Entry: Visalur Thursday, July 22, 2004விசலூர்

For a picture version of this post, go here.

வேனில் ஏறி, முதன் முதலில் நாங்கள் பார்ப்பதாக இருந்த விசலூர் என்ற ஊரை நோக்கிச் சென்றோம். திருச்சியிலிருந்து கிள்ளூக்கோட்டை செல்லும் சாலையில் ஒன்றரை மணி நேரப் பிரயாணத்தில் இருக்கும் இந்தச் சிற்றூருக்கு நாங்கள் வந்து சேர்ந்த பொழுது, மணி ஒன்பதாகியிருந்தது. வழியெங்கும், சரித்திர சம்பந்தமாக எங்களுக்கு இருந்த சந்தேகங்களைத் தீர்த்துக்கொண்டது ஒருபுறம் என்றால், இன்றைய எழுத்தாளர்கள், சரித்திர நாவலாசிரியர்கள், அவர்கள் எழுதிய கதைகள், சிறுகதைகள் என்னென்ன என்று குதூகலமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த எங்களுக்கு, மரங்கள் சூழ்ந்த பகுதியில், ஒரு சிறிய குளத்தின் முன் எங்கள் டாடா சுமோ ஒரு குலுக்கலுடன் வந்து நின்ற பொழுதுதான், விசலூர் வந்து சேர்ந்துவிட்டோம் என்பது புரிந்தது.


ஆவலுடன், இறங்கி, எங்களுக்கெதிரில், சிங்கங்கள் வாய் பிளந்தவாறு காவல் புரியும் வாயிலுடன் இருந்த இந்தச் சிறிய கோயிலைப் பார்த்தோம்.

வெளியிலும் சரி, உள்ளேயும் சரி, சோழர் காலத்தைச் சேர்ந்த விசலூர்க் கோயில் அற்புத அழகு வாய்ந்தது என்று சொல்ல முடியாதுதான். அடக்க ஒடுக்கமாக, மரங்களால் சூழ்ந்த சோலைக்கு நடுவில், இருக்கும் இடம் தெரியாமல் அமர்ந்திருக்கும் சிறிய ஆலயம் அது. ஆயினும், இந்த இடத்தில் நாங்கள் கற்றுக்கொண்டது அதிகம்.

பழந்தமிழ் நாட்டின் கோயில்களை அக்காலத்து சிற்ப சாஸ்திர வல்லுனர்கள் எப்படி வடிவமைத்தார்கள்; கோயிலின் ஒவ்வொரு பாகத்திற்கும் என்ன பெயர்; கோயில்களை, அவை கட்டப்பட்டிருக்கும் விதத்தை வைத்து எப்படி வேறுபடுத்துவது, அவற்றில் பிரதான தெய்வங்கள் எங்கெங்கு அமைந்திருக்கும், அப்படி அமைந்திருக்கும் தெய்வங்கள் எவையெவை...இப்படிப் பல விஷயங்களை எங்களால் தெரிந்துகொள்ள முடிந்தது.


உடலுக்கு அவயவங்கள் அமைந்திருப்பது போலத்தான், ஒரு ஆலயத்தின் பல்வேறு பகுதிகளும். ஒரு தளத்தின் கீழ்ப்புறத்தைத் 'தாங்குதளம்' என்று அழைப்பார்கள் ('அதிட்டானம்' என்றும் சொல்வார்கள்). தாங்குதளத்தின் மேற்புறத்தில், தூண்கள் அதனுடன் இணையும் பகுதியில், சற்றே வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் பகுதிக்கு 'கம்பு' என்று பெயர். அதிலிருந்து சற்று உள்வாங்கியுள்ளதுதான் 'உபரிக்கம்பு'. உபரிக்கம்பிலிருந்து மேலெழும்புவது சுவர். சுவற்றிற்கு மேல்புறத்தை அலங்கரிப்பது 'உத்திரம்'. உத்திரத்திற்கு மேல் இருப்பது 'வலபி'. வலபிக்கு மேல், வளைவாக இறங்கும் பகுதிக்குப் பெயர் 'கபோதம்'.

மொத்தத்தில், ஒரு தளத்திற்கு மூன்று அடிப்படை உறுப்புகள்: 'அதிட்டானம்'. சுவர், மற்றும் கூரைப்பகுதி. இந்த மூன்றும் சேர்ந்ததுதான் ஒரு தளம் என்று குறிக்கப்படுகின்றது. இம்மூன்றும் இருப்பின், அது மண்டபமாகவும் இருக்கலாம், அல்லது கருவறையாகவும் இருக்கலாம். மண்டபம் என்று குறிப்பிட வேண்டுமானால், இந்த மூன்று உறுப்புகளூம் போதும்.

அதுவே, கருவறை என்றால்...? அதற்கு, அமைப்பு சற்றே மாறுபடும். ஒரு மண்டபத்திற்குத் தேவைப்படும் மூன்று பகுதிகளோடு, இன்னமும் மூன்று பகுதிகளைச் சேர்க்க வேண்டும் - அவை,   'க்ரீவா' (தமிழில் 'கழுத்துப்பகுதி'), சிகரம், கலசம், ஆகியவை. ஆக, இந்த ஆறு பகுதிகளும் ஒன்றாக இணைந்தால், அதை 'விமானம்' என்று அழைக்கிறோம். இந்த ஆறில் ஒன்று குறைந்ததென்றாலும்- அதை விமானம் என்று அழைப்பதற்கில்லை.

விசலூர்க்கோயில், 'ஏகதள' (ஒரே ஒரு தளம்) விமான அமைப்பைக் கொண்டது.

இந்த பகுதிகளை, சிற்பிகள் அவரவர் ரசனைக்கேற்றார்போல், அழகுபடுத்துவது வழக்கம். குறிப்பிட்ட ஆறு உறுப்பக்களைத் தவிர்த்து, இன்னும் பலவற்றைச் சேர்த்துக் கட்டுவதும் உண்டு. இதெல்லாம் அவரவரிடம் இருக்கும் திறமை, செல்வம், ஆகியவற்றைப் பொறுத்த விஷயம். இராஜ ராஜ சோழனைப் போல், பிரும்மாண்டமாகவும் கட்டலாம்; விசலூரைப்போல் சிறியதாகவும் அமைக்கலாம். 

விசலூர்க்கோயிலுக்கு, 'நிஷதராஜன்' என்னும் சிற்றரசன் பல கொடைகள் கொடுத்திருப்பதாகத் தகவல். (சாண்டில்யனின் 'கன்னிமாடம்' நாவலைப் படித்து இரசித்தவர்களுக்கு இவர் யார் என்பது நிச்சயம் தெரிந்திருக்கும். இவர்தான் பாண்டியநாட்டுப் பொன்னமராவதியின் தலைவர்.). அவரால் பல நிவந்தங்களும் அளிக்கப்பட்டன. 

அங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஜேஷ்டாதேவியின் உருவச்சிலை (முதலாம் இராஜ இராஜ சோழனின் காலம் வரையில் செல்வாக்குடன் இருந்த இந்த தெய்வம், பிறகு ஏனோ அந்தச் செல்வாக்கை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிட்டது), இளமையான தோற்றத்துடன் காணப்பட்டது. பொதுவாக வயோதிகக் கோலத்தில்தான் இத்தெய்வம் வடிக்கப்பட்டதாம் - ஜேஷ்டா தேவியைப் பொறுத்தவரையில், பழுவேட்டரையர்கள்தான் அதை மிகவும் அழகுறச் செய்தார்கள் என்றும் சொல்கிறார்கள். புதுக்கோட்டைப் பகுதியில், பொதுவாக, 'ஜேஷ்டா தேவியின்' உருவத்தை இளமையாக அமைப்பது வழக்கம்.


இன்னும் சில உருவங்களையெல்லாம் பார்த்துவிட்டு, கொசுறாக விலாவாரியாக செதுக்கப்பட்டிருந்த கல்வெட்டு ஒன்றையும் எழுத்து எழுத்தாகக் கூட்டிப் படிக்கும் முயற்சியில் இறங்கினோம். 'திருவமுதரிசி' என்ற எழுத்தைப் படிப்பதற்குள் களைத்து விட்டோம் (சோழர் காலத்தில், 'ழுவும்' 'முவும்' ஒரே மாதிரி இருக்கின்றன). 'ஒற்றெழுத்துக்கள்' வேறு கிடையாது. (எழுத்து எழுத்தாக படிப்பதினால் மட்டும் கல்வெட்டைப் படித்ததாக அர்த்தமில்லை - அர்த்தம் சரியாக வருகிறதா என்றும் பார்த்துதான் படிக்க வேண்டும், - டாக்டர். இரா.கலைக்கோவன் கையில் வைத்திருந்த கல்வெட்டுக் குறிப்புகளையும் பார்க்கக்கூடாது என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டார் !). ஐந்து படி தயிர், பத்து படி பருப்பு, மூன்று படி நெய், என்று மாற்றி மாற்றிப் படிக்க (இப்பொழுது தயிரமுது இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?) என்று வாரி வழங்கியிருக்கிறார்கள்- யார் காலத்தில்? கல்வெட்டில் மேற்புறம் இருக்கும் 'காந்தளூர்ச் சாலை கலமறுத்தவர்' - இராஜ ராஜ சோழர் காலத்தில்தான் - அவரது பன்னிரண்டாவது ஆட்சியாண்டில்.


கோயிலைச் சுற்றிப் பார்த்துவிட்டு, பிரகாரத்தில் அடுக்கப்பட்டிருந்த சில சிலைகள் அருகில் வந்து நின்றோம். கோயிலைச் சேர்ந்த ஒருவர் சுடச்சுட 'டீ' கொண்டு வந்து கொடுக்க, அதை உறிஞ்சியபடி சிலைகளை ஆராய்ந்தோம்.

ஒவ்வொரு புதிய இடத்திற்குச் செல்லும் பொழுது, பார்க்கும் அத்தனை விஷயங்களையும் மீறி, சில காட்சிகள் படம் பிடித்தது போல் மனதில் அப்படியே பதிந்து விடும். விசலூர்க்கோயிலிலும் அப்படிப்பட்ட காட்சி ஒன்று உண்டு. கோயிலின் பிரகாரத்தில் நாங்கள் அனைவரும் அவரவருக்கு வசதியாகத் தோன்றிய விதத்தில் அமர்ந்துகொள்ள, இரா.கலைக்கோவன் பிரகாரத்தில் போடப்பட்டிருந்த கல்பலகை ஒன்றில் உட்கார்ந்து கொள்ள, கடவுள் உருவச் சிலைகளை, அவற்றின் ஆடை அணிகலன்களைக்கொண்டு எப்படி அடையாளம் சொல்வது என்ற பாடம் ஆரம்பமாயிற்று. உதாரணம்: 'பைரவ'ரை அடையாளம் கண்டுகொள்வது எப்படி? அருகில் செதுக்கப்படும் நாய் உருவமும், உடையும்தான்! இவர்தான் முன்காலத்தில் 'ஷேத்திரபாலர்' என்று வழங்கப்பெற்றாராம். இந்த சம்பாஷணை வளர்ந்து கொண்டே போய், ரிக் வேத காலத்தில் மனிதர்கள் வாழ்க்கை முறையும், வேத பாட சாலைகளையும், இன்ன பிறவற்றையும் தொட்டுக்கொண்டு சென்றது வேறு விஷயம். 

விசலூர்க் கோயிலின் கர்ப்பக்கிருஹத்தை ஆராய்ந்துவிட்டு, நாங்கள் அங்கிருந்து கிளம்பிய பொழுது மணி பதினொன்றரை.

சோழ நாட்டின் வெயிலில், தார்ச்சாலைகள் அப்பொழுதே பற்றியெரிய ஆரம்பித்துவிட்டன. விசலூரிலிருந்து இரண்டே கி.மீ தொலைவிலிருந்த 'மலையடிப்பட்டி'யை நோக்கி நாங்கள் பயணித்தோம்.

   7 comments

yourshop.cc
December 3, 2008   11:21 PM PST
 
http://www.watchesforsale.us
Dharma
August 20, 2005   12:35 AM PDT
 
Hey Pavithra,

Would you please let me know of any tools that you may use, if any, to type in Thamizh.

I very much want to blog in Thamizh. I have eKalappai installed in my Windows box, but still I feel slightly difficult to create one in Thamizh.

Appreciate any help on this.

Dharma.
L.K.MATHI & RAJESWARI MATH
January 9, 2005   07:07 AM PST
 
WE HAVE TRAVELED LOT OF PLACES IN TAMILNADU. YOUR ARTICLE ABOUT THE VESSALUR IS
INTERESTED. PLEASE CONTINUE YOUR SERVICE FOR THE SAKE OF OUR RELIGION. THANKS.
09-01-2005
Princess
July 27, 2004   08:40 PM PDT
 
I *have* tried some weeding - it looks ok to me now.:-).
Sumant
July 27, 2004   04:48 PM PDT
 
I think the trouble is that you have to type the vowel sound first before the consonant. So, something like kOttai would be Ok(ai)tt - where the (ai) would be whatever the appropriate symbol would be. Let me know if that works.
Princess
July 23, 2004   09:45 AM PDT
 
(ruefully) yeah, I noticed. I tried weeding them out - but they occured because of the TSCII to unicode conversion...so I guess it's back to the 'edit' page again. Argh.
Sumant
July 23, 2004   07:47 AM PDT
 
I liked the travelogue, but there are errors, mostly typographical. especially where the vowel accents are placed before the letter, rather than after.

Leave a Comment:

Name


Homepage (optional)


Comments