For picture version of this post, go here : Part 1 and Part 2
ஆவுடையார் கோயிலிலிருந்து கிளம்பிய நாங்கள், மீண்டும் புதுக்கோட்டை வந்து, அறைகளைக் காலி செய்து கொண்டு, திருச்சியை நோக்கிக் கிளம்பினோம். திருச்சிராப்பள்ளியின் மா.இராசமணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் இயக்குனர் டாக்டர். இரா. கலைக்கோவன் அவர்களின் இல்லத்திற்கு சென்று இறங்கினோம். அவரும் எங்களை ஆர்வத்துடன் வரவேற்றார். அவருடன் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றிப் பேசினோம். நாங்கள் அவரிடம் கேட்ட சில கேள்விகள் பின்வருமாறு:
டாக்டர். கலைக்கோவனிடம் கேட்கப்பட்ட கேள்விகள்:
1. தஞ்சைக் கோயிலின் விமானம் ஒரே கல்லால் னது அல்ல என்பதை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?
சில வருடங்களுக்கு முன், வரலாறு பத்திரிகைக்காக, பன்னிரண்டு நபர்கள் கொண்ட எங்கள் குழு, தஞ்சை பெரிய கோயிலை ஆய்வு செய்யச் சென்றிருந்தது. தஞ்சைப் பெரிய கோயிலை பன்னிரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு, ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதியை ஆய்வு செய்யக் கிளம்பினோம். அப்படிப் பிரித்ததில், தஞ்சை விமானத்தின் ஆய்வு, எங்கள் குழுவில் புதிதாகச் சேர்ந்த ஒருவருக்குச் சென்று சேர்ந்தது. விமானத்தில் அவர் பார்க்கும் கல்வெட்டுக்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு அவரது ஆய்வுக் கட்டுரையை எழுத வேண்டும் என்று நான் அவருக்குச் சொன்னேன். எனக்கு உடல் நிலை சரியில்லாததால், அவரையே விமானத்தின் மீதும் ஏறச் சொன்னேன். ஒரு பெரிய கயிற்றின் உதவியைக் கொண்டு அவரும் மேலே ஏறினார் (ASIயைச் சேர்ந்தவர்கள் அப்படித்தான் ஏறுவது வழக்கம்)- ஆனால் அவரால் அங்கிருந்த கல்வெட்டுக்களை இன்னதென்று இனங்காண முடியவில்லை. வேறு வழியில்லாததால், நானே விமானத்தின் மீது ஏறினேன். அங்கே, பிரம்மரந்திரக் கல்லின் மீது சில சிமெண்ட் பூச்சுக்களைக் கண்டேன். ASIக்காக அங்கே வேலை செய்து கொண்டிருந்த கொத்தனர் ஒருவரை அழைத்து, அந்தப் பூச்சுக்களைப் பற்றிக் கேட்டேன். விமானம் ஏழெட்டுக் கற்களால் ஆனது என்றும், அதை சுதையால்(சுதை என்பது சுண்ணாம்பும் மணலும் கலந்த கலவை) பூசி மூடியிருந்தனர் என்றும் அவர் கூறினார்.
என்னால் இதை நம்ப முடியவில்லை. நீலகண்ட ஸாஸ்திரிகளும், மற்ற சரித்திர நிபுணர்களும் விமானம் ஒரே கல்லால் ஆனது என்று கூறியிருந்தனர்.
இதற்குப் பிறகு, 1930க்களில் வெளிவந்திருந்த ASIயின் வெளியீடுகளையும், மற்ற சரித்திர சிரியர்களின் புத்தகங்களையும் படித்துப் பார்த்தேன். அவர்கள் எல்லோருமே விமானமும் பிரம்மரந்திரக் கல்லும் ஒரே கல்லால் ஆனது அல்ல என்றே குறிப்பிட்டிருந்தனர். உண்மையில், தஞ்சைக் கோயிலின் விமானத்தின் கற்கள் ஆரஞ்சுச் சுளைகளைப் போல் அடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். விமானத்தின் மீது சுதைப் பூச்சு இருப்பதைக் காணலாம். விமானம் ஒரே கல்லால் ஆனது என்றால், வெளியிலே சுதைப் பூச்சு எதற்கு?
விமானம் ஒரே கல்லால் ஆனது இல்லை என்பதால், சாரங்களுக்கும் தேவையில்லாமல் போய்விட்ட்து. சாரப்பள்ளம் என்ற கிராமத்திலிருந்து சாரங்களை உபயோகித்தார்கள் என்பதற்கும் எந்த தாரமும் இல்லை. சிறிய அளவிலான கற்களை, உருளைகளை( pulley system) உபயோகித்து மேலே ஏற்றினார்கள்.
2. பொன்னியின் செல்வன் சரித்திர நாவலில், இளவரசர் அருள்மொழி வர்மர் காவிரி நதிக்குள் விழுந்ததாகவும், பிறகு காப்பாற்றப்பட்டதாகவும் கல்கி விவரித்திருக்கிறார். இப்படியரு நிகழ்ச்சி உண்மையில் நடந்ததற்கு சரித்திர ஆதாரங்கள் ஏதேனும் இருக்கின்றனவா?
இல்லை. அந்த நிகழ்ச்சி கல்கியின் கற்பனையில் உருவானது.
3. ஏழாம் நூற்றாண்டிலேயே, பல்லவர்கள் அற்புத முகபாவங்களுடைய சிற்பங்களை வடித்தார்கள். சோழ சிற்பங்களில் அத்தகைய உயிரோட்டம் இல்லை. செதுக்கும் சிற்பிகளின் மனநிலைக்கு ஏற்றாற்போல், சிற்பங்களின் உயிரோட்டமும் அமையும் என்ற கருத்தை உண்மையென்று வைத்துக் கொள்வோம். அப்படியானால், சோழ சிற்பிகள், சிற்பங்களைச் செதுக்கும் பொழுது, அவர்களது வேலைக்கு ஏதேனும் குந்தகம் ஏற்பட்டிருக்குமோ? அவர்களது மனநிலை அவர்கள் செதுக்கிய சிற்பங்களையும் பாதித்ததா?
சிற்பிகள் வடிக்கும் சிற்பங்கள் அவர்களது மனநிலையைப் பிரதிபலிக்கும் என்பது உண்மையென்றாலும், சோழர்கள் காலத்தில் அவர்களுக்கு எந்த அசௌகரியமும் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. சிற்பங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்னும் ஆகம விதிகள் பல்லவர்களின் காலத்தில்தான் வடிவம் பெற ஆரம்பித்தன. அதனால், பல்லவர் காலத்துச் சிற்பிகள் தங்கள் விருப்பம் போல், தங்கள் கலைத் திறனையெல்லாம் காட்டிச் சிற்பங்கள் வடித்தனர். சோழர் காலத்தில், ஆகம விதிகள் முழுமை பெற்றுவிட்டன. இப்படித்தான் சிலைகளை வடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் உருவாகிவிட்டன. இதனால், தங்கள் கலைத்திறனையும் எண்ண ஓட்டங்களையும் சோழ சிற்பிகளால் அவ்வளவாக வெளிக் கொணர முடியவில்லை.
இதையெல்லாம் மீறி, தாராசுரத்திலும், கங்கை கொண்ட சோழபுரத்திலும் , அற்புதமான கற்பனைத் திறத்துடன் கூடிய அழகிய சிற்பங்களைக் காணலாமே?
4. இராஜராஜ சோழன் எப்படி இறந்தான்? இது சம்பந்தமாகக் கல்வெட்டுக்கள் ஏதேனும் இருக்கின்றனவா?
இராஜ ராஜனின் மரணம் பற்றிய விவரங்கள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்களில் இல்லை.
5. ஆதித்த கரிகாலன் கடம்பூரில்தான் கொலை செய்யப்பட்டானா? சம்புவரையர்கள் இந்தக் கால கட்டத்திற்கு இரண்டு/மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னரே தோன்றினர் என்று முன்னொரு முறை நீங்கள் கூறினீர்கள். அப்படியானால், தித்த கரிகாலனின் காலத்தில் கடம்பூர் யார் வசம் இருந்தது? உடையார் சரித்திர நாவலின்படி, ஆதித்த கரிகாலனின் இறந்த உடலில் வீர நாராயணபுரத்து ஏரியில் மிதக்கின்றது. கடம்பூர் கோட்டையின் பாதுகாப்புப் படையை மீறி ஆதித்த கரிகாலனின் உடல் எப்படி ஏரிக்கு வந்து சேர்ந்திருக்க முடியும்?
சுந்தர சோழர் மற்றும் இராஜராஜ சோழனின் காலத்தில்தான் சம்புவரையர்கள் இருக்கவில்லையே தவிர, இவர்களுக்குப் பின் வந்த சோழர்களின் காலத்தில் அவர்கள் இருந்தனர். ஆதித்த கரிகாலன் கடம்பூரில்தான் கொல்லப்பட்டான் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. வீரநாராயணபுரத்து ஏரியில் அவன் உடல் மிதந்தது என்றே வைத்துக் கொண்டாலும், சுற்றுப்பட்ட இடங்களில் எங்கு வேண்டுமானாலும் அவன் கொலை செய்யப் பட்டிருக்கலாம். இவற்றுக்கெல்லாம் எந்த ஆதாரமும் இல்லை. வெறும் ஊகம் தான்.
6. சோழர் காலத்தில் பெண் கல்வியைப் பற்றிச் சொல்ல முடியுமா?
ஆண்களுக்குச் சமமான கல்வி வாய்ப்புகள் பெண்களுக்கும் அளிக்கப்பட்டிருந்தன. இல்லாவிட்டால் இளவரசி குந்தவையைப் போன்ற அறிவாளியை நாம் எப்படிப் பெற்றிருக்க முடியும்?
7. தஞ்சைப் பெரிய கோயிலின் கோபுரத்தில், தலையில் தொப்பியுடன் வெள்ளைக்காரர் சிற்பம் (சீனாக்காரரைப் போல்) ஒன்று இருக்கிறதே...? இது பற்றி உங்கள் கருத்து என்ன?
நாயக்கர் காலத்தில் பல சிற்பங்கள் தஞ்சைக் கோயிலில் புதிதாகச் சேர்க்கப்பட்டன. நீங்கள் குறிப்பிடும் சிற்பம் இரண்டாம் சரபோஜி மன்னரின் காலத்தைச் சேர்ந்தது.
8. இராஜராஜ சோழனின் அரண்மனையைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது. அந்த அரண்மனை (அல்லது கோட்டை) இருந்திருக்கக் கூடிய இடம் எது என்று உங்களால் சொல்ல முடியுமா? நமது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஏன் அதை அகழ்வாராயக் கூடாது?
இன்றைய தேதியில், தஞ்சையில் சோழர்களின் அரண்மனை என்று எதுவும் இல்லை. அரண்மனை இருந்திருக்கக்கூடிய இடத்தில் ஒரு மேடு மட்டுமே இருக்கிறது. இக்காலத்தில் அதைச் சோழன் மேடு என்று அழைக்கிறார்கள்.
9. பாண்டியர்கள் தமிழகத்தை ஆட்சி செய்த பொழுது, ஒரே சமயத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட பாண்டிய மன்னர்கள் தென் தமிழகத்தை ஆண்டார்கள் என்பதற்குச் சரித்திரச் சான்றுகள் இருக்கின்றன. பராந்தக சுந்தர சோழரின் காலத்தில், வீர பாண்டியனோடு வேறு பாண்டிய மன்னர்கள் ஆட்சி புரிந்தார்களா?
பராந்தக சுந்தர சோழரின் காலத்தில் வீர பாண்டியன் மட்டுமே ஆட்சி புரிந்தான்.
10. ரவிதாஸனும் அவனைச் சேர்ந்தவர்களும் சேர நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் காந்தளூர்ச் சாலையில் நடந்த போரில் பங்கெடுத்துக் கொண்டார்கள் என்றும் எழுத்தாளர் பாலகுமாரன் கூறுகிறார். இதற்கு சரித்திரச் சான்றுகள் இருக்கின்றனவா? உடையார்குடியில் பொறிக்கப்பட்டுள்ளவைகளைத் தவிர, அவர்களைப் பற்றிய கல்வெட்டுக்கள வேறு எங்கேனும் உண்டா? ரவிதாசனும் அவனது கூட்டாளிகளும் சேர நாட்டைச் சேர்ந்த சோழிய பிராமணர்கள் என்ற முடிவுக்கு பாலா எப்படி வந்தார்?
அக்காலத்தில் காந்தளூர்ச் சாலையில், போர்முறைகளில்(Martial Arts) பயிற்சி கொடுக்கும் கடிகை ஒன்று இருந்திருக்கிறது. ஒரு சமயம், இராஜராஜ சோழன் அனுப்பிய தூதுவனை அந்தக் கடிகையைச் சேர்ந்தவர்கள் அவமதித்துவிட்டதால், மன்னன் அவர்களுடன் போர் தொடுத்து, கடிகையைத் தரை மட்டமாக்கினான். இந்தச் சம்பவத்துடன், ரவிதாசனுக்கோ, ஆதித்த கரிகாலனின் கொலைக்கோ எந்தத் தொடர்பும் இல்லை.
11. இராஜராஜனின் காலத்தில், தஞ்சைப் பெரிய கோயிலின் விமானம் முழுதும் தங்கத்தால் வேயப்பட்டிருந்தது என்று திரு. குடவாயில் பாலசுப்ரமணியம் கூறியுள்ளார். இது உண்மையா?
இல்லை. விமானம் எந்தக் காலத்திலும் தங்கத்தால் வேயப்படவில்லை.
12. தஞ்சைப் பெரிய கோயிலின் மேல்தளத்தின் உள்சுற்றில் (மூலஸ்தானத்துக்கு மேல்புறம்), எண்பத்திரண்டு பரதநாட்டியக் கரணங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. நூற்றியெட்டுக் கரணங்களையும் ஏன் முழுவதுமாகச் செதுக்கவில்லை? முழுமையடையாத கோயிலில்,ஏன் வழிபாடு தொடங்கப்பட்டது? இதற்கும் இராஜராஜனின் மரணத்திற்கும் தொடர்பு உண்டு என்கிறார்களே, உண்மையா?
இராஜராஜனின் மரணத்தினால்தான் கோயில் வேலைகள் நின்றுவிட்டன. பரதநாட்டியக் கரணங்கள் மட்டுமல்ல, பல ஓவியங்களும் சிற்பங்களும் கூட முடிக்கப்படவில்லை. என்ன காரணத்தினாலோ, இராஜேந்திர சோழன் அவற்றை முடிப்பதில் தீவிரம் காட்டவில்லை.
13. சோழ அமைச்சர் அநிருத்தப் பிரம்மராயர், மூன்று அரசர்களுக்கு அமைச்சராகப் பதவி வகித்தது எப்படி? சுந்தர சோழர் காலத்தில் வயதில் மிக இளையவராக இருந்தாரோ? அப்படியானால், அவ்வளவு இளம் வயதில், அமைச்சர் பதவியை அவரால் எவ்வாறு அடைய முடிந்தது?
பொன்னியின் செல்வனின் அநிருத்தப் பிரம்மராயரும், உடையார் சரித்திர நாவலின் கிருஷ்ணன் இராமனும் வேறு வேறு மனிதர்கள். அநிருத்தர், சுந்தர சோழரின் அமைச்சராகப் பதவி வகித்தார். கிருஷ்ணன் இராமன், இராஜராஜன் மற்றும் இராஜேந்திரன் காலத்தில் தளபதியாகப் பதவி வகித்தவர். மூன்று அரசர்களுக்குத் தொடர்ந்து அமைச்சராகப் பதவி வகித்த ஒரே மனிதர் ஒட்டக்கூத்தர் மட்டுமே.
14. அருள்மொழி வர்மர், உத்தம சோழர் உயிரோடிருக்கும் பொழுதே அரியணை ஏறிவிட்டார் என்று உடையார் நாவலில் எழுத்தாலர் பாலகுமாரன் குறிப்பிட்டுள்ளார். இது உண்மையா? அப்படியானால், தன் சிற்றப்பா உத்தம சோழர், அரசாட்சியில் சை கொண்டிரூகும் காலம் வரையில், தான் அரியனை ஏறப்போவதில்லை என்று அருள்மொழிவர்மர் கூறியதாகக் குறிப்பிடும் திருவாலங்காட்டுச் செப்பேடுகளின் கூற்றை இது மறுக்கிறதே? உத்தம சோழரின் காலத்திற்குப் பிறகுதான் அருள்மொழி வர்மர் அரியணை ஏறினார் என்று நம்பப்படுகிறதே? இது பற்றி என்ன சொல்கிறீர்கள்?
இது பற்றிய விவரங்கள் எந்தக் கல்வெட்டிலும் குறிப்பிடப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. பொதுவாகக், கல்வெட்டுக்களைப் பொறுத்தவரை, உத்தம சோழரின் காலம் இருண்ட காலமாகவே கருதப்படுகிறது. வெகு சில கல்வெட்டுக்களே அவர் காலத்திலிருந்து நமக்கு மிஞ்சியிருப்பதால், இராஜராஜன் பதவியேற்ற போது, உத்தம சோழர் இறந்துவிட்டாரா, அல்லது பதவியிறக்கம் செய்யப்பட்டாரா என்பது தெரியவில்லை.
15. ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களைப் பற்றி உடையார்குடிக் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. ஆனால், இளவரசன் எப்படி இறந்தான் என்பதை விவரிக்கும் குறிப்புக்கள்/கல்வெட்டுக்கள் ஏதேனும் இருக்கின்றனவா?
உடையார்குடியில் கண்டெடுத்தவை தவிர, இது விஷயமாக வேறு கல்வெட்டுக்கள் எதுவும் இது வரை கண்டெடுக்கப்படவிலை. ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களின் பெயர்களும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையும் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன.
வடக்கிருத்தல், இராஜகேசரி/பரகேசரி, என்று இன்னும் பல விஷயங்களைப் பற்றி, பல மணி நேரம் அவரிடம் பேச வேண்டுமென்று சைதான். னால், இரவு பத்து மணிக்கு Rockfort Express எங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் என்பதால், அவரது இல்லத்தில் அறுசுவை உணவு அருந்திவிட்டுக் கிளம்பினோம்.
ஒன்பது முப்பதுக்கு திருச்சி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து இறங்கினோம். அங்கிருந்தே பஸ் பிடித்துச் செல்வதாகச் சொன்ன ராஜாவுக்கும், திரு. சீதாராமனுக்கும் விடை கொடுத்து அனுப்பிவிட்டு, ரயிலேறினோம். மறுநாள் காலை நாலரை மணி சுமாருக்கு சிங்காரச் சென்னை வந்து சேர்ந்தோம்.
*************************