|
Sunday, May 02, 2004
A Q and A Session with Dr. R. Kalaikkovan
For picture version of this post, go here : Part 1 and Part 2
ஆவுடையார் கோயிலிலிருந்து கிளம்பிய நாங்கள், மீண்டும் புதுக்கோட்டை வந்து, அறைகளைக் காலி செய்து கொண்டு, திருச்சியை நோக்கிக் கிளம்பினோம். திருச்சிராப்பள்ளியின் ‘மா.இராசமணிக்கனார் வரலாற்றாய்வு மைய’த்தின் இயக்குனர் டாக்டர். இரா. கலைக்கோவன் அவர்களின் இல்லத்திற்கு சென்று இறங்கினோம். அவரும் எங்களை ஆர்வத்துடன் வரவேற்றார். அவருடன் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றிப் பேசினோம். நாங்கள் அவரிடம் கேட்ட சில கேள்விகள் பின்வருமாறு:
டாக்டர். கலைக்கோவனிடம் கேட்கப்பட்ட கேள்விகள்:
1. தஞ்சைக் கோயிலின் விமானம் ஒரே கல்லால் னது அல்ல என்பதை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?
சில வருடங்களுக்கு முன், ‘வரலாறு’ பத்திரிகைக்காக, பன்னிரண்டு நபர்கள் கொண்ட எங்கள் குழு, தஞ்சை பெரிய கோயிலை ஆய்வு செய்யச் சென்றிருந்தது. தஞ்சைப் பெரிய கோயிலை பன்னிரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு, ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதியை ஆய்வு செய்யக் கிளம்பினோம். அப்படிப் பிரித்ததில், தஞ்சை விமானத்தின் ஆய்வு, எங்கள் குழுவில் புதிதாகச் சேர்ந்த ஒருவருக்குச் சென்று சேர்ந்தது. விமானத்தில் அவர் பார்க்கும் கல்வெட்டுக்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு அவரது ஆய்வுக் கட்டுரையை எழுத வேண்டும் என்று நான் அவருக்குச் சொன்னேன். எனக்கு உடல் நிலை சரியில்லாததால், அவரையே விமானத்தின் மீதும் ஏறச் சொன்னேன். ஒரு பெரிய கயிற்றின் உதவியைக் கொண்டு அவரும் மேலே ஏறினார் (ASIயைச் சேர்ந்தவர்கள் அப்படித்தான் ஏறுவது வழக்கம்)- ஆனால் அவரால் அங்கிருந்த கல்வெட்டுக்களை இன்னதென்று இனங்காண முடியவில்லை. வேறு வழியில்லாததால், நானே விமானத்தின் மீது ஏறினேன். அங்கே, பிரம்மரந்திரக் கல்லின் மீது சில சிமெண்ட் பூச்சுக்களைக் கண்டேன். ASIக்காக அங்கே வேலை செய்து கொண்டிருந்த கொத்தனர் ஒருவரை அழைத்து, அந்தப் பூச்சுக்களைப் பற்றிக் கேட்டேன். ‘விமானம் ஏழெட்டுக் கற்களால் ஆனது’ என்றும், ‘அதை ‘சுதை’யால்(சுதை என்பது சுண்ணாம்பும் மணலும் கலந்த கலவை) பூசி மூடியிருந்தனர்’ என்றும் அவர் கூறினார்.
என்னால் இதை நம்ப முடியவில்லை. நீலகண்ட ஸாஸ்திரிகளும், மற்ற சரித்திர நிபுணர்களும் ‘விமானம் ஒரே கல்லால் ஆனது’ என்று கூறியிருந்தனர்.
இதற்குப் பிறகு, 1930க்களில் வெளிவந்திருந்த ASIயின் வெளியீடுகளையும், மற்ற சரித்திர சிரியர்களின் புத்தகங்களையும் படித்துப் பார்த்தேன். அவர்கள் எல்லோருமே ‘விமானமும் பிரம்மரந்திரக் கல்லும் ஒரே கல்லால் ஆனது அல்ல’ என்றே குறிப்பிட்டிருந்தனர். உண்மையில், தஞ்சைக் கோயிலின் விமானத்தின் கற்கள் ஆரஞ்சுச் சுளைகளைப் போல் அடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். விமானத்தின் மீது சுதைப் பூச்சு இருப்பதைக் காணலாம். விமானம் ஒரே கல்லால் ஆனது என்றால், வெளியிலே சுதைப் பூச்சு எதற்கு?
விமானம் ஒரே கல்லால் ஆனது இல்லை என்பதால், சாரங்களுக்கும் தேவையில்லாமல் போய்விட்ட்து. ‘சாரப்பள்ளம்’ என்ற கிராமத்திலிருந்து சாரங்களை உபயோகித்தார்கள் என்பதற்கும் எந்த தாரமும் இல்லை. சிறிய அளவிலான கற்களை, உருளைகளை( pulley system) உபயோகித்து மேலே ஏற்றினார்கள்.
2. ‘பொன்னியின் செல்வன்’ சரித்திர நாவலில், இளவரசர் அருள்மொழி வர்மர் காவிரி நதிக்குள் விழுந்ததாகவும், பிறகு காப்பாற்றப்பட்டதாகவும் கல்கி விவரித்திருக்கிறார். இப்படியரு நிகழ்ச்சி உண்மையில் நடந்ததற்கு சரித்திர ஆதாரங்கள் ஏதேனும் இருக்கின்றனவா?
இல்லை. அந்த நிகழ்ச்சி கல்கியின் கற்பனையில் உருவானது.
3. ஏழாம் நூற்றாண்டிலேயே, பல்லவர்கள் அற்புத முகபாவங்களுடைய சிற்பங்களை வடித்தார்கள். சோழ சிற்பங்களில் அத்தகைய உயிரோட்டம் இல்லை. செதுக்கும் சிற்பிகளின் மனநிலைக்கு ஏற்றாற்போல், சிற்பங்களின் உயிரோட்டமும் அமையும் என்ற கருத்தை உண்மையென்று வைத்துக் கொள்வோம். அப்படியானால், சோழ சிற்பிகள், சிற்பங்களைச் செதுக்கும் பொழுது, அவர்களது வேலைக்கு ஏதேனும் குந்தகம் ஏற்பட்டிருக்குமோ? அவர்களது மனநிலை அவர்கள் செதுக்கிய சிற்பங்களையும் பாதித்ததா?
சிற்பிகள் வடிக்கும் சிற்பங்கள் அவர்களது மனநிலையைப் பிரதிபலிக்கும் என்பது உண்மையென்றாலும், சோழர்கள் காலத்தில் அவர்களுக்கு எந்த அசௌகரியமும் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. ‘சிற்பங்கள்’ இப்படித்தான் இருக்க வேண்டும் என்னும் ’ஆகம’ விதிகள் பல்லவர்களின் காலத்தில்தான் வடிவம் பெற ஆரம்பித்தன. அதனால், பல்லவர் காலத்துச் சிற்பிகள் தங்கள் விருப்பம் போல், தங்கள் கலைத் திறனையெல்லாம் காட்டிச் சிற்பங்கள் வடித்தனர். சோழர் காலத்தில், ஆகம விதிகள் முழுமை பெற்றுவிட்டன. ‘இப்படித்தான் சிலைகளை வடிக்க வேண்டும்’ என்ற கட்டுப்பாடுகள் உருவாகிவிட்டன. இதனால், தங்கள் கலைத்திறனையும் எண்ண ஓட்டங்களையும் சோழ சிற்பிகளால் அவ்வளவாக வெளிக் கொணர முடியவில்லை.
இதையெல்லாம் மீறி, ‘தாராசுரத்’திலும், ‘கங்கை கொண்ட சோழபுரத்’திலும் , அற்புதமான கற்பனைத் திறத்துடன் கூடிய அழகிய சிற்பங்களைக் காணலாமே?
4. இராஜராஜ சோழன் எப்படி இறந்தான்? இது சம்பந்தமாகக் கல்வெட்டுக்கள் ஏதேனும் இருக்கின்றனவா?
இராஜ ராஜனின் மரணம் பற்றிய விவரங்கள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்களில் இல்லை.
5. ஆதித்த கரிகாலன் கடம்பூரில்தான் கொலை செய்யப்பட்டானா? ‘சம்புவரையர்கள் இந்தக் கால கட்டத்திற்கு இரண்டு/மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னரே தோன்றினர்’ என்று முன்னொரு முறை நீங்கள் கூறினீர்கள். அப்படியானால், தித்த கரிகாலனின் காலத்தில் கடம்பூர் யார் வசம் இருந்தது? ‘உடையார்’ சரித்திர நாவலின்படி, ஆதித்த கரிகாலனின் இறந்த உடலில் வீர நாராயணபுரத்து ஏரியில் மிதக்கின்றது. கடம்பூர் கோட்டையின் பாதுகாப்புப் படையை மீறி ஆதித்த கரிகாலனின் உடல் எப்படி ஏரிக்கு வந்து சேர்ந்திருக்க முடியும்?
சுந்தர சோழர் மற்றும் இராஜராஜ சோழனின் காலத்தில்தான் சம்புவரையர்கள் இருக்கவில்லையே தவிர, இவர்களுக்குப் பின் வந்த சோழர்களின் காலத்தில் அவர்கள் இருந்தனர். ஆதித்த கரிகாலன் கடம்பூரில்தான் கொல்லப்பட்டான் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. வீரநாராயணபுரத்து ஏரியில் அவன் உடல் மிதந்தது என்றே வைத்துக் கொண்டாலும், சுற்றுப்பட்ட இடங்களில் எங்கு வேண்டுமானாலும் அவன் கொலை செய்யப் பட்டிருக்கலாம். இவற்றுக்கெல்லாம் எந்த ஆதாரமும் இல்லை. வெறும் ஊகம் தான்.
6. சோழர் காலத்தில் பெண் கல்வியைப் பற்றிச் சொல்ல முடியுமா?
ஆண்களுக்குச் சமமான கல்வி வாய்ப்புகள் பெண்களுக்கும் அளிக்கப்பட்டிருந்தன. இல்லாவிட்டால் இளவரசி குந்தவையைப் போன்ற அறிவாளியை நாம் எப்படிப் பெற்றிருக்க முடியும்?
7. தஞ்சைப் பெரிய கோயிலின் கோபுரத்தில், தலையில் தொப்பியுடன் வெள்ளைக்காரர் சிற்பம் (சீனாக்காரரைப் போல்) ஒன்று இருக்கிறதே...? இது பற்றி உங்கள் கருத்து என்ன?
நாயக்கர் காலத்தில் பல சிற்பங்கள் தஞ்சைக் கோயிலில் புதிதாகச் சேர்க்கப்பட்டன. நீங்கள் குறிப்பிடும் சிற்பம் இரண்டாம் சரபோஜி மன்னரின் காலத்தைச் சேர்ந்தது.
8. இராஜராஜ சோழனின் அரண்மனையைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது. அந்த அரண்மனை (அல்லது கோட்டை) இருந்திருக்கக் கூடிய இடம் எது என்று உங்களால் சொல்ல முடியுமா? நமது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஏன் அதை அகழ்வாராயக் கூடாது?
இன்றைய தேதியில், தஞ்சையில் சோழர்களின் அரண்மனை என்று எதுவும் இல்லை. அரண்மனை இருந்திருக்கக்கூடிய இடத்தில் ஒரு மேடு மட்டுமே இருக்கிறது. இக்காலத்தில் அதைச் ‘சோழன் மேடு’ என்று அழைக்கிறார்கள்.
9. பாண்டியர்கள் தமிழகத்தை ஆட்சி செய்த பொழுது, ஒரே சமயத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட பாண்டிய மன்னர்கள் தென் தமிழகத்தை ஆண்டார்கள் என்பதற்குச் சரித்திரச் சான்றுகள் இருக்கின்றன. பராந்தக சுந்தர சோழரின் காலத்தில், வீர பாண்டியனோடு வேறு பாண்டிய மன்னர்கள் ஆட்சி புரிந்தார்களா?
பராந்தக சுந்தர சோழரின் காலத்தில் வீர பாண்டியன் மட்டுமே ஆட்சி புரிந்தான்.
10. ‘ரவிதாஸனும் அவனைச் சேர்ந்தவர்களும் சேர நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் காந்தளூர்ச் சாலையில் நடந்த போரில் பங்கெடுத்துக் கொண்டார்கள்’ என்றும் எழுத்தாளர் பாலகுமாரன் கூறுகிறார். இதற்கு சரித்திரச் சான்றுகள் இருக்கின்றனவா? ‘உடையார்குடி’யில் பொறிக்கப்பட்டுள்ளவைகளைத் தவிர, அவர்களைப் பற்றிய கல்வெட்டுக்கள வேறு எங்கேனும் உண்டா? ‘ரவிதாசனும் அவனது கூட்டாளிகளும் சேர நாட்டைச் சேர்ந்த சோழிய பிராமணர்கள் என்ற முடிவுக்கு பாலா எப்படி வந்தார்?
அக்காலத்தில் காந்தளூர்ச் சாலையில், போர்முறைகளில்(Martial Arts) பயிற்சி கொடுக்கும் கடிகை ஒன்று இருந்திருக்கிறது. ஒரு சமயம், இராஜராஜ சோழன் அனுப்பிய தூதுவனை அந்தக் கடிகையைச் சேர்ந்தவர்கள் அவமதித்துவிட்டதால், மன்னன் அவர்களுடன் போர் தொடுத்து, கடிகையைத் தரை மட்டமாக்கினான். இந்தச் சம்பவத்துடன், ரவிதாசனுக்கோ, ஆதித்த கரிகாலனின் கொலைக்கோ எந்தத் தொடர்பும் இல்லை.
11. இராஜராஜனின் காலத்தில், தஞ்சைப் பெரிய கோயிலின் விமானம் முழுதும் தங்கத்தால் வேயப்பட்டிருந்தது என்று திரு. குடவாயில் பாலசுப்ரமணியம் கூறியுள்ளார். இது உண்மையா?
இல்லை. விமானம் எந்தக் காலத்திலும் தங்கத்தால் வேயப்படவில்லை.
12. தஞ்சைப் பெரிய கோயிலின் மேல்தளத்தின் உள்சுற்றில் (மூலஸ்தானத்துக்கு மேல்புறம்), எண்பத்திரண்டு பரதநாட்டியக் கரணங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. நூற்றியெட்டுக் கரணங்களையும் ஏன் முழுவதுமாகச் செதுக்கவில்லை? முழுமையடையாத கோயிலில்,ஏன் வழிபாடு தொடங்கப்பட்டது? இதற்கும் இராஜராஜனின் மரணத்திற்கும் தொடர்பு உண்டு என்கிறார்களே, உண்மையா?
இராஜராஜனின் மரணத்தினால்தான் கோயில் வேலைகள் நின்றுவிட்டன. பரதநாட்டியக் கரணங்கள் மட்டுமல்ல, பல ஓவியங்களும் சிற்பங்களும் கூட முடிக்கப்படவில்லை. என்ன காரணத்தினாலோ, இராஜேந்திர சோழன் அவற்றை முடிப்பதில் தீவிரம் காட்டவில்லை.
13. சோழ அமைச்சர் அநிருத்தப் பிரம்மராயர், மூன்று அரசர்களுக்கு அமைச்சராகப் பதவி வகித்தது எப்படி? சுந்தர சோழர் காலத்தில் வயதில் மிக இளையவராக இருந்தாரோ? அப்படியானால், அவ்வளவு இளம் வயதில், அமைச்சர் பதவியை அவரால் எவ்வாறு அடைய முடிந்தது?
‘பொன்னியின் செல்வ’னின் அநிருத்தப் பிரம்மராயரும், ‘உடையார்’ சரித்திர நாவலின் ‘கிருஷ்ணன் இராம’னும் வேறு வேறு மனிதர்கள். அநிருத்தர், சுந்தர சோழரின் அமைச்சராகப் பதவி வகித்தார். கிருஷ்ணன் இராமன், இராஜராஜன் மற்றும் இராஜேந்திரன் காலத்தில் தளபதியாகப் பதவி வகித்தவர். மூன்று அரசர்களுக்குத் தொடர்ந்து அமைச்சராகப் பதவி வகித்த ஒரே மனிதர் ஒட்டக்கூத்தர் மட்டுமே.
14. ‘அருள்மொழி வர்மர், உத்தம சோழர் உயிரோடிருக்கும் பொழுதே அரியணை ஏறிவிட்டார்’ என்று ‘உடையார்’ நாவலில் எழுத்தாலர் பாலகுமாரன் குறிப்பிட்டுள்ளார். இது உண்மையா? அப்படியானால், தன் சிற்றப்பா உத்தம சோழர், அரசாட்சியில் சை கொண்டிரூகும் காலம் வரையில், தான் அரியனை ஏறப்போவதில்லை’ என்று அருள்மொழிவர்மர் கூறியதாகக் குறிப்பிடும் ‘திருவாலங்காட்டுச் செப்பேடு’களின் கூற்றை இது மறுக்கிறதே? உத்தம சோழரின் காலத்திற்குப் பிறகுதான் அருள்மொழி வர்மர் அரியணை ஏறினார் என்று நம்பப்படுகிறதே? இது பற்றி என்ன சொல்கிறீர்கள்?
இது பற்றிய விவரங்கள் எந்தக் கல்வெட்டிலும் குறிப்பிடப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. பொதுவாகக், கல்வெட்டுக்களைப் பொறுத்தவரை, உத்தம சோழரின் காலம் இருண்ட காலமாகவே கருதப்படுகிறது. வெகு சில கல்வெட்டுக்களே அவர் காலத்திலிருந்து நமக்கு மிஞ்சியிருப்பதால், இராஜராஜன் பதவியேற்ற போது, உத்தம சோழர் இறந்துவிட்டாரா, அல்லது பதவியிறக்கம் செய்யப்பட்டாரா என்பது தெரியவில்லை.
15. ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களைப் பற்றி ‘உடையார்குடி’க் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. ஆனால், இளவரசன் எப்படி இறந்தான் என்பதை விவரிக்கும் குறிப்புக்கள்/கல்வெட்டுக்கள் ஏதேனும் இருக்கின்றனவா?
‘உடையார்குடி’யில் கண்டெடுத்தவை தவிர, இது விஷயமாக வேறு கல்வெட்டுக்கள் எதுவும் இது வரை கண்டெடுக்கப்படவிலை. ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களின் பெயர்களும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையும் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன.
‘வடக்கிருத்தல்’, இராஜகேசரி/பரகேசரி, என்று இன்னும் பல விஷயங்களைப் பற்றி, பல மணி நேரம் அவரிடம் பேச வேண்டுமென்று சைதான். னால், இரவு பத்து மணிக்கு Rockfort Express எங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் என்பதால், அவரது இல்லத்தில் அறுசுவை உணவு அருந்திவிட்டுக் கிளம்பினோம்.
ஒன்பது முப்பதுக்கு திருச்சி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து இறங்கினோம். அங்கிருந்தே பஸ் பிடித்துச் செல்வதாகச் சொன்ன ராஜாவுக்கும், திரு. சீதாராமனுக்கும் விடை கொடுத்து அனுப்பிவிட்டு, ரயிலேறினோம். மறுநாள் காலை நாலரை மணி சுமாருக்கு சிங்காரச் சென்னை வந்து சேர்ந்தோம்.
*************************
Posted at 06:59 am by pavithra
Wednesday, April 07, 2004
ஆவுடையார்கோயில்
For a picture version of this post, go here.
திருமயத்தை விட்டுக் கிளம்பி, நாங்கள் ‘திருப்பெருந்துறை’ என்னும் ‘ஆவுடையார் கோயிலை’ வந்து அடையும் பொழுது மதியம் மணி பன்னிரண்டைத் தாண்டியிருந்தது.
இதுவரை நாங்கள் பார்த்து வந்த கோயில்களைப் போல் அல்லாமல், ஆவுடையார் கோயில் சாலை முழுக்கத் தண்ணீருடனும், வீதி முழுதும் மக்களுடனும், திருவிழாக்கோலத்துடன் எங்களை வரவேற்றது. அன்று ஏதோ விசேஷம் போலும்- எங்கே பார்த்தாலும் பக்திப் பெருக்குடன் மக்கள் வெள்ளம். அவ்வப்போது லாரி லாரியாகத் தண்ணீரை நிரப்பி வீதி முழுதும் இரைத்துவிட்டுப் போனார்கள். ‘சள சள’வென்று சேற்றில் நடந்து ஆவுடையார் கோயிலை நெருங்கினோம். கூரை முழுதும் தோரணங்கள், தரையெங்கும் கிழிந்த வாழை இலைகள், ப்ளாஸ்டிக் குப்பைகள். இங்கும் அங்கும் ஓயாமல் நடமாடும் மனிதர்கள், அழும் குழந்தைகள்.
இவற்றாலெல்லாம், முன் மண்டபத்தின் ஆளுயரச் சிலைகளின் கவர்ச்சியையோ, ஆவுடையார் கோயிலின் பெயர் பெற்ற கொடுங்கைகளின் வனப்பையோ சிறிதும் குறைக்க முடியவில்லை.
முன் மண்டபம் வரையிலும்தான் இந்த ஜன வெள்ளம். அதைத் தாண்டிய பின் கோயில் அமைதியான அழகுடன் விளங்கியது.
சோழநாட்டின் தெற்கு எல்லையாகவும், பாண்டிய நாட்டின் கிழக்கு எல்லையாகவும், தோப்பும் சோலையுமாகச் செழித்திருக்கும் ஊர் திருப்பெருந்துறை. ஏறக்குறைய ஆயிரத்து இருநூறு வருடங்களுக்கு முன்னால்...
பாண்டிய நாட்டை அரிமர்த்தன பாண்டிய மன்னன் ண்டு கொண்டிருந்த பொழுது, தென்னவன் பிரம்மராயன் என்பவர் அம்மன்னனின் அமைச்சராகப் பதவி வகித்து வந்தார். பாண்டியர் குதிரைப் படைக்குக் குதிரைகள் வாங்கும் பொருட்டு, அரச ஆணையை ஏற்று, வேண்டிய பொன்னுடன், கிழக்குக் கடற்கரைக்குப் பயணமானார் அமைச்சர்.
குதிரைகளைப் பார்வையிடுவதற்காகத் திருப்பெருந்துறை வழியே சென்று கொண்டிருந்த அமைச்சர், குருந்த மரத்தடியிலே, சிவபெருமானே குருவாக அமர்ந்து உபதேசம் செய்யும் தேவகானம் காதில் விழ, ‘சட்’டென்று நின்றார். பரவசத்துடன் கேட்கத்தொடங்கினார். அந்த நிமிடமே அவருக்குத் தன் பதவி மறந்துவிட்டது. தான் வந்த காரியம் மறந்துவிட்டது. கையிலிருந்த பொன்னை வைத்துக் கொண்டு, திருப்பெருந்துறையில் கோயில் கட்டுவதற்கான ஆயத்தங்களில் இறங்கினார்.
‘குதிரை வாங்கச் சென்ற அமைச்சர் பொன்னைக் கொட்டி கோயில் கட்டுகிறார்’ என்ற செய்தி கேட்டு எந்த மன்னன் சும்மாயிருப்பான்? தென்னவன் பிரம்மராயரைக் கைது செய்து சிறையில் அடைத்தான் பாண்டிய மன்னன். ‘இந்த நிமிடமே குதிரைகள் வேண்டும்’ என்று த்திரத்துடன் கட்டளை பிறப்பித்தான். அமைச்சர் சிவபெருமானை மனதிற்குள் தியானித்தார்.
அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. காட்டிலிருந்த நரிக்கூட்டங்கள் குதிரைகளாக உருவம் பெற்றன. அன்று இரவே, அட்டகாசமான அரேபியக் குதிரைகள் அரண்மனையை வந்து அடைந்தன. குதூகலமடைந்த மன்னன் அமைச்சரை விடுவித்தான். மறுநாள் காலையில், குதிரைகள் அனைத்தும் மீண்டும் நரிகளாகியிருந்தன. கடுங்கோபமடைந்த மன்னன் அமைச்சரை மேலும் சித்திரவதைக்குள்ளாக்கினான். இறையருளால் அவற்றை அமைச்சர் வெல்ல, ‘இவர் சாதாரண மனிதரல்ல’ என்பது மன்னனுக்கு உறைத்தது.
“நரியைக் குதிரைப் பரியாக்கி
ஞாலமெல்லாம் நிகழ்வித்து
பெரிய தென்னன் மதுரை யெல்லாம்
பிச்ச தேற்றும் பெருந்துறையாய்...”
அமைச்சர் நன்றிப்பெருக்குடன் இறைவனைத் துதித்துப் பாடிய பாடல்கள் அனைத்துமே மாணிக்கத்தைப் போல் சிறப்புப் பெற்றிருந்ததால்- ‘மாணிக்க வாசகர்’ என்று பெயர் பெற்றார். இதுதான் தலவரலாறு.
அப்படிப்பட்ட மாணிக்க வாசகர் கட்டிய கோயில்தான் ‘ஆவுடையார் கோயில்’. பிற்காலத்தில் பல மன்னர்கள் கோபுரங்களையும், மண்டபங்களையும் சேர்த்துக் கட்டினார்கள்.
ஆவுடையார் கோயிலின் தனிச்சிறப்பு அதன் கொடுங்கைகள்தான். (கோயில் ஸ்தபதிகள் ‘ஆவுடையார் கோயில் கொடுங்கை நீங்கலாகச் செய்து தருவோம்’ என்று சொல்லித்தான் கோயில் பணி செய்யவே ஒப்புக்கொள்வார்களாம். இந்த வழக்கம் இன்று வரை தொடர்கிறது என்றும் சொல்கிறார்கள்). மிக மெல்லிய- ஓர் அங்குல கனமேயான தகடுகளாகச் பெரிய கற்களைச் செதுக்கி, அவற்றைத் தாங்க உத்திரங்களையும் செதுக்கிப் பொருத்தியுள்ளனர்.
இந்தக் கோயிலின் இன்னொரு சிறப்பு- கற்சங்கிலிகள். முழுதும் கல்லினாலேயே செதுக்கப்பட்ட கல் வலையங்கள் ஒன்றிற்குள் ஒன்றாகக் கோர்க்கப்பட்டு, மண்டபத்தின் உச்சியிலிருந்து தொங்குகின்றன. எப்படிப்பட்ட அதிசயம் இது!
ஆவுடையார் கோயிலில், சிவபெருமான் ‘ஆத்மநாதராக’ எழுந்தருளியிருக்கிறார். இதனால், கருவறையில் லிங்க வடிவம் கிடையாது. அருவமாக இறைவன் காட்சி தருகிறார். கருவறையில் அமைந்திருக்கும் மேடையே ஆவுடையாராகக் கருதப்படுகிறது. இதனால்தான் கோயிலுக்கு ‘ஆவுடையார் கோயில்’ என்ற பெயரும் ஏற்பட்டது.
மாணிக்கவாசகருக்குத் தனி சன்னதி இருப்பதும் இந்தக் கோயிலில்தான். அவர் தீட்சை பெற்றதாகக் கருதப்படும் மரமும், சிற்பமாக செதுக்கப்பட்டிருக்கிறது. ஒரு மண்டபத்தின் தூணில், மாணிக்க வாசகர் அமைச்சராக, பட்டுப் பீதாம்பரங்கள் உடுத்தி, அமர்க்களமாகக் காட்சி தருகிறார். அருகிலிருக்கும் தூண் ஒன்றில், இடுப்பில் ஒற்றை ஆடை தரித்த துறவியாகத் தெரிகிறார்.
இந்தத் தலமே, மாணிக்க வாசகரின் ‘திருவாசகம்’ தோன்றிய தலம் என்று கூறப்படுகிறது.
ஆவுடையார் கோயிலின் கொடுங்கைகளை ரசித்துவிட்டு, நீண்ட பிரகாரங்களை ஒரு சுற்று சுற்றிவிட்டு, சற்று நேரம் முன் மண்டபத்தில் உட்கார்ந்து குதிரைச் சிற்பங்களை பார்த்து அனுபவித்துக் கொண்டிருந்தோம். கோயிலின் முன் வாயிலில் பூஜை அமர்க்களங்கள் முடிந்திருந்தன. சப்தங்கள் அடங்கி, அமைதி சூழ ஆரம்பித்தது.
மதியம் என்றாலும், கதவுகளைச் சார்த்திக் கொள்ளாமல் எங்களை வரவேற்ற த்மநாதரை இன்னொரு முறை வணங்கிவிட்டு, ஆவுடையார் கோயிலுக்கு விடை கொடுத்தோம்.
Posted at 07:19 am by pavithra
Sunday, March 21, 2004
Day 2 (Sunday, June 8, 2003)
திருமயம்
குறிப்பு: இந்தக் கட்டுரை 'திசைகள்' இணைய இதழில் வெளிவந்துள்ளது. For a picture version of this post, go here.
இரண்டாம் நாள் காலை ஏழரை மணிக்கு, காலை உணவை முடித்துக் கொண்டு திருமயம் நோக்கிப் படையெடுத்தோம்.
‘படையெடுத்த’தற்குக் காரணம் இருக்கிறது- திருமயம் என்பது கோயில் மட்டுமல்ல- ஒரு கோட்டையும் கூட. திருச்சிராப்பள்ளி- இராமேஸ்வரம் சாலையில் (NH-210), புதுக்கோட்டைக்குத் தெற்கே 20 கி.மீ தொலைவில் இருக்கும் திருமயத்தை, சாலையிலிருந்து பார்த்தாலே, மலையின் உச்சியில் தெரியும் கோட்டை காட்டிக் கொடுத்து விடும். ரோட்டிலிருந்து பிரியும் மதில்சுவர்களை ஒட்டி வந்தால், ஒரு சந்து திரும்பியவுடன், திருமயம் கோட்டையின் அழகு ‘பளி’ச்சென்று கண்ணில் விரியும்.
முந்தைய நாள் எரித்த வெயில் இப்பொழுது காணாமல் போயிருந்தது. மேகங்கள் சூழ்ந்து கொண்டிருக்க, குளிர்ச்சியான காலை வேளையில் நாங்கள் கோட்டை வாயிலில் இறங்கினோம். ஒன்பது மணிக்குத்தான் ‘கோட்டைக் கதவுகளை’ (Gate ) ASIக்காரர்கள் திறப்பார்கள் என்று தெரிய வரவே, கோட்டையின் முன்பக்கமான மலைச்சுவரை ஒட்டி நடந்தோம். மலைச்சுவர் சரிவாக மேலேற- ஏறிப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் வராது?
மலைச்சுவர் முடியும் இடத்தில், கறுப்பாக ஒரு பொந்து போல் ஏதோ கண்ணுக்குப் புலப்பட்டதும், அது என்னவென்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் தலை தூக்கியது. அவசரமாக மேலேறிய பொழுது, சிறிய குகைதான் அது என்று புரிய, மிச்சப் பொழுதை அங்கேயே பாறைகளின் மேல் கழித்தோம். அங்கிருந்து பார்த்தால், மலையை ஒட்டியிருக்கும் பச்சைப் பசேலென்ற குளமும், சற்று தூரத்தில், சாலையை ஒட்டி கண்ணாடியைப் போல் ஜொலித்துக் கொண்டிருந்த இன்னொரு குளமும் தெரிந்தன. காலை வேளையின் ‘ஜிலி ஜிலு’ப்பை ரசித்தவாறு அங்கேயே சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு, மலைச்சரிவுக்கு அருகில் பத்தான கோணத்தில் சாய்ந்து நின்ற பாறை ஒன்றின் மீது ‘ஏறியே தீருவேன்’ என்று அடம் பிடித்த நண்பர்களையும் இழுத்துக் கொண்டு, மலையடிவாரத்திற்கு வந்து சேர்ந்தோம்.
‘கோட்டைக் கதவுகள்’ திறக்கும் நேரத்திற்குள் கோயிலைப் பார்த்துவிடலாம் என்று ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட, ‘பைரவர் சன்னதி’யைப் பார்த்துவிட்டு, வேனை நோக்கி நடந்தோம். கோட்டைக்குச் சற்றுத் தள்ளி, மலையைச் சுற்றிக் கொண்டு, சிவன் மற்றும் விஷ்ணு கோயில்களுக்கு வந்து சேர்ந்தோம்.
திருமயம் சிவன் கோயிலின் ஓவியங்களையும், கல்வெட்டுக்களையும் வைத்து, அது ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று சொல்கிறார்கள். பிற்காலத்தில், திருமயம் சோழர்கள் கைவசம் வந்து விட்டது. 12 மற்றும் 13ம் நூற்றாண்டுகளில் ஹொய்சளர்களின் ஆதிக்கத்தில் இருந்துவிட்டு, பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்து பாண்டியர்களின் கைக்கு வந்திருக்கிறது. இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன், இரண்டாம் ஜடாவர்மன் வீர பாண்டியன் ஆகியோரின் காலத்திலிருந்து கல்வெட்டுக்களும் காணக் கிடைக்கின்றன.
16 மற்றும் 17ம் நூற்றாண்டுகளில், ராமநாதபுரம் சேதுபதிகளின் ஆட்சியில் இருந்த திருமயத்தைப் பற்றி இன்னொரு சுவாரஸ்யமான விஷயமும் சொல்கிறார்கள்- 1799ம் வருடத்தின் பொழுது, பாஞ்சாலங்குறிச்சியின் வீர பாண்டிய கட்டபொம்மனும், ஊமைத்துரையும் இங்கேதான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனராம்/மறைந்திருந்தனராம். எவ்வளவு தூரம் இது உண்மை என்றுதான் தெரியவில்லை. கொசுறாக இன்னொரு தகவல்: சுதந்திரப் போராட்ட வீரர் திரு. சத்தியமூர்த்தி பிறந்த இடமும் திருமயம்தான் (1887 AD).
திருமயத்தின் விஷ்ணு கோயிலுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. திருவரங்கத்தின் கோயிலை விட இது பழைமையானது என்றும், அதனாலேயே இதற்கு ‘ஆதி ரங்கம்’ என்றும் பெயர் ஏற்பட்டது என்றும் சொல்கிறார்கள். விஷ்ணு கோயிலுக்குள்ளேயே இரு சன்னதிகள் இருக்கின்றன- வேலைப்பாடமைந்த கற்றளியான சத்தியமூர்த்தி கோயில் ஒன்று. மலைச்சுவரிலேயே குடையப்பட்ட குடைவரைக் கோயில் ஒன்று. இதில் கோயில் கொண்டிருப்பவர் ‘யோக சயன மூர்த்தி’யான ’திருமெய்யர்’. திருமெய்யத்தின் பள்ளி கொண்ட பெருமாள், ‘மது கைடபர்’ என்னும் இரு அசுரர்களிடமிருந்து பூமி தேவியையும், தேவர்கள், கின்னரர்களையும் காப்பாற்றுகிறார் என்கிறது தல வரலாறு.
“மையார் கடலும் மணிவரையும் மா முகிலும்
கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட
மெய்யானை மெய்யமலையானைச் சங்கேத்தும்
கையானை கைதொழாக் கையல்லகண்டாமே.”
என்று திருமங்கையாழ்வார், ‘திருமெய்யரி’ன் புகழ் பாடியிருக்கிறார்.
‘திருமெய்யரின்’ சந்நதியிலிருந்து வலது பக்கம் சென்று, கோயிலின் மேல் கவிந்திருக்கும் மலைச்சுவரின் அடியில் செல்லும் இடைவெளியில் நுழைந்து வெளிவந்தால், சத்யமூர்த்தியின் ஆலயத்திற்கு வந்துவிடலாம்.
திருமயத்தில் மொத்தம் பத்தொன்பது கல்வெட்டுக்கள் இருக்கின்றன- சிவன் கோயிலில் ஐந்து, விஷ்ணு கோயிலில் பதிநான்கு. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச்(அல்லது ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியைச்) சேர்ந்த சில கல்வெட்டுக்கள், சத்யமூர்த்திப் பெருமாளின் சன்னதியின் மேற்கு பிராகாரத்தில் காணப்படுகின்றன. முத்தரையர் தலைவரான சாத்தன் மாறன் என்பவரின் தாயார், குடைவரைக் கோயிலைத் திருப்பணி செய்து, நிதியும் கொடுத்துதவினார் என்கின்றன இந்தக் கல்வெட்டுக்கள். 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கல்வெட்டுகளும், 15, 16ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த விஜயநகர அரசின் கல்வெட்டுக்களும் காணக்கிடைக்கின்றன.
சிவன் கோயில் மண்டபத்தின் வலப்புறம் இருக்கும் சுவற்றில், ‘பரிவாதினி-தா’ என்று ஆரம்பமாகும் இசைக்கல்வெட்டுக்கள் இருக்கின்றன. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கல்வெட்டுக்கள், கிரந்த எழுத்துக்களில் வெட்டப்பட்டிருக்கின்றன. இந்தக் கல்வெட்டைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான செய்தி: கல்வெட்டின் மேல் பகுதியில் 13ம் நூற்றாண்டின் தமிழ் எழுத்துக்கள் காணப்படுகின்றன. அவற்றுக்கடியில் இசைக்கல்வெட்டு உருத்தெரியாமல் அழிந்திருக்கிறது. 13 ம் நூற்றாண்டில் அப்படியென்ன நடந்தது?
வேறொன்றுமில்லை- சிவன் மற்றும் விஷ்ணுக் கோயில்களின் நிர்வாகத்தினருக்குள் எற்பட்ட சச்சரவு, ஹொய்சள சேனாதிபதி அப்பண்ண தண்டநாயகரால் தீர்த்து வைக்கப்பட்டது. அந்தச் செய்தியைத் தான் குறிப்பிட்டிருக்கிறார்கள். (ஆழ்வார்க்கடியானும் வீரசைவரும் அடித்துக் கொண்டது ந்¢னைவுக்கு வரவில்லை?)
கோயிலுக்கு கிழக்கே, எண்கோண வடிவில், (பாசியின் மிகுதியால்) பச்சை நிறத்தில் ‘பள பள’க்கும் நீருடன், கச்சிதமாக அமைந்திருக்கும் ‘சத்ய புஷ்கரணி’யை ரசித்துவிட்டு, கோயிலிலிருந்து கிளம்பினோம். (‘சத்யகிரீஸ்வரர்’ கோயில் கொண்டிருக்கும் சிவன் கோயிலை நாங்கள் பார்க்கவில்லை. )
‘ஊமையன் கோட்டை’ என்று அந்தப் பகுதியில் அழைக்கப்படும் கோட்டையை நாங்கள் நெருங்கிய பொழுது மணி ஒன்பதைத் தாண்டியிருந்தது. கோட்டை வாயிலைத்தாண்டி நாங்கள் உள்ளே பிரவேசித்தோம். பாறையிலேயே குடையப்பட்ட படிகளைக் கடந்து மேலே சென்றால், ஒரு சிறிய கதவு தென்படுகிறது. கதவின் மறுபக்கம் ஒரு பெரிய லமரம். வலது பக்கம் செல்லும் சிறிய ஒற்றையடிப் பாதை. நேர் எதிரே மேலும் படிகள்.
ஆலமரத்தின் விழுதுகளைப் பார்த்தால் தொங்காமல் விடலாமா என்ன? மரம் ஏறுவதிலிருந்து விழுதில் தொங்குவது வரை எல்லாம் ஒரு புறம் நடக்க, மறுபுறம் ஒற்றையடிப்பாதையின் முடிவு என்ன என்ற விசாரணை நடந்தது. பாதையை நூல் பிடிப்பதுபோல் பிடித்துக் கொண்டே சென்றால், அது இன்னொரு பாறையில் சென்று முடிவடைந்தது. இந்தப் பாறையின் அடியில் இருக்கும் படிகளில் இறங்கினால், ஒரு சிறிய ‘மறைந்த மண்டபம்‘ (நிஜமாகத்தான்!) இருந்தது. வேப்பமரங்கள் கவிந்திருந்த மண்டபத்தின் கூரைமேல் ஏறிப் பார்த்தால்...நேர் எதிரே, செங்குத்தாக ஏறிய மலைச்சுவரில்- ஒரு சிறிய சன்னதிக்குள் சிவலிங்கம்.
இன்னும் மேலே ஏறியவுடன், மலையின் உச்சியில் சென்று கோட்டை முடிவடைந்தது. காற்று ளைத் தூக்கிக் கொண்டு செல்ல, சிலர் கோட்டைச் சுவர் ஓரங்களுக்குச் சென்றனர். மற்றவர்கள் உச்சியில் வைக்கப்பட்டிருந்த பீரங்கியை நோக்கி நடந்தனர். கோட்டையின் அடிவாரத்தில் பரந்து விரிந்த வயல்வெளிகளையும், கிராமப்புறங்களையும், வளைந்து நெளியும் சாலைகளையும் பார்த்து ரசித்தோம். பீரங்கியின் மேல் உட்கார்ந்து 'போஸ்' கொடுப்பதிலிருந்து, கோட்டை சுவற்றிலிருந்து கீஈஈஈழே தெரிந்த குளம் வரையில் எட்டிப்பார்ப்பது வரையில் எல்லாம் செய்த பிறகு, அங்கிருந்து கிளம்பலாம் என்று முடிவாகியது.
மலையிலிருந்து இறங்கி வந்து, ஆளுக்கு இரண்டு மூன்று இளநீரை கபளீகரம் செய்த பிறகு ஒரு மாதிரி தாகம் தணிய, பயணத்தின் அடுத்த கட்டத்திற்குச் சென்றோம்.
Posted at 10:49 pm by pavithra
Thursday, March 04, 2004
Sudharsanam Research Institute
‘சுதர்சனம்’ ஆய்வு மையம்
For a picture version of this post, go here.
குடுமியான்மலையைப் பார்த்து முடித்து, வாசலில் பக்கம் பக்கமாக திரும்பி நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதும் (இதுவே கொஞ்சம் காமெடியாக இருந்தது. முதலில் யாராவது வாசற்புறம் பார்த்து நிற்கச் சொல்லி எடுப்பார்கள். அடுத்த நிமிடம் யாரேனும் ’இந்தப் பக்கம்’ என்று கத்த, எல்லோரும் about turn அடிப்போம். இப்படியே மாற்றி மாற்றி செய்தப்புறம்தான் குடுமியான்மலைக்கு விடை கொடுக்க முடிந்தது).
வேனில் ஏறி உட்கார்ந்த பிறகு, ஞானாலயா (இது தமிழ்நாட்டின் தனியார் நூலகங்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றது)- பார்ப்பதற்குப் பதில் நேராக திரு.சுவாமிநாதனின் ‘சுதர்சனம்’ ஆய்வு மையத்திற்குச் செல்லலாம் என்று முடிவாகியது.
புதுக்கோட்டையின் எல்லையில் அமைந்த ‘சுதர்சன’த்தை நாங்கள் அடைந்த பொழுது இரவு மணி எட்டு. சலவைக்கல் தளத்துடன் ‘பள பள’ வென்று இருந்த ‘சுதர்சன’த்தின் மூன்றாவது மாடிக்குச் சென்ற பொழுது, கையும் காலும் ஓய்ந்து போய் வந்திருந்த எங்களுக்கு திரு.சுவாமிநாதனின் விரித்துப் போட்ட நாற்காலிகளும், குளிர்பானங்களும் அமிர்தமாக இருந்தன. திரு. சுவாமிநாதனே எங்களை புன்னகையுடன் வரவேற்றார்.
கமல் தன் handy-camஐ அறை வாயிலில் அமைக்க, ஒரு சிறிய அறிமுகத்திற்குப் பிறகு, அன்றைக்கு நாங்கள் பார்த்த இடங்களைப் பற்றிய விவாதம் ரம்பித்தது.
திரு.சுவாமிநாதன் தன்னுடைய ஆய்வு மையத்தின் உதவியாளர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். ‘சுதர்சன’த்தின் குறிக்கோள்களையும் (புதுக்கோட்டையின் சரித்திர முக்கியத்துவத்தை வெளிக் கொண்டு வருவது), தற்போது அவர்கள் செய்து வரும் projectகளையும் விவரித்தார். பழைமையான கல்வெட்டுக்கள் சிலவற்றைப் படியெடுத்து, தமிழில் அவற்றைக் கொடுத்து, அவற்றைப் படிப்பது எப்படி என்ற சிறு குறிப்புக்களுடன் தயார் செய்திருந்த அட்டைகளைக் காண்பித்தார். தனிப்பட்ட முறையில் அவர் தயார் செய்த ல்பங்கள் பலவற்றையும் காண்பித்தார்.
அவற்றையெல்லாம் பார்க்கையில் அவரது உழைப்பும், சரித்திர சம்பந்தமான விஷயங்களில் அவருக்கிருந்த ஆர்வமும், ‘சுதர்சனம்’ ஆய்வு மையத்தின் வெற்றியும் நன்கு புரிந்தது.
‘அட, அதிகம் இல்லை- அவரவர் தங்கள் தங்கள் சொந்த ஊரைப் பற்றிய சரித்திரத்தையாவது தெரிந்து வைத்துக் கொண்டு, அதன் மகோன்னதத்தை அடுத்தவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். நான் புதுக்கோட்டையைச் சேர்ந்தவன். என் சொந்த ஊரின் சரித்திரத்தை நான் அல்லவா பெருமைப்படுத்த வேண்டும்?’- இதுதான் அவரது கருத்து.
உண்மைதான் அல்லவா?
இறுதியாக, திரு.சுவாமிநாதனிடம் விடைபெற்றுக் கொண்டு, ‘சுதர்சன’த்திலிருந்து கிளம்பி நாங்கள் மறுபடியும் Prince Lodge வந்து சேர்ந்தோம். இரவு மணி பத்திற்கு கிடைத்த ஓட்டலில் கிடைத்த டிபனை முழுங்கிவிட்டு, அவரவர் அறைக்குச் சென்று முடங்கிவிட்டோம்.
Posted at 09:12 pm by pavithra
Thursday, February 19, 2004
குடுமியான்மலை
For a picture version of this post, go here.
அந்தி மாலை வேளைக்கு எப்பொழுதும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. எப்பேர்ப்பட்ட இடமும், சூரியன் மறையும் பொழுதில் மிக மிக அழகாகத் தோன்றும். அழகற்ற இடங்களுக்கே இப்படியென்றால், உயர்ந்த மலையைப் பின்னணியாகக் கொண்ட குடுமியான்மலை எப்படியிருக்கும்?
புதுக்கோட்டை-மணப்பாறை-கொடும்பாளூர்ச் சாலையில் 20 கி.மீ தொலைவில் இருக்கும் குடுமியான்மலைக்கு நாங்கள் வேனில் ஒரு குலுக்கலுடன் நின்ற பொழுது, மாலை மணி ஆறேகால்.
நிமிர்ந்து பார்த்தபொழுது, கோயிலின் கோபுரத்தைத் தாண்டி மலை உயர்ந்து நின்றது. மலைக்குப் பின்னால் இறங்கும் சூரியக் கிரணங்கள் ஒரே ஒரு நிமிடம் ஒளிபாய்ச்சி விட்டு, ‘சட்’ டென்று மறைந்தன. வாயிலில் சற்றே தாமத்தித்துவிட்டு, உள்ளே நுழைந்தோம். அப்படி நுழைந்த பிறகுதான், குடுமியான்மலையின் சிறப்பு எப்படிப்பட்டது என்பது எங்களுக்குப் புரிந்தது.
முற்காலப் பாண்டியர்களின் காலத்தில்- அதாவது ஏறக்குறைய ஏழாம் நூற்றாண்டில், சிறிய குடைவரைக் கோயிலாக மட்டுமே இருந்த குடுமியான்மலை, வருடங்கள் செல்லச் செல்ல, மெல்ல மெல்ல பெரிய கோயிலாக உருவெடுத்தது. குடுமியான்மலைக்கு அக்காலத்தில் வேறு பெயர்கள் இருந்திருக்கின்றன- ‘திருநலக்குன்றம்’ என்பது ஒரு பெயர். ‘திருநிலக்குன்றம்’ என்பது இன்னொரு பெயர். இரண்டாம் ராஜராஜசோழன் காலத்தில் ( 1146-1163) சிகாநல்லூர் என்ற பெயரும் வழக்கில் இருந்திருக்கிறது.
AD 1215- 1265 வருடங்களுக்குள், கோயில் திருப்பணி செய்யப்பட்டிருக்கலாம் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.
கோயில் வளாகத்திற்குள் மொத்தம் மூன்று கோயில்கள் உள்ளன- மேலக்கோயில் அல்லது திருமேற்றளி என்பது ஒன்று, சிகாநாதர் அல்லது குடுமிநாதரின் கோயில் இரண்டாவது, சௌந்தரநாயகியம்மன் கோயில் மூன்றாவது. இவை தவிர, மலை மீது முருகப்பெருமானுக்கும் ஒரு கோவில் உண்டாம்.
உள்ளே மண்டபத்திற்குள் நுழைந்தவுடன், முதலில் கண்ணில் படுவது- ஒவ்வொரு தூணிலும் இழைக்கப்பட்டிருக்கும் ளுயரச் சிற்பங்கள். சிற்பங்கள் பலவிதம்- ஒவ்வொன்றும் ஒரு விதம். புன்னகையுடன் அருள்புரியும் கணபதி, இராவணன், ஆஞ்சநேயர்...அருகில் இருக்கும் மண்டபங்களின் தூண்களில் சில சாய்ந்து, இடிந்து போயிருக்கின்றன. ‘உள்ளே நுழைவது ஆபத்து’ என்று போர்டே வைத்திருக்கிறார்கள்.
கருவறைக்குள்ளே குடுமிநாதர் (அல்லது சிகாகிரீஸ்வரர்), உச்சியில் குமிழ் போன்ற ஒன்றுடன் காட்சி தருகிறார் (சுயம்புலிங்கம் என்று சொல்கிறார்கள்).
குடுமிநாதர் சன்னதியின் வெளிப் பிரகாரத்தைத் தாண்டி வந்தால், சௌந்தரநாயகி அம்மனின் சன்னதிக்கு வரலாம். எளிமையாக, அதிக அலங்காரங்கள் அற்று விளங்குகிறது. ஒரு சிறிய கிணற்றுக்கு அருகில், அம்மன் சன்னதியின் படிக்கட்டுக்களில் உட்கார்ந்து இளைப்பாறினோம்.
பொதுவாகக் கோயில்களில் கல்வெட்டுக்கள் இருக்கும்- யார் கட்டியது, எப்போது கட்டியது, யார் பராமரிப்பது, அதற்குரிய நிவந்த விவரங்கள் போன்ற விஷயங்களைக் குறிக்கும். குடுமியான்மலையில் ஏறக்குறைய 120 கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவற்றில் தனிச்சிறப்பு வாய்ந்தது...
13’ X 14’ அளவுடைய, பல்லவ கிரந்த எழுத்துக்களால் ஆன, இசைக்கல்வெட்டு. ‘சித்தம் நமச்சிவாய’ எனத் தொடங்கும் இந்தக் கல்வெட்டு, இசை இலக்கணத்தையும், யாழினையும் விவரிக்கிறது. கோயிலைத் தாண்டி, பூட்டியக் கதவுடன் இருக்கும் ஒரு பகுதியில், மலைச்சுவரில் வெட்டப்பட்டிருக்கிறது. நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘நாட்டிய சாஸ்திரம்’ என்ற நூலுக்கும், பதின்மூன்றாம் நூற்றாண்டின்பொழுது இயற்றப்பட்ட ‘சங்கீத ரத்னாகரம்’ என்ற நூலுக்கும் இடைப்பட்ட காலத்தில் பொறிக்கப்பட்ட இந்தக் கல்வெட்டு, இந்திய இசையைப் பொறுத்தவரை, மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
ஏழு ஸ்வரங்களைப் பற்றிய விவரங்களை ஏழு பகுதிகளாகக் கொடுக்கும் இந்தக் கல்வெட்டில், பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் உருவாக்கியதாகச் சொல்லப்படும் ‘ஸங்கீர்ண ஜாதி’யைப் பற்றிய விஷயங்களும் அடங்கியிருக்கின்றன. இதன் காரணமாக, ‘ஸங்கீர்ண ஜாதிப் பிரகரணர்’ என்ற பட்டமும் அம்மன்னனுக்கு வழங்கப்பட்டதாகச் சொல்வார்கள்.
ஆவலுடன் நான், திரு.சீதாராமன், விக்கி, ஆகியோர் பூட்டிய கதவைத் த்¢றந்த வழிகாட்டியின் பின்னால் நுழைய...அங்கே இடதுபக்கம் இருந்த மண்டபங்களைத் தாண்டி, நேர் எதிரே, பெரிய மண்டபம் ஒன்றின் கூரையில், சுவர் முழுதும் பரவியிருந்த இசைக் கல்வெட்டுக்களை லேசாக மறைத்தபடி மெகா சைஸில் நான்கு தேனடைகள் தொங்கிக் கொண்டிருந்தன. அவற்றைச் சுற்றி தேனீக்கள் ‘விர்’ரென்று பறந்துகொண்டிருந்தன.
“காலைலியே ஆபீஸரைக் கொட்டிடுச்சுங்க...” என்று எங்கள் வழிகாட்டி சொல்லும் பொழுதே, ஒரு தேனீ ஆசையுடன் விக்கியைத் துரத்த ரம்பிக்க - அவ்வளவுதான், ஓட்டம் பிடித்தோம். (திரு. சேஷாத்ரிதான் தன்னுடைய புத்தகத்தின் உதவியுடன் விக்கியின் கூந்தலை விட்டுப் பிரிய மனமில்லாத அந்தத் தேனீயை விடாப்பிடியாகப் பிடுங்கியெடுத்தார். :-)).
பூட்டிய வளாகத்திற்கு வெளியிலிருந்து பார்த்தால், மலைச்சுவரிலே சிறிய புள்ளிகளாக ரிஷபத்தின் மேல் சிவ பெருமானும், பார்வதி தேவியும், கைலாயவாசிகளும் தெரிகின்றனர். அவை, அக்காலச் சிற்பிகளின் கைத் திறனை அப்படியே படம் பிடித்துக்காட்டுகின்றன.
குடுமியான்மலைக் கோயிலின் வாயிலில் புகைப்படங்கள் சிலவற்றை எடுத்துக் கொண்டு, கோயிலை இறுதியாக கண்களில் நிரப்பிக் கொண்டு, கிளம்பினோம்.
Posted at 11:01 pm by pavithra
|
|
|