மலையடிப்பட்டி For a picture version of this post, go here. புதுக்கோட்டை மாவட்டத்தின் கீரனூரிலிருந்து சுமார் 17 கி.மீ தொலைவில் உள்ளது மலையடிப்பட்டி. விசலூரிலிருந்து 2 கி.மீ தூரத்தில் இருக்கிறது. மரங்கள் நிறைந்த பகுதியில் விசலூர்க்கோயில் அமர்ந்திருந்ததென்றால், மலையடிப்பட்டி, மொட்டைப் பாறைப் பிரதேசத்தில், ஒரு மலைக்குன்றில் குடையப்பட்டு, வெளிப்பார்வைக்கு சூனியமாகவும், உட்புறம், வெயில் வேளைக்குக் குளிர்ச்சியாக, எங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்ப்பது போல் தன் வாயில் கதவுகளைத் திறந்து வைத்துக்கொண்டு காத்திருந்தது. மலையடிப்பட்டியில் இரு குடைவரைக்கோயில்கள் உள்ளன: ஒன்று சிவபெருமானுக்கு, இன்னொன்று திருமாலுக்கு. நாங்கள் முதலில் திருமால் கோயில் கொண்டிருந்த குடைவரைக்கோயிலையே தரிசித்தோம். இந்தக்கோயிலில் உள்ள பழைமையான ஒரு கல்வெட்டு, சோழ அரசன் இராஜகேசரியின் ஏழாம் ஆட்சியாண்டைச் சார்ந்ததாம். ‘ஒளிபதி விஷ்ணுகிருகம்’ என்ற வார்த்தைகள், இக்கோயில் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. காலத்தைப் பொறுத்தவரையில், சிவபெருமான் குடைவரைக்கும் பிற்பட்டது என்று தகவல். சுமார் ஒன்பது, அல்லது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். வாயிலைத் தாண்டி, பாதங்களில் மணல் கொதிக்கக் கொதிக்க வேகமாக நடந்து சென்று குடைவரையை அடைந்தோம். மூன்று வாயில்களுள், திறந்திருந்த நடு வாயிலின் வழியே உள்ளே நுழைந்தோம்.
முக மண்டபத்திலும் பல்வேறு சிற்ப அதிசயங்கள் காரை பூசப்பட்டுக் காணப்பட்டன. உள்ளே நுழைந்தவுடன், கையில் மலர்களுடன், சுதை பூசப்பட்ட இரு அடியவர்கள், புன்னகையுடன் எங்களை வரவேற்றனர் (கைகளில் யுதங்களை வைத்திருந்தால் மட்டுமே, அவர்கள் ‘துவாரபாலகர்கள்’). முகமண்டபத்திலிருந்து, கருவறைக்கு முன் உள்ள மண்டபத்திற்கு செல்லும் வாயிலில், சிங்கங்களை அடித்தளமாகக் கொண்டு இரு அழகிய தூண்கள் எழும்புகின்றன. தூண்களில், முத்து மாலைகள் போன்ற மணிகள் மிக நுட்பமாக செதுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றிற்கு ‘மாலாஸ்தானம்’ என்று பெயர். முகமண்டபத்திற்கு அடுத்த உள்மண்டபத்தில், வலது கைப்பக்கம், திருமாலின் திருவுருவம், தேவியருடன் காணப்படுகிறது. ‘வைகுந்தநாதர்’ என்பது இவரது திருநாமம். அவருக்கு வலப்புறத்தில், வராக மூர்த்தி வீற்றிருக்கிறார். வைகுந்தநாதருக்கு நேரெதிர் சுவற்றில், புடைப்புச் சிற்பமாக, நரசிம்ம மூர்த்தி, கம்பீரமாகக் காட்சி தருகிறார்.
திருமயம் கோயிலை ஒரு முறை பார்த்தவர்களுக்கு, அந்தக் கோயிலுக்கும், ‘மலையடிப்பட்டி’ குடைவரைக் கோயிலுக்கும் உள்ள ஒற்றுமை உடனே கண்ணில் பட்டுவிடும். ஆம், இங்கு மஹாவிஷ்ணு, மஞ்சளும் சிவப்புமாக ‘டால’டித்த ஆதி சேஷனின் மீது சயனித்துக்கொண்டிருந்தார். அவரது கரங்களின் ஆதரவைப் பெற்ற மார்க்கண்டேயரும், பூமிதேவியும் மண்டியிட்டு அமர்ந்திருந்தனர். ஒரு ஓரத்தில் மது கைடபர்கள் என்னும் அரக்கர்கள் கடவுளின் கோபத்திற்குப் பயந்து ஓடும் பாவனையில் செதுக்கப்பட்டிருந்தனர். கருடனும், தேவர்களும், இன்னபிற தெய்வ புருஷர்களும் இந்தக் காட்சியைப் பார்த்து ஆரவாரித்தனர், சாதாரண மனிதர்கள் இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு, இவ்வளவுடன் நின்று விடுவார்கள். இது நாள் வரையில் அப்படியே இருந்த எங்களுக்கு, சரித்திர ஆராய்ச்சியாளர்கள் இதே விஷயங்களைப் பார்க்கும் முறையே வேறு என்பது புரிய ஆரம்பித்தது. எங்களுக்குக் கழுத்தில் இடும் நகையாகவும், தலையில் சூடும் க்ரீடமாகவும் இருந்தவை அவர்களுக்கு முறையே ‘சரப்பளி’யாகவும், ‘கரண்ட மகுடமாகவும்’ மாறிவிட்டன. எங்கள் கண்ணுக்குப் புலப்படாத நுணுக்கங்கள் அவர்களுக்கு வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தன - உதாரணத்திற்கு, தூண்களில் மேற்புறம், அவை கூரையைத் தேடும் இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் வடிவத்திற்கு, ‘போதிகை’ என்று பெயர். அவை வளைந்து வளைந்து காணப்பட்டால், அதற்கு ‘தரங்க போதிகை’ என்று பெயராம். (தரங்கம் என்றால் ‘அலை’ என்று பொருள்). [பார்க்க புகைப்படம்]. இராஜராஜ சோழர் காலத்திற்கு பிறகு, இந்த வடிவம் மாற்றம் அடைந்துவிடுகிறது. தரங்க போதிகைகள் கொண்ட கோயில் என்றால், கண்ணை மூடிக்கொண்டு, ‘இராஜராஜர் காலத்திற்கு முற்பட்டது’ என்று கூறிவிடலாம்.
இந்த சமயத்தில், இரா.கலைக்கோவன் எங்களுக்கு ஒரு நூதனமான சோதனை ஒன்றை வைத்தார். “விசலூரில்தான் ஓரளவுக்குக் கோயில் சிலைகள் உங்களுக்குப் பரிச்சயமாகிவிட்டதே? எங்கே - இந்தக் கோயிலில், குடைவரைக்குள் செதுக்கப்படாத, வெளியிலிருந்து செதுக்கி உள்ளே பொருத்தப்பட்ட இரு சிற்பங்கள் இருக்கின்றன. அவை எவையெவை என்று கண்டுபிடியுங்கள், பார்ப்போம்?” என்றபடி, அவர் கையைக் கட்டிக் கொண்டு ஒரு தூணில் சாய்ந்துவிட்டார். நாங்கள் எல்லோரும் ஒருவரையருவர் பார்த்துக்கொண்டோம். ‘நம்மால் முடியுமா?” என்ற சந்தேகம் ஒரே ஒரு கணம்தான் தோன்றியது. உடனே, டார்ச்சு லைட்டு சகிதமாக மண்டபம் முழுவதும் பரவினோம். எத்தனை தேடியும், முக மண்டபத்தின் வலது மூலையிலிருந்த விஷ்ணு பகவான் சகித தேவியர் சிற்பம் ஒன்றையே எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது. கொஞ்சம் கையாலாகாத்தனத்துடன் நாங்கள் எங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ள, எங்களைச் சோதித்தவர் ஒரு மந்தகாசப் புன்னகை புரிந்த வாறு “நீங்கள் கண்டுபிடித்த ஒரு சிற்பம்தான் வெளியிலிருந்து கொண்டு வரப்பட்டது. இரண்டாவது சிற்பமே கிடையாது,” என்று சொல்ல, ‘கரகாட்டக்காரன் சினிமாவைப் போல், ‘அதுதாங்க இது’ என்று கவிழ்த்துவிட்டீர்களே’ என்று அங்கலாய்த்துக்கொண்டு, அடுத்த கட்ட ஆராய்ச்சிக்குத் தாவினோம். மலையடிப்பட்டியின் இரண்டாவது - அதாவது சிவபெருமானின் குடைவரைக்கோயிலுக்கு, ஒரு சிறிய பாதையின் வழியே நடந்து சென்று, மரங்கள் கவிந்திருந்த குகை வழியாக நுழைந்தோம். இங்கு சிற்பங்கள் கொட்டிக்கிடக்கவில்லையென்றாலும், ஒரு சுவற்றில் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டு ஒன்று எங்களது கவனத்தைக் கவர்ந்தது. ‘அது என்ன?’ வென்று யோசிப்பதற்குள், இரா.கலைக்கோவன் எங்களை, இன்னொரு சுவற்றில் செதுக்கப்பட்டிருந்த சில சிற்பங்களின் பக்கம் இழுத்துக்கொண்டு சென்றார். ‘இந்தச் சிற்பங்களெல்லாம் எந்தெந்த தெய்வங்களைக் குறிக்கின்றன; சொல்லுங்கள் பார்ப்போம்’, என்று எங்களுக்கு இன்னொரு சிறிய டெஸ்ட் வைத்தார். ஆளாளுக்கு நாங்கள் “இது முருகன்- சென்னி தெரிகிறதே?”, “இது துர்கையாகத்தான் இருக்க வேண்டும்,” என்று சிற்பங்களின் உருவ அமைப்புகளை வைத்து எங்கள் முடிவுகளைத் தெரிவிக்க, அவற்றை இன்னும் நுணுக்கமாக ஆராய்வது எப்படி எங்களுக்குக் கற்றுக்கொடுத்த பின்னர்...எங்கள் ஆர்வத்தைக் கிளறிவிட்ட கல்வெட்டின் பக்கம் நகர்ந்தார். “இது ஒரு அபூர்வமான கல்வெட்டு... ஏறக்குறைய ஒரு confession என்று வைத்துக்கொள்ளூங்களேன்?” “குடைவரைக்கோயிலுக்குள் confession? அப்படியென்ன விஷயம் அடங்கியிருக்கிறது இதில்?” “இருக்கிறது,” என்ற இரா.கலைக்கோவன், நிதானமாக எங்களைக் கல்வெட்டைப் படிக்கச் சொன்னார். நிறுத்தி நிறுத்தி அதைப் படிக்கும்போதே விஷயம் விளங்கிவிட்டது என்றாலும், பின்னர் அவர் அதை விரித்துச் சொல்லும்பொழுதுதான் அந்த அதிசயக் கல்வெட்டின் சாரம் முழுவதும் விளங்கிற்று. “கொலை செய்தவன் ஒருவன் வெட்டிய கல்வெட்டு இது,” என்றார் இரா.கலைக்கோவன் நாங்கள் வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருக்க, ஒரு சிறிய புன்னகையுடன் தொடர்ந்தார். ”இந்தக் கல்வெட்டை வெட்டியவன் ஒரு தாசியுடன் பழக்கம் வைத்திருந்திருக்கிறான். ஒரு சமயம், அந்த தாசி, வேறொரு பிராமணனுடன் இருப்பதை அறிந்தவுடன், கண்மண் தெரியாத த்திரத்தில் அவளையும், அந்தப் பிராமணனையும் வெட்டிவிடுகிறான். உடனே அவனுக்குக் கண்ணும் தெரியாமல் போய்விடுகிறது...” “அதெப்படி? கொலை செய்தவுடன் கண் தெரியாமல் போகுமா என்ன? அதற்கும் இதற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா?” “உண்டு என்று மருத்துவம் சொல்கிறதே? இதை எங்கள் படிப்பின் ஒரு பகுதியாக நாங்கள் படித்தோம். சில சமயங்களில், stress அதிகமானால், இந்த மாதிரி அபூர்வமாக நடப்பதுண்டு. சில சமயம் வாழ்நாள் முழுவதும் அந்தக் குறை நீங்காமல் இருப்பதுண்டு; இன்னும் வேறு சமயங்களில் அதுவாகவே சரியாகிவிடும். இந்த மனிதன் இந்தக் கோயிலுக்கு வந்தவுடன், அவன் பார்வையைத் தடை செய்துகொண்டிருந்த இரத்தக்கட்டியோ, ஏதோவொன்றோ, கண்களுக்குச் செல்லும் இரத்தக்குழாயிலிருந்து வெளியேறியிருக்க வேண்டும் — அதனால், கோயிலுக்கு வந்தவுடன் அவனது பார்வை திரும்பிவிட்டது. பக்திப் பெருக்குடன், அவன் இந்தக் கோயிலுக்குச் சில கொடைகள் தந்து, ‘இன்ன காரணத்தினால்தான் நான் இவற்றைத் தர நேர்ந்தது’ என்பதையும் விலாவாரியாக வெட்டி வைத்திருக்கிறான். அதுதான் இந்தக் கல்வெட்டின் கதை. ” என்று முடித்தார் இரா.கலைக்கோவன். எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களூக்கு மௌளன சாட்சியாக நின்று கொண்டிருந்த அந்தச் சுவற்றை ஒரு முறை தொட்டுப் பார்த்துவிட்டு, அங்கிருந்து நகர்ந்தோம். |
![]() | ![]() | ![]() |
Kathie B. April 15, 2010 04:04 PM PDT ![]() Happy Birthday 2010 Thanks for the photos of murthis | ||
![]() |
![]() | ![]() | ![]() |
Arvind Venkatraman February 27, 2010 06:58 PM PST ![]() Enjoyed your Malaiadipatti post. I had recently been there. The shiva temple seems to be of Pallava period - Signature icons of Mahishamardini Here is the link to the video which we shot when we went there recently. http://www.dailymotion.com/video/xcdz1r_malaiadipatti-rockcut-temple_creation | ||
![]() |
![]() | ![]() | ![]() |
yourshop.cc December 4, 2008 12:35 AM PST ![]() http://www.watchesforsale.us | ||
![]() |
![]() | ![]() | ![]() |
3As December 10, 2006 03:18 AM PST ![]() ungalathu valaipathivu miga arumai.sarithara kalathu nigazhichigalai nerile sendru parthathu ponru irukinrathu.pl post a bigger,closeup photo of malaiyapatti perumal.thanka ...3As | ||
![]() |
Leave a Comment: |