எங்களுக்குக் கழுத்தில் இடும் நகையாகவும், தலையில் சூடும் க்ரீடமாகவும் இருந்தவை அவர்களுக்கு முறையே ‘சரப்பளி’யாகவும், ‘கரண்ட மகுடமாகவும்’ மாறிவிட்டன. எங்கள் கண்ணுக்குப் புலப்படாத நுணுக்கங்கள் அவர்களுக்கு வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தன - உதாரணத்திற்கு, தூண்களில் மேற்புறம், அவை கூரையைத் தேடும் இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் வடிவத்திற்கு, ‘போதிகை’ என்று பெயர். அவை வளைந்து வளைந்து காணப்பட்டால், அதற்கு ‘தரங்க போதிகை’ என்று பெயராம். (தரங்கம் என்றால் ‘அலை’ என்று பொருள்). [பார்க்க புகைப்படம்]. இராஜராஜ சோழர் காலத்திற்கு பிறகு, இந்த வடிவம் மாற்றம் அடைந்துவிடுகிறது. தரங்க போதிகைகள் கொண்ட கோயில் என்றால், கண்ணை மூடிக்கொண்டு, ‘இராஜராஜர் காலத்திற்கு முற்பட்டது’ என்று கூறிவிடலாம்.
சிற்பிகள் சிற்பங்களைச் செதுக்குவதற்கு முன், சிவப்பு வர்ணத்தால் வரைந்து கொள்ளூம் கோடுகள், காரைப் பூச்சையும் தாண்டி அவர்களுக்குப் புரிந்தன. அவர்கள் அந்த விஷயத்தைச் சுட்டிக் காட்டிய பிறகே நாங்களும் அதைக் கவனித்தோம். கவனித்து வியப்பில் ஆழ்ந்தோம். அம்மாடி! முத்தரையர் காலத்துக் குடைவரையில், சிற்பிகள் ‘வரைந்த’ வர்ணம் கூட அப்படியே நின்றுவிட்டது! சித்தன்ன வாசலில் ஆயனர் கலந்து கொண்ட ஓவியப் போட்டி நினைவுக்கு வரவில்லை?
இந்த சமயத்தில், இரா.கலைக்கோவன் எங்களுக்கு ஒரு நூதனமான சோதனை ஒன்றை வைத்தார். “விசலூரில்தான் ஓரளவுக்குக் கோயில் சிலைகள் உங்களுக்குப் பரிச்சயமாகிவிட்டதே? எங்கே - இந்தக் கோயிலில், குடைவரைக்குள் செதுக்கப்படாத, வெளியிலிருந்து செதுக்கி உள்ளே பொருத்தப்பட்ட இரு சிற்பங்கள் இருக்கின்றன. அவை எவையெவை என்று கண்டுபிடியுங்கள், பார்ப்போம்?” என்றபடி, அவர் கையைக் கட்டிக் கொண்டு ஒரு தூணில் சாய்ந்துவிட்டார்.
நாங்கள் எல்லோரும் ஒருவரையருவர் பார்த்துக்கொண்டோம். ‘நம்மால் முடியுமா?” என்ற சந்தேகம் ஒரே ஒரு கணம்தான் தோன்றியது. உடனே, டார்ச்சு லைட்டு சகிதமாக மண்டபம் முழுவதும் பரவினோம்.
எத்தனை தேடியும், முக மண்டபத்தின் வலது மூலையிலிருந்த விஷ்ணு பகவான் சகித தேவியர் சிற்பம் ஒன்றையே எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது. கொஞ்சம் கையாலாகாத்தனத்துடன் நாங்கள் எங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ள, எங்களைச் சோதித்தவர் ஒரு மந்தகாசப் புன்னகை புரிந்த வாறு “நீங்கள் கண்டுபிடித்த ஒரு சிற்பம்தான் வெளியிலிருந்து கொண்டு வரப்பட்டது. இரண்டாவது சிற்பமே கிடையாது,” என்று சொல்ல, ‘கரகாட்டக்காரன் சினிமாவைப் போல், ‘அதுதாங்க இது’ என்று கவிழ்த்துவிட்டீர்களே’ என்று அங்கலாய்த்துக்கொண்டு, அடுத்த கட்ட ஆராய்ச்சிக்குத் தாவினோம்.
மலையடிப்பட்டியின் இரண்டாவது - அதாவது சிவபெருமானின் குடைவரைக்கோயிலுக்கு, ஒரு சிறிய பாதையின் வழியே நடந்து சென்று, மரங்கள் கவிந்திருந்த குகை வழியாக நுழைந்தோம். இங்கு சிற்பங்கள் கொட்டிக்கிடக்கவில்லையென்றாலும், ஒரு சுவற்றில் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டு ஒன்று எங்களது கவனத்தைக் கவர்ந்தது. ‘அது என்ன?’ வென்று யோசிப்பதற்குள், இரா.கலைக்கோவன் எங்களை, இன்னொரு சுவற்றில் செதுக்கப்பட்டிருந்த சில சிற்பங்களின் பக்கம் இழுத்துக்கொண்டு சென்றார். ‘இந்தச் சிற்பங்களெல்லாம் எந்தெந்த தெய்வங்களைக் குறிக்கின்றன; சொல்லுங்கள் பார்ப்போம்’, என்று எங்களுக்கு இன்னொரு சிறிய டெஸ்ட் வைத்தார்.
ஆளாளுக்கு நாங்கள் “இது முருகன்- சென்னி தெரிகிறதே?”, “இது துர்கையாகத்தான் இருக்க வேண்டும்,” என்று சிற்பங்களின் உருவ அமைப்புகளை வைத்து எங்கள் முடிவுகளைத் தெரிவிக்க, அவற்றை இன்னும் நுணுக்கமாக ஆராய்வது எப்படி எங்களுக்குக் கற்றுக்கொடுத்த பின்னர்...எங்கள் ஆர்வத்தைக் கிளறிவிட்ட கல்வெட்டின் பக்கம் நகர்ந்தார்.
“இது ஒரு அபூர்வமான கல்வெட்டு... ஏறக்குறைய ஒரு confession என்று வைத்துக்கொள்ளூங்களேன்?”
“குடைவரைக்கோயிலுக்குள் confession? அப்படியென்ன விஷயம் அடங்கியிருக்கிறது இதில்?”
“இருக்கிறது,” என்ற இரா.கலைக்கோவன், நிதானமாக எங்களைக் கல்வெட்டைப் படிக்கச் சொன்னார். நிறுத்தி நிறுத்தி அதைப் படிக்கும்போதே விஷயம் விளங்கிவிட்டது என்றாலும், பின்னர் அவர் அதை விரித்துச் சொல்லும்பொழுதுதான் அந்த அதிசயக் கல்வெட்டின் சாரம் முழுவதும் விளங்கிற்று.
“கொலை செய்தவன் ஒருவன் வெட்டிய கல்வெட்டு இது,” என்றார் இரா.கலைக்கோவன் நாங்கள் வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருக்க, ஒரு சிறிய புன்னகையுடன் தொடர்ந்தார். ”இந்தக் கல்வெட்டை வெட்டியவன் ஒரு தாசியுடன் பழக்கம் வைத்திருந்திருக்கிறான். ஒரு சமயம், அந்த தாசி, வேறொரு பிராமணனுடன் இருப்பதை அறிந்தவுடன், கண்மண் தெரியாத த்திரத்தில் அவளையும், அந்தப் பிராமணனையும் வெட்டிவிடுகிறான். உடனே அவனுக்குக் கண்ணும் தெரியாமல் போய்விடுகிறது...”
“அதெப்படி? கொலை செய்தவுடன் கண் தெரியாமல் போகுமா என்ன? அதற்கும் இதற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா?”
“உண்டு என்று மருத்துவம் சொல்கிறதே? இதை எங்கள் படிப்பின் ஒரு பகுதியாக நாங்கள் படித்தோம். சில சமயங்களில், stress அதிகமானால், இந்த மாதிரி அபூர்வமாக நடப்பதுண்டு. சில சமயம் வாழ்நாள் முழுவதும் அந்தக் குறை நீங்காமல் இருப்பதுண்டு; இன்னும் வேறு சமயங்களில் அதுவாகவே சரியாகிவிடும். இந்த மனிதன் இந்தக் கோயிலுக்கு வந்தவுடன், அவன் பார்வையைத் தடை செய்துகொண்டிருந்த இரத்தக்கட்டியோ, ஏதோவொன்றோ, கண்களுக்குச் செல்லும் இரத்தக்குழாயிலிருந்து வெளியேறியிருக்க வேண்டும் — அதனால், கோயிலுக்கு வந்தவுடன் அவனது பார்வை திரும்பிவிட்டது. பக்திப் பெருக்குடன், அவன் இந்தக் கோயிலுக்குச் சில கொடைகள் தந்து, ‘இன்ன காரணத்தினால்தான் நான் இவற்றைத் தர நேர்ந்தது’ என்பதையும் விலாவாரியாக வெட்டி வைத்திருக்கிறான். அதுதான் இந்தக் கல்வெட்டின் கதை. ” என்று முடித்தார் இரா.கலைக்கோவன்.
எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களூக்கு மௌளன சாட்சியாக நின்று கொண்டிருந்த அந்தச் சுவற்றை ஒரு முறை தொட்டுப் பார்த்துவிட்டு, அங்கிருந்து நகர்ந்தோம்.
Posted at 08:06 am by pavithra
|
|
|