Entry: Sithannavaasal Tuesday, January 20, 2004சித்தன்னவாசல்:


(c) pudukkottai.org


For a picture version of this post, go here.

நார்த்தாமலையைப் பார்ப்பதற்காக மிக ஆவலுடன் நாங்கள் Rockfort Expressஇலிருந்து நேரே குதித்துவிட்டிருந்ததால், ‘கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டால் நன்றாகத்தான் இருக்கும்’ என்று எல்லோருக்குமே தோன்றியது. எப்படியும் புதுக்கோட்டை சென்று ஓட்டலில் எங்கள் வருகையைப் பதிவு செய்ய வேண்டியிருந்ததால், உடனடியாகக் கிளம்பிவிட்டோம். சாலையோரம் நின்று எங்களை வேடிக்கை பார்த்த மயில்களை ரசித்து,(புதுக்கோட்டைப் பிரதேசத்தில் எத்தனை மயில்கள்!) வழியெல்லாம்  நின்ற சிறுவர்களுக்கு கையாட்டிவிட்டு, பதினைந்து நிமிடம் கழித்து ‘Prince Lodge’இன் வாயிலில் நின்றோம்.

 

‘சரியா இருபது நிமிஷத்துக்குள்ள வரணும்’ என்று கமல் உத்தரவு பிறப்பிக்க, உண்மையில் நாங்கள் கிளம்பும் பொழுது மணி பதினொன்றரை. சூரிய பகவானின் புண்ணியத்தில் வெயில் நன்றாக ஏறிவிட்டது. வழியில் திரு. சுவாமிநாதனின் ‘சுதர்சனம்’ என்கிற ஆய்வு மையத்தில் இறங்கி, அவர் எங்களுக்காகத் தயார் செய்து வைத்திருந்த சரித்திரக் குறிப்புகளை வாங்கிக் கொண்டு, புதுக்கோட்டை-அன்னவாசல்-விராலிமலை சாலையில், 16 கி.மீ தொலைவிலிருந்த சித்தன்னவாசலை நோக்கிப் பயணமானோம்.

 

சித்தன்னவாசலும் பாறைப் பிரதேசம்தான். அன்னவாசல் செல்லும் சாலையில் வலதுபுறம் திரும்பினால், 70 மீட்டர் உயரத்தில் முதலில் ‘ஏழடிப்பட்டம்’ எங்களை வரவேற்றது. சிறிய மலைப் பகுதியான ‘ஏழடிப்பட்டம்’தான், அன்றைய சமணர்களின் இருப்பிடமாக இருந்தது. கி.மு. 3ம் நூற்றாண்டில் சமண முனிவர்கள் பயன்படுத்திய கல் படுக்கைகள் இன்று வரையில் அங்கு இருக்கின்றன- அவற்றைப் பற்றிய விவரங்கள் அடங்கிய கல்வெட்டுக்களும் இருக்கின்றன் (துரதிர்ஷ்டவசமாக, ‘ஏழடிப்பட்டத்தை’ நாங்கள் பார்க்கவில்லை). நாங்கள் நேராகப் படையெடுத்தது, ‘ஏழடிப்பட்ட’த்திலிருந்து அரை கி.மீ தொலைவில் இருந்த சமணர் குகைகளுக்கு.

 

‘சிவகாமியின் சபத’த்தில், ஆயனச் சிற்பியாருக்கும், சமண முனிவர் ஒருவருக்கும் நடப்பதாக ஒரு ஓவியப்போட்டியை கல்கி வர்ணித்திருந்தார் அல்லவா? அந்தப் போட்டி நடந்ததாகச் சொல்லப்பட்ட இடம் இந்தக் குகைதான் (உண்மையில் அந்தப் போட்டிச் சம்பவம் கல்கியின் அபாரக் கற்பனை நிகழ்ச்சிகளில் ஒன்றுJ ).

 

இந்தச் சமணர் குகையைப் பார்க்கும் பேறு எங்களுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் கிடைத்ததா என்றால்... அதுதான் இல்லை. அதற்காக நாங்கள் ஏறக்குறைய ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. ஏன்? எங்களுக்கு விஷயத்தை விளக்கிச் சொல்லவேண்டிய வழிகாட்டி (Guide) வந்து சேர்ந்தபாடில்லை. எஞ்சிய பொழுதை ‘வெட்டி’யாகக் கழிக்காமல், எங்களைப் போலவே அங்கு காற்று வாங்கிக் கொண்டிருந்த ஒரு குழு ஆரவாரத்துடன் கிரிக்கெட் விளையாடியதைக் கண்டு ரசித்தோம். நடுவில் சில புகைப்படங்களையும் சுட்டுத் தள்ளியதன் விளவு- எல்லோருக்கும் அகோர தாகம். எங்களுக்கு வசதியாக அங்கே ஒரு லுங்கிப் பேர்வழி ‘அருண் பெப்ஸி’ என்று ஒரு சிறிய பெட்டியில் அடைத்து விற்றுக் கொண்டிருந்தார். ‘பெப்ஸி’யை எப்படி பெட்டிக்குள் வைத்து விற்க முடியும்?’ என்று நாங்கள் குழம்பிக் கொண்டிருக்க, பெட்டியைத் திறந்தால், சிறிய ப்ளாஸ்டிக் பைகளில் உறைந்துபோன Orange Juice! விடுவோமா என்ன? ‘ஒண்ணு போதும்,’ என்றெல்லாம் அலட்டிவிட்டு, ஆளுக்கு குறைந்தது மூன்று குச்சிகளையாவது முழுங்கிவிட்டு (லுங்கி ஆசாமியின் பெட்டியை முக்கால் காலி செய்துவிட்டு) திருப்தியடைந்தோம். அதற்குள் ‘கைடு’ம் வந்துவிடவே, மலையேறும் படலம் ஆரம்பித்தது.

 

நார்த்தாமலையைப் போல், சித்தன்னவாசலும், சிறிய மலைதான். அங்கங்கே சிறிய புதர்கள்...மலைச்சரிவைத் தாண்டி பச்சைப் பசேல் வயல் வெளிகள். ஆளரவமற்ற தனிமை. ‘இப்பொழுது வருடம் 642 AD’ என்று சொன்னால் நம்பக் கூடிய தனிமை. சில விஷயங்கள் மாறுவதில்லை போலும்.

 

மலைச்சுவரிலேயே வெட்டப்பட்ட படிகள் மேலேற, தொலைவில் வலை போட்ட கதவுகள் எங்களை வரவேற்றன. உள்ளே நுழைந்தால்...’சில்’லென்ற கல்தரையுடன் சமணர் குகை. எங்கள் தலைக்குமேல் அழிந்தும் அழியாததுமாக வண்ண ஓவியங்கள். வெளி மண்டபத்தில் இடதுபக்கமும் வலப் பக்கமும் இருபத்துமூன்றாவது தீர்த்தங்கரரான ‘பார்சுவனாத’ரும், மற்றுமொரு ஜைன ஆச்சார்யரும் நிஷ்டையில் அமர்ந்திருக்கின்றனர். உள்ளே ஒரு சிறிய சன்னதி- அதில் ஒரு சுவரில் மூன்று ஜைன ஆச்சார்யர்கள் ஆழந்த தவத்தில் மலைச்சுவரில் குடையப்பட்டு காட்சியளித்தனர்.

 

இந்தக் குகைக்கு ‘ஐவர் கோயில்’ என்ற பெயர் உண்டு. 815AD- 862 AD வருடங்களில் ஆட்சி செய்த ஸ்ரீமாற ஸ்ரீவல்லப பாண்டிய மன்னனின் ஆட்சிக் காலத்தில், இளம் கௌதமன் என்னும் சமண முனிவரால் முன் மண்டபம் புதுப்பிக்கப்பட்டதாக 9ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் சொல்கின்றன.

 

வெளி மண்டபத்தில் -அதாவது அர்த்த மண்டபத்தில்- தலையை மேலே தூக்கிப் பார்த்தால்...அடேங்கப்பா!


(c) pudukkottai.orgஒரு தாமரைக் குளம். நீல நிறத் தண்ணீரில் அங்கங்கே சாம்பல் நிறத்தில் மீன்கள் துள்ளுகின்றன. ஒரு யானையின் மீது ஜைன ஆச்சார்யர் ஒருவர் கம்பீரமாக வலம் வருகிறார். இன்னொரு சமண முனிவர் தாமரைகளை மென்மையாகப் பறிக்கிறார். அங்கங்கே அன்னப் பறவைகள் ஒயிலாக நிற்கின்றன. பச்சை, நீலம், மஞ்சள், கருப்பு, வெள்ளை என்று நிறங்கள் ஒன்றை ஒன்று தூக்கியடிக்கின்றன.

 

அர்த்த மண்டபத்தில் முகப்பில் நிற்கும் தூண்களில் இரு அப்ஸர மங்கையர் நாட்டியம் ஆடுகின்றனர். இருவரும் உயர்ந்த பட்டும், நகைகளும் அணிந்து மிக அழகாகக்(ஆனால் மங்கலாகக்) காட்சியளிக்கின்றனர். உற்றுப் பார்த்தால் சுவற்றில் இருந்து இறங்கியே வந்து விடுவார்கள் என்று தோன்றுகிறது. உள் மண்டபத்திலும் அதேபோல், கூரையில், தரையில் விரிக்கும் ரத்தினக் கம்பளத்தைப் போல் அழகான சித்திரங்கள் இருக்கின்றன. ஓவியங்களில் ‘அஜந்தா’ ஓவியங்களின் தாக்கம் நிறைய இருக்கிறது.

 

மனதைப் பாதிக்கும் ஒரே விஷயம்- இவையெல்லாமே சிதைந்து கிடக்கின்றன. அங்கங்கே சித்திரங்கள் உருத்தெரியாமல் அழிந்தும் போயிருக்கின்றன.

 

புகைப்படக் கருவிகள் அனுமதிக்கப்படவில்லையென்பதால் எங்களால் புகைப்படங்கள எடுக்கமுடியவில்லை. கண்களாலேயே ரசித்துக்கொண்டோம்.

 

சற்று நேரம் மலைக் குகையின் குளுமையை அனுபவித்தவாறு அங்கேயே உட்கார்ந்திருந்தோம். எங்கள் வழிகாட்டி எங்களுக்கு ஓவியங்களைப் பற்றி விளக்கி முடிக்க, ஜைன ஆச்சார்யரின் காலடியில், ‘சிவகாமியின் சபத’த்தைப் பற்றிய சர்ச்சை ஆரம்பித்தது. எப்படி என்றே தெரியவில்லை- கொஞ்சம் கொஞ்சமாக அது கல்கி -ஜெயகாந்தன் -அசோகமித்திரன் –பாலகுமாரன் ஆகியவர்களின் எழுத்தைப் பற்றிய கலந்துரையாடலாக மாறிவிட்டது. சித்தன்னவாசலின் பழைமையான சித்திரங்களுக்கிடையில் விசித்திரமான ஒரு விவாதம்தான்.

 

‘ஐவர் கோயி’லை விட்டு மலைப்பாதியில் இறங்கும் பொழுது படிகளின் மேல் சற்றுத் தாமதித்தேன். அங்கிருந்து பார்த்தால், பாறைகளைத் தாண்டி, புதர்களைத் தாண்டி, சிறிய கிராமங்கள் தெரிந்தன. தூரத்தில், மரக்கூட்டங்கள் தெரிந்தன. இடதுபக்கம் ஏழடிப்பட்டத்தின் ஆரம்பம் தெரிந்தது.

 

அதிகமில்லை- ஆயிரத்து இருநூறு வருடங்களுக்கு முன்னால் - இங்கே பாண்டிய மன்னர்கள் வந்து போயிருந்திருக்கின்றனர். ஓவியர்களும் சிற்பிகளும் பாறைகளில் தங்கள் கைவண்ணத்தைப் பதிப்பதில் ஆர்வமாக இருந்திருக்கின்றனர். சமண முனிவர்கள் தவம் செய்திருக்கின்றனர். நாங்கள் நிற்கும் படிகளில் அவர்களது பாதங்களும் பட்டிருக்கின்றன. கண்களை மூடினால் எங்களுக்கும் அவர்களுக்கும் இருக்கும் இடைவெளி குறைவது போல் ஒரு பிரமை.

 

‘சட்’டென்று கண்ணைத் திறந்தால் ஒரு சமண முனிவர் எங்கள் எதிரில் நிற்பாரோ?

 

பிரிய மனமில்லாமல் சித்தன்னவாசலை விட்டு நகர்ந்தோம்.

   1 comments

sundaravadivel
February 1, 2004   09:19 AM PST
 
நான் புதுக்கோட்டை மாவட்டத்துக்காரன். ஆனாலும் இந்த அழகைக் காணாமலேயே ஓடி வந்துவிட்டேன். அடுத்த முறை ஊருக்குப்போகும்போதாவது பார்க்க வேண்டும். நன்றி.

Leave a Comment:

Name


Homepage (optional)


Comments