Entry: Kudumiyaan Malai Thursday, February 19, 2004குடுமியான்மலை

For a picture version of this post, go here.

அந்தி மாலை வேளைக்கு எப்பொழுதும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. எப்பேர்ப்பட்ட இடமும், சூரியன் மறையும் பொழுதில் மிக மிக அழகாகத் தோன்றும். அழகற்ற இடங்களுக்கே இப்படியென்றால், உயர்ந்த மலையைப் பின்னணியாகக் கொண்ட குடுமியான்மலை எப்படியிருக்கும்?

புதுக்கோட்டை-மணப்பாறை-கொடும்பாளூர்ச் சாலையில் 20 கி.மீ தொலைவில் இருக்கும் குடுமியான்மலைக்கு நாங்கள் வேனில் ஒரு குலுக்கலுடன் நின்ற பொழுது, மாலை மணி ஆறேகால்.

நிமிர்ந்து பார்த்தபொழுது, கோயிலின் கோபுரத்தைத் தாண்டி மலை உயர்ந்து நின்றது. மலைக்குப் பின்னால் இறங்கும் சூரியக் கிரணங்கள் ஒரே ஒரு நிமிடம் ஒளிபாய்ச்சி விட்டு, சட் டென்று மறைந்தன. வாயிலில் சற்றே தாமத்தித்துவிட்டு, உள்ளே நுழைந்தோம். அப்படி நுழைந்த பிறகுதான், குடுமியான்மலையின் சிறப்பு எப்படிப்பட்டது என்பது எங்களுக்குப் புரிந்தது.

A Silai at KudumiyanMalai


முற்காலப் பாண்டியர்களின் காலத்தில்- அதாவது ஏறக்குறைய ஏழாம் நூற்றாண்டில், சிறிய குடைவரைக் கோயிலாக மட்டுமே இருந்த குடுமியான்மலை, வருடங்கள் செல்லச் செல்ல, மெல்ல மெல்ல பெரிய கோயிலாக உருவெடுத்தது. குடுமியான்மலைக்கு அக்காலத்தில் வேறு பெயர்கள் இருந்திருக்கின்றன- திருநலக்குன்றம் என்பது ஒரு பெயர். திருநிலக்குன்றம் என்பது இன்னொரு பெயர். இரண்டாம் ராஜராஜசோழன் காலத்தில் ( 1146-1163) சிகாநல்லூர் என்ற பெயரும் வழக்கில் இருந்திருக்கிறது.

AD 1215- 1265 வருடங்களுக்குள், கோயில் திருப்பணி செய்யப்பட்டிருக்கலாம் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.

கோயில் வளாகத்திற்குள் மொத்தம் மூன்று கோயில்கள் உள்ளன- மேலக்கோயில் அல்லது திருமேற்றளி என்பது ஒன்று, சிகாநாதர் அல்லது குடுமிநாதரின் கோயில் இரண்டாவது, சௌந்தரநாயகியம்மன் கோயில் மூன்றாவது. இவை தவிர, மலை மீது முருகப்பெருமானுக்கும் ஒரு கோவில் உண்டாம்.

உள்ளே மண்டபத்திற்குள் நுழைந்தவுடன், முதலில் கண்ணில் படுவது- ஒவ்வொரு தூணிலும் இழைக்கப்பட்டிருக்கும் ளுயரச் சிற்பங்கள். சிற்பங்கள் பலவிதம்- ஒவ்வொன்றும் ஒரு விதம். புன்னகையுடன் அருள்புரியும் கணபதி, இராவணன், ஆஞ்சநேயர்...அருகில் இருக்கும் மண்டபங்களின் தூண்களில் சில சாய்ந்து, இடிந்து போயிருக்கின்றன. உள்ளே நுழைவது ஆபத்து என்று போர்டே வைத்திருக்கிறார்கள்.

கருவறைக்குள்ளே குடுமிநாதர் (அல்லது சிகாகிரீஸ்வரர்), உச்சியில் குமிழ் போன்ற ஒன்றுடன் காட்சி தருகிறார் (சுயம்புலிங்கம் என்று சொல்கிறார்கள்).

குடுமிநாதர் சன்னதியின் வெளிப் பிரகாரத்தைத் தாண்டி வந்தால், சௌந்தரநாயகி அம்மனின் சன்னதிக்கு வரலாம். எளிமையாக, அதிக அலங்காரங்கள் அற்று விளங்குகிறது. ஒரு சிறிய கிணற்றுக்கு அருகில், அம்மன் சன்னதியின் படிக்கட்டுக்களில் உட்கார்ந்து இளைப்பாறினோம்.

Another silai

பொதுவாகக் கோயில்களில் கல்வெட்டுக்கள் இருக்கும்- யார் கட்டியது, எப்போது கட்டியது, யார் பராமரிப்பது, அதற்குரிய நிவந்த விவரங்கள் போன்ற விஷயங்களைக் குறிக்கும். குடுமியான்மலையில் ஏறக்குறைய 120 கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவற்றில் தனிச்சிறப்பு வாய்ந்தது...

13 X 14 அளவுடைய, பல்லவ கிரந்த எழுத்துக்களால் ஆன, இசைக்கல்வெட்டு. சித்தம் நமச்சிவாய எனத் தொடங்கும் இந்தக் கல்வெட்டு, இசை இலக்கணத்தையும், யாழினையும் விவரிக்கிறது. கோயிலைத் தாண்டி, பூட்டியக் கதவுடன் இருக்கும் ஒரு பகுதியில், மலைச்சுவரில் வெட்டப்பட்டிருக்கிறது. நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நாட்டிய சாஸ்திரம் என்ற நூலுக்கும், பதின்மூன்றாம் நூற்றாண்டின்பொழுது இயற்றப்பட்ட சங்கீத ரத்னாகரம் என்ற நூலுக்கும் இடைப்பட்ட காலத்தில் பொறிக்கப்பட்ட இந்தக் கல்வெட்டு, இந்திய இசையைப் பொறுத்தவரை, மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

ஏழு ஸ்வரங்களைப் பற்றிய விவரங்களை ஏழு பகுதிகளாகக் கொடுக்கும் இந்தக் கல்வெட்டில், பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் உருவாக்கியதாகச் சொல்லப்படும் ஸங்கீர்ண ஜாதியைப் பற்றிய விஷயங்களும் அடங்கியிருக்கின்றன. இதன் காரணமாக, ஸங்கீர்ண ஜாதிப் பிரகரணர் என்ற பட்டமும் அம்மன்னனுக்கு வழங்கப்பட்டதாகச் சொல்வார்கள்.

ஆவலுடன் நான், திரு.சீதாராமன், விக்கி, ஆகியோர் பூட்டிய கதவைத் த்றந்த வழிகாட்டியின் பின்னால் நுழைய...அங்கே இடதுபக்கம் இருந்த மண்டபங்களைத் தாண்டி, நேர் எதிரே, பெரிய மண்டபம் ஒன்றின் கூரையில், சுவர் முழுதும் பரவியிருந்த இசைக் கல்வெட்டுக்களை லேசாக மறைத்தபடி மெகா சைஸில் நான்கு தேனடைகள் தொங்கிக் கொண்டிருந்தன. அவற்றைச் சுற்றி தேனீக்கள் விர்ரென்று பறந்துகொண்டிருந்தன.

காலைலியே ஆபீஸரைக் கொட்டிடுச்சுங்க... என்று எங்கள் வழிகாட்டி சொல்லும் பொழுதே, ஒரு தேனீ ஆசையுடன் விக்கியைத் துரத்த ரம்பிக்க - அவ்வளவுதான், ஓட்டம் பிடித்தோம். (திரு. சேஷாத்ரிதான் தன்னுடைய புத்தகத்தின் உதவியுடன் விக்கியின் கூந்தலை விட்டுப் பிரிய மனமில்லாத அந்தத் தேனீயை விடாப்பிடியாகப் பிடுங்கியெடுத்தார். :-)).

பூட்டிய வளாகத்திற்கு வெளியிலிருந்து பார்த்தால், மலைச்சுவரிலே சிறிய புள்ளிகளாக ரிஷபத்தின் மேல் சிவ பெருமானும், பார்வதி தேவியும், கைலாயவாசிகளும் தெரிகின்றனர். அவை, அக்காலச் சிற்பிகளின் கைத் திறனை அப்படியே படம் பிடித்துக்காட்டுகின்றன.

குடுமியான்மலைக் கோயிலின் வாயிலில் புகைப்படங்கள் சிலவற்றை எடுத்துக் கொண்டு, கோயிலை இறுதியாக கண்களில் நிரப்பிக் கொண்டு, கிளம்பினோம்.

   2 comments

Princess
March 4, 2004   06:52 AM PST
 
Dubukku...glad you enjoyed it:-). Kalki would have written about the Pandyas - if he'd livd longer, I guess.
Dubukku
March 3, 2004   07:04 AM PST
 
I am one of those ardent fans of Kalki after reading Ponniyin Selvan.
Tirunelveli karan enbathal Cholargalai vida Pandiya mannargalidam konjam edubadu adhigam. Kalki en pandiyarkala pathi ezhuthama poitarenu romba varutham. P.selvanil pandiyargalai pathhi padikkum pothu konjoondu kastama than irundhathu. But still Cholargalaiyum pidikkum. :P

Leave a Comment:

Name


Homepage (optional)


Comments