Entry: Kodumbaloor Tuesday, February 10, 2004கொடும்பாளூர்


For a picture version of this post, go here.

பொன்னியின் செல்வனின் இளவரசி வானதியைத் தந்த கொடும்பாளுர். வீரர் பூதி விக்கிரமக் கேசரியை அறிமுகப்படுத்திய கொடும்பாளுர். கல்கியின் வர்ணனைப்படி பொட்டல்காட்டு பிராந்தியமான, சோழநாட்டின் அபரிமிதமான நீர்வளமற்ற கொடும்பாளூர். எப்படித்தான் இருக்கும் இந்த ஊர்? என்ற பார்க்கத் தூண்டிய கொடும்பாளூர்.

அப்படிப்பட்ட கொடும்பாளூரின் பிரசித்தி பெற்ற மூவர் கோயிலுக்கு(புதுக்கோட்டையிலிருந்து 35 கி.மீ.தொலைவு),  நாங்கள் வந்து சேர்ந்த பொழுது மாலை மணி ஐந்து. வெயிலின் சூடு தணிய ரம்பித்திருந்தது. மெல்லிய காற்று எங்களைச் சுற்றிக் கொண்டு, சாலை மணலை வருடிச் சென்றது.

கல்கியின் வர்ணனை சரியாகத்தான் இருக்கிறது. கருவேலமரங்களும், வறண்ட நிலமுமாகத்தான் இருக்கிறது இளவரசி வானதியின் பிறந்த வீடு. அங்கங்கே வயல்வெளிகள் மனதுக்கு இதமளிக்கின்றன.

சாலை வளைந்து திரும்பியதும், இரு சிறிய கோயில்கள் கண்ணுக்குத் தெரிகின்றன. சுற்றிலும் மண்டபங்கள் இருந்ததற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

கொடும்பாளூரின் பல கோயில்களுள், மூவர் கோயிலும், முசுகுந்தேஸ்வரர் கோயிலும்தான், அந்தப் பிரதேசத்தின் சிற்ப வேலைப்பாட்டிற்குப் பெயர் போனதாகக் கருதப்படுகின்றன.

ஒரு காலத்தில், மூவர் கோயில் கண்ணைப் பறிக்கும் அழகுடன், வித்தியாசமான சிற்பக் களஞ்சியமாக விளங்கியிருக்க வேண்டும். இப்பொழுதோ, பெயருக்கேற்ப இருக்க வேண்டிய மூன்று கோயில்களுக்குப் பதில், இரு கோயில்கள் மட்டுமே மிஞ்சியிருக்கின்றன. மூன்றாவது கோயிலின் அடித்தளம் மட்டுமே பரிதாபமாகக் காட்சியளிக்கிறது.

சோழர்களின் காலத்தில் கொடும்பாளூர் பிரசித்தி பெற்று விளங்கியது இருக்கட்டும்- சிலப்பதிகாரத்தின் காலத்திலிருந்தே இது கொடும்பை என்ற பெயருடன் புகழ் பெற்றிருந்திருக்கிறது. இருக்குவேளிர் குலத்தின் முக்கிய நகரமாக இருந்த இது, பழங்காலத்தில் இருக்குவேளூர் என்ற பெயர் கொண்டிருந்திருக்கிறது. கோனாட்டுக் கொடிநகரம் என்று பெரியபுராணத்திலும் பெயர் பெற்றிருக்கிறது.

றிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரை இருக்குவேளிர்களின் திக்கத்திற்குள் இருந்த கொடும்பாளூர், திரூப்புறம்பியத்தில் சோழர்கள் பல்லவர்களையும் பாண்டியர்களையும் முறியடித்த பிறகு (880 AD) சோழர்கள் வசம் வந்திருக்கிறது. பதினான்காம் நூற்றாண்டு வரை சோழர்களின் பராமரிப்பில் இருந்த பிறகு, முஸ்லிம் படையெடுப்பில் நகரம் அழிந்து போயிருக்கலாம் என்று சொல்கிறார்கள். வாணிபத்தில் கொழித்து, நானா தேசத்து ஐந்நூற்றுவரின் திக்கத்தில் செழித்திருந்த இந்த நகரத்தில் இப்பொழுது மிஞ்சியிருப்பவை சில கோயில்கள் மட்டுமே.

மூவர் கோயிலைக் கட்டியது பெருவீரனான பூதி விக்கிரம கேசரி. கல்வெட்டுக்களின் படி பார்த்தால், தன் பெயரிலும், தன் இரு மனைவியரான நங்கை கற்றளி பிராட்டி மற்றும் வரகுணாவின் பெயரிலும் (பெயர்கள் அட்டகாசமாக இல்லை?) கட்டியிருந்திருக்கிறார் (மனைவியரின் மேல் எவ்வளவு பாசமிருந்தால் இப்படிச் செய்யத் தோன்றும்?). கல்வெட்டுக்கள் இப்படி சொன்னாலும், மூவர் கோயில் என்ற பெயருக்கு வித விதமான காரணங்கள் உலவுகின்றன. அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர் மூவரின் பெயரால் எழுப்பப்பட்டது என்கிறார்கள் சிலர். சிவன், விஷ்ணு, பிரம்மா மூவருக்காகவும் எழுப்பப்பட்டது என்பது இன்னொரு கதை.

திரு. சேஷாத்ரி, தன்னுடன் எடுத்து வந்திருந்த புத்தகத்திலிருந்து, கொடும்பாளூர் கோயிலைப் பற்றி படித்துச் சொன்னதும்(அநேகமாக, நாங்கள் பார்த்த அனைத்துக் கோயில்களுக்கும் அவர் இந்த மாதிரி குறிப்புகள் படித்துக் காட்டினார். அவை மிக உதவியாக இருந்தன), கோயிலைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம்.

Moovar Koil - Kodumbaloor

மூவர் கோயிலில் பல்லவர் பாணியின் தாக்கம் நிறைய இருப்பதாகத் தெரிகிறது- இருக்குவேளிர்களுக்கும், பல்லவர்களூக்குக் கீழே சிற்றரசர்களாக இருந்த முத்தரையர்களுக்கும், பெண் எடுத்துப் பெண் கொடுக்கும் சொந்தம் இருந்ததால், பல்லவச் சிற்பக் கலையின் தாக்கம் தெரிகிறது என்றும் சொல்கிறார்கள்.

ASIயால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வழிகாட்டி, முதலில் ஸ்பெஸ்டாஸ் கூரையுடன் இருந்த சிறிய கட்டிடம் ஒன்றிற்குள் எங்களை அடைத்தார். உள்ளே உடைந்தும் உடையாமலும், சிற்பங்கள், சிற்பங்கள், சிற்பங்கள். கையை மடித்து அருள்புரியும் விஷ்ணு பகவான், முகத்திற்கு ஒப்பனை செய்து கொள்ளும் குமரியிலிருந்து, ஒயிலாகப் போஸ் கொடுக்கும் துவாரபாலகர் வரை, அவசரமாக அடுக்கப்பட்ட கொலு வரிசை போல் வீற்றிருந்தார்கள். மூவர் கோயிலைச் சுற்றிக் கண்டெடுக்கப்பட்ட சிலைகளாம் அவை. பாதுகாப்பிற்காக இங்கே வைத்திருக்கிறார்கள். சும்மா சொல்லக்கூடாது- இந்த நிலையிலும் அவற்றின் அழகு துளியும் குறையவில்லை. கோயில் வளாகத்தில் இடம் பெற்றிருந்த பொழுது இன்னும் எவ்வளவு அழகாகத்தான் இருந்திருக்கும்?

வெளியிலே, சுந்தரம் சார் அங்கே குழுமியிருந்த கிராமத்துப் பொடிசுகளை கிண்டலடித்துக் கொண்டிருக்க (சினிமாவுக்கு வர்றியா, ஜோதிகா மாதிரி க்கி விடறேன்- பொடிசுகளிடமிருந்து ஒரே சிரிப்பு)- நாங்கள் ASIயின் புண்ணியத்தில் செதுக்கப் பட்டிருந்த புல்வெளியைத் தாண்டி கோயில்களை நெருங்கினோம்.

முதற்கோயிலுக்குள் ஒரு சிவலிங்கம் தனித்து, வுடையார் துணையில்லாமல் நிற்கிறது. அண்ணாந்து பார்த்தால், விமானத்தின் உட்புறம் மே...லே செல்கிறது. இரண்டாவது கோயிலுக்குள் தெய்வ உருவம் எதுவும் இல்லை. பூட்டப் பட்டு இருக்கிறது.

கோயில்களின் மேன்மாடங்களை அபூர்வச் சிற்பங்கள் அலங்கரிக்கின்றன- கங்காதரர், பிட்சாடனர், கையில் வீணையை ஒயிலாக வைத்துக்கொண்டு, புரிபடாத புன்னகை ஒன்றைச் சிந்தும் வீணாதரமூர்த்தி - உமையவள் பாதியும், சிவபெருமான் பாதியுமாக நிற்கும் அர்த்தநாரீஸ்வரர், ரிஷபாரூடராகக் காட்சியளிக்கும் சிவ பெருமான்.

காலாரிமூர்த்தியாக, கால்கள் அசுரனைத் துவைத்தாலும், முகத்தில் புன்னகையுடன் நர்த்தனமாடும் சிவ பெருமான். இன்னுமொரு மாடத்தில், பார்வதி தேவி ஒரு புறம் திரும்பியிருக்க, கெஞ்சலுடன் அழைக்கும் சிவபெருமான். அதற்குக் கீழ் மாடத்தில், சண்டைச் சச்சரவுகள் தீர்ந்த நிலையில் முகத்தில் மந்தகாசத்துடன் நிற்கும் உமையவளும் ஈஸ்வரனும். அவர்களுக்குச் சற்றுத் தொலைவில் பயபக்தியுடன் கவரி வீசும் நங்கை.

எங்கெங்கு காணினும் சிற்பங்களடா!

ஒரு ஓரத்தில் கிணறு ஒன்று இருக்க, அதற்கு அருகில் தண்ணீரின் விளிம்பு வரைச் செல்லும் படிகள் இருக்கின்றன. மேலேயிருந்து ஒருவர் பார்க்க, நாங்கள் படிகளில் (செத்த நண்டுகளை ஜாக்கிரதையாகத் தாண்டிக் கொண்டு) இறங்கி தலையை நீட்ட, புகைப்படங்கள் சுட்டுத் தள்ளப்பட்டன. 

சாயங்கால வெய்யிலில், தென்னந்தோப்பின் பின்னணியில், இடிந்து தரை மட்டமாகியிருந்த முன் மண்டபங்களைத் தாண்டிக் கொண்டு, இறுதியாக மூவர் கோயிலை ஒரு நோட்டம் விட்டோம். அழகான கோயில். அற்புதமான சிற்பங்கள். சோழர் காலத்தில் இன்னும் எப்படித்தான் இருந்திருக்கும் என்னும் கற்பனை மனதில் எழுந்தது.

அந்த நினைவுகளுடனேயே வேனை நோக்கி நடந்தோம்.

   4 comments

L.K.MATHI & RAJESWARI MATH
January 9, 2005   07:24 AM PST
 
EVENTHOUGH WE ARE NATIVE OF THIRUCHY AND THANJAVUR AREA,WE HAVE NOT VISITED SO MANY TEMPLES IN OUR DISTRICT. YOUR ARTICLE IS VERY MUCH USEFUL AND INTEREST.BEST WISHES FOR YOUR CONTRIBUTION.
Princess
February 11, 2004   03:20 AM PST
 
Konjam wait pannunga. Neraiya photo irukku - appappa upload panren.:-)
Paari
February 11, 2004   12:55 AM PST
 
naanthaanga post panninathu. mulusaa mutikirathukkulla vanti kilambituchchu
-paari
P
February 11, 2004   12:54 AM PST
 
Neenga eduththa matra kovil sambandhamaana photokalaiyum valaiyil ida mutiyumaa?
thanks in advance

Leave a Comment:

Name


Homepage (optional)


Comments