Entry: Kunnaandaar Koil Sunday, August 08, 2004குன்னாண்டார் கோயில்

For a picture version of this post, go here.

மலையடிப்பட்டியிலிருந்து கிளம்பிய நாங்கள், சுமார் இரண்டரை மணிக்கு குன்னாண்டார் கோயில் என்ற சிறிய கிராமத்திற்கு வந்து சேர்ந்தோம்.

படைபடைக்கிற வெயிலில், ஒரு சிறிய மலைப்பகுதியின் கீழ்ப்புறத்தில் அமைந்திருந்த அந்தக் கோயிலுக்கு நாங்கள் வந்து சேர்ந்த பொழுது, சுடச்சுட, ஆவி பறக்க, ASIக்காரர்களின் உபயத்தில் எங்களுக்கு விருந்து ஒன்று தயாராக இருந்தது.

பெரிய பெரிய பாத்திரங்களில், பதினைந்து பேருக்கு தயார் செய்யப்பட்டு, சூடு பறக்க எங்களுக்குப் பரிமாறப்பட்ட விருந்தை, கோயிலின் மண்டபம் ஒன்றில் வயிறார சாப்பிட்டுவிட்டு, கோயிலின் வாயிற்படிக்கட்டில் வரிசையாக அமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டோம்.

மதியக் காற்று, அந்த நிழலில் சுகமாக வீசியது. கிராமத்துச் சிறுவர்கள் சிலர், எங்களுக்கெதிரில் இருந்த சில மண்டபங்களின் தூண்களைப் பற்றிக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்தனர்.

மூன்று மணி சுமாருக்கு, நாங்கள் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆர்வமாக இருந்த ஆய்வுப் பணியில், டாக்டர்.கலைக்கோவன் எங்களை முதன்முதலாக ஈடுபடுத்தினார்.

குன்னாண்டார் கோயிலின் முன் மண்டபங்களைத் தாண்டி, குடைவரைக்குமுன்பாக இருந்த முகமண்டபத்தை அடைந்தோம். முன்னேற்பாடாகக் கையோடு எடுத்து வந்திருந்த டார்ச்சு லைட்டுகளையும், அளக்கும் டேப்களையும் வெளியே எடுத்தோம். விவரங்களைக் குறித்துக்கொள்வதற்கு நோட்டுப்புத்தகங்களைப் பிரித்து எடுத்துக்கொண்டோம்.

அடுத்த மூன்று மணி நேரங்களும், குடைவரையின் கருவறையை அளந்து, ஆவுடையாரின் அமைப்பை அங்கம் அங்கமாக ஆராய்ந்து, முகமண்டபத்தின் ஒவ்வொரு பக்கமும் செதுக்கப்பட்டிருந்த சிற்பங்களை அணு அணுவாக ரசித்து, அவற்றைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்து கொண்டு...

இது ஒன்றும் அவ்வளவு சுலபமான வேலையில்லைசுத்த பத்தம், அது இது என்றெல்லாம் பார்க்காமல், முனைந்து வேலை செய்ய வேண்டும்; அப்படி செய்தால்தான் அதற்குரிய ஈடுபாடு வரும்; பலனும் கிடைக்கும் என்று முன்கூட்டியே, அன்று காலையில் டாக்டர்.கலைக்கோவன் எங்களுக்கு எச்சரிக்கை செய்திருந்தது நன்கு நினைவிலிருந்ததால், குப்பை கூளங்களும், உரித்த தேங்காய் மட்டைகளும், வருடக்கணக்காக வழிந்து ஓடியிருந்த எண்ணெய்ப் பிசுக்கும், விதவிதமான வண்ணங்களில் சிதறி ஓடியிருந்த பெயர் தெரியா திரவங்களின் மிச்சங்களும், பழங்காலத்துக் கோயில்களுக்கேயுரிய பூச்சிகளின் அணிவகுப்பும் எங்களை பாதிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மாறாக, முகமண்டபத்திற்குள் அவ்வப்போது பிரவேசித்த சில்லென்ற காற்று எங்களுக்குப் புத்துயிர் கொடுத்தது; தடவிப் பார்த்த சிற்பங்களுடன், டாக்டர்.கலைக்கோவனின் உதவியால் எங்களால் பேச முடிந்தது; இதுவரை நாங்கள் அறியாத பல விஷயங்களை அறிந்துகொள்ள முடிந்தது. கோயில்களின் பலவித பாகங்கள் என்னென்ன, செதுக்கப்பட்ட சிற்பங்கள் அணிந்துள்ள அணிகலன்கள் என்னென்ன, அவற்றை எப்படி இனம் கண்டு கொள்வது, போன்ற பல விஷயங்கள் எங்களுக்கு பரிச்சயமாயின. கோயில்களை ஒரு சில முறைகளிலேயே பார்த்துப் பழகியிருந்த நாங்கள் அன்று புதிய பாடங்கள் கற்றுக்கொண்டோம். ஒரே மதியத்தில் எங்கள் அணுகுமுறை மாறியது என்றுதான் சொல்ல வேண்டும்.

எடுக்கவேண்டிய குறிப்புகளையெல்லாம் எடுத்த பிறகு, நாங்கள் வெளியே வந்து வெளிக்காற்றை சுவாசித்த பொழுது, மணி ஆறைத் தாண்டியிருந்தது.

குன்னாண்டார் கோயிலின் பின்பக்கம் இருந்த மலைச்சரிவுக்குச் செல்ல, சில படிக்கட்டுக்கள் வெட்டப்பட்டிருந்தன. அவற்றில் ஏறிச்சென்று, இடிந்தும் அழிந்தும் போயிருந்த கோட்டைச் சுவர்களைப் பார்த்தவாறு, மலைச்சரிவின் மேற்புறத்தில் சாய்ந்துகொண்டோம்.

சூரியன் மேற்கில் இறங்கிக்கொண்டிருக்க, இருள் மெல்ல மெல்ல பரவிக்கொண்டிருந்தது. மாலை வீடு திரும்பும் பறவைகளின் சப்தம் கலப்படமாக காதுகளில் விழுந்தது. எங்களுக்குப் பின்புறம் அழகிய மயில் ஒன்று, யார் இந்த மனிதர்கள்? என்று பார்க்கும் பாவனையில், இடிந்த மதில் சுவரின் மேல் ஒய்யாரமாக வந்து நின்றது. பொழுது சாய்ந்துகொண்டிருந்த அந்தி வேளையில், கோட்டைச் சுவரின் மீது மயிலின் உருவம் தெளிவாகத் தெரிய, இயற்கையின் அற்புதமான ஓவியம் ஒன்றை நாங்கள் கண்டோம்.


எதிற்புறம் இருந்த மரங்கள் காற்றில் சலசலத்தன. மதில் சுவரின் மீதிருந்த மயிலின் குரலுக்கு, அந்த மரங்களிலிருந்து பதில் அகவல்கள் கேட்டன.

யாராவது  கவிதை பாடுங்களேன். இந்த சூழலுக்குப் பொருத்தமாக இருக்கும். என்றார் டாக்டர்.கலைக்கோவன்.

கவிதைக்குப் பொருத்தமாகத்தான் இருந்தது அந்த இடமும், நேரமும். சிறிது நேரம் அதை ரசித்துக் கதையும் கவிதையும் பேசிவிட்டு, நன்கு இருள் விரிந்த பின்னர் அங்கிருந்து கீழே இறங்கினோம்.

இரவு வேனில் திருச்சி திரும்பும்பொழுது, அனைவரும் பாட்டும் கூத்துமாகக் கொட்டம் அடித்துவிட்டு (நான் இந்தப் பாட்டைப் பாடுவேன், இது என்ன சினிமா பாட்டோட மெட்டுன்னு சொல்லுங்க, பார்ப்போம்?" - திருமதி லலிதா) டாக்டரின் வீட்டிற்குச் சென்றோம். மேலும் சில மணி நேரங்கள், அவர் வீட்டில் அறுசுவை உணவு அருந்திவிட்டு, அவரவர் ஹோட்டல் அறைகளுக்குத் திரும்புகையில், மணி பத்தரை ஆகியிருந்தது.

பி.கு: 'குன்னாண்டார் கோயில்' குறித்து நானும், நண்பர் கமலக்கண்ணனும், 2003 ஆம் வருடம் தஞ்சையில் நடந்த Historical Congressஉக்காக ஒர் ஆய்வுக் கட்டுரை தயார் செய்து சமர்ப்பித்தோம். அந்தக் கட்டுரையும் விரைவில்...

   0 comments

Leave a Comment:

Name


Homepage (optional)


Comments