Entry: Thirumayam Sunday, March 21, 2004Day 2 (Sunday, June 8, 2003)


திருமயம்
குறிப்பு: இந்தக் கட்டுரை 'திசைகள்' இணைய இதழில் வெளிவந்துள்ளது.  For a picture version of this post, go here.

இரண்டாம் நாள் காலை ஏழரை மணிக்கு, காலை உணவை முடித்துக் கொண்டு திருமயம் நோக்கிப் படையெடுத்தோம்.

படையெடுத்ததற்குக் காரணம் இருக்கிறது- திருமயம் என்பது கோயில் மட்டுமல்ல- ஒரு கோட்டையும் கூட. திருச்சிராப்பள்ளி- இராமேஸ்வரம் சாலையில் (NH-210), புதுக்கோட்டைக்குத் தெற்கே 20 கி.மீ தொலைவில் இருக்கும் திருமயத்தை, சாலையிலிருந்து பார்த்தாலே, மலையின் உச்சியில் தெரியும் கோட்டை காட்டிக் கொடுத்து விடும். ரோட்டிலிருந்து பிரியும் மதில்சுவர்களை ஒட்டி வந்தால், ஒரு சந்து திரும்பியவுடன், திருமயம் கோட்டையின் அழகு பளிச்சென்று கண்ணில் விரியும்.

View of the fort

முந்தைய நாள் எரித்த வெயில் இப்பொழுது காணாமல் போயிருந்தது. மேகங்கள் சூழ்ந்து கொண்டிருக்க, குளிர்ச்சியான காலை வேளையில் நாங்கள் கோட்டை வாயிலில் இறங்கினோம். ஒன்பது மணிக்குத்தான் கோட்டைக் கதவுகளை (Gate ) ASIக்காரர்கள் திறப்பார்கள் என்று தெரிய வரவே, கோட்டையின் முன்பக்கமான மலைச்சுவரை ஒட்டி நடந்தோம். மலைச்சுவர் சரிவாக மேலேற- ஏறிப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் வராது?

மலைச்சுவர் முடியும் இடத்தில், கறுப்பாக ஒரு பொந்து போல் ஏதோ கண்ணுக்குப் புலப்பட்டதும், அது என்னவென்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் தலை தூக்கியது. அவசரமாக மேலேறிய பொழுது, சிறிய குகைதான் அது என்று புரிய, மிச்சப் பொழுதை அங்கேயே பாறைகளின் மேல் கழித்தோம். அங்கிருந்து பார்த்தால், மலையை ஒட்டியிருக்கும் பச்சைப் பசேலென்ற குளமும், சற்று தூரத்தில், சாலையை ஒட்டி கண்ணாடியைப் போல் ஜொலித்துக் கொண்டிருந்த இன்னொரு குளமும் தெரிந்தன. காலை வேளையின் ஜிலி ஜிலுப்பை ரசித்தவாறு அங்கேயே சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு, மலைச்சரிவுக்கு அருகில் பத்தான கோணத்தில் சாய்ந்து நின்ற பாறை ஒன்றின் மீது ஏறியே தீருவேன் என்று அடம் பிடித்த நண்பர்களையும் இழுத்துக் கொண்டு, மலையடிவாரத்திற்கு வந்து சேர்ந்தோம்.

கோட்டைக் கதவுகள் திறக்கும் நேரத்திற்குள் கோயிலைப் பார்த்துவிடலாம் என்று ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட, பைரவர் சன்னதியைப் பார்த்துவிட்டு, வேனை நோக்கி நடந்தோம். கோட்டைக்குச் சற்றுத் தள்ளி, மலையைச் சுற்றிக் கொண்டு, சிவன் மற்றும் விஷ்ணு கோயில்களுக்கு வந்து சேர்ந்தோம்.

திருமயம் சிவன் கோயிலின் ஓவியங்களையும், கல்வெட்டுக்களையும் வைத்து, அது ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று சொல்கிறார்கள். பிற்காலத்தில், திருமயம் சோழர்கள் கைவசம் வந்து விட்டது. 12 மற்றும் 13ம் நூற்றாண்டுகளில் ஹொய்சளர்களின் ஆதிக்கத்தில் இருந்துவிட்டு, பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்து பாண்டியர்களின் கைக்கு வந்திருக்கிறது. இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன், இரண்டாம் ஜடாவர்மன் வீர பாண்டியன் ஆகியோரின் காலத்திலிருந்து கல்வெட்டுக்களும் காணக் கிடைக்கின்றன.

16 மற்றும் 17ம் நூற்றாண்டுகளில், ராமநாதபுரம் சேதுபதிகளின் ஆட்சியில் இருந்த திருமயத்தைப் பற்றி இன்னொரு சுவாரஸ்யமான விஷயமும் சொல்கிறார்கள்- 1799ம் வருடத்தின் பொழுது, பாஞ்சாலங்குறிச்சியின் வீர பாண்டிய கட்டபொம்மனும், ஊமைத்துரையும் இங்கேதான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனராம்/மறைந்திருந்தனராம். எவ்வளவு தூரம் இது உண்மை என்றுதான் தெரியவில்லை. கொசுறாக இன்னொரு தகவல்: சுதந்திரப் போராட்ட வீரர் திரு. சத்தியமூர்த்தி பிறந்த இடமும் திருமயம்தான் (1887 AD).

திருமயத்தின் விஷ்ணு கோயிலுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. திருவரங்கத்தின் கோயிலை விட இது பழைமையானது என்றும், அதனாலேயே இதற்கு ஆதி ரங்கம் என்றும் பெயர் ஏற்பட்டது என்றும் சொல்கிறார்கள். விஷ்ணு கோயிலுக்குள்ளேயே இரு சன்னதிகள் இருக்கின்றன- வேலைப்பாடமைந்த கற்றளியான சத்தியமூர்த்தி கோயில் ஒன்று. மலைச்சுவரிலேயே குடையப்பட்ட குடைவரைக் கோயில் ஒன்று. இதில் கோயில் கொண்டிருப்பவர் யோக சயன மூர்த்தியான திருமெய்யர். திருமெய்யத்தின் பள்ளி கொண்ட பெருமாள், மது கைடபர் என்னும் இரு அசுரர்களிடமிருந்து பூமி தேவியையும், தேவர்கள், கின்னரர்களையும் காப்பாற்றுகிறார் என்கிறது தல வரலாறு.


   மையார் கடலும் மணிவரையும் மா முகிலும்
   கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட
   மெய்யானை மெய்யமலையானைச் சங்கேத்தும்
   கையானை கைதொழாக் கையல்லகண்டாமே.

என்று திருமங்கையாழ்வார், திருமெய்யரின் புகழ் பாடியிருக்கிறார்.


View of the fort from the Temple

 

திருமெய்யரின் சந்நதியிலிருந்து வலது பக்கம் சென்று, கோயிலின் மேல் கவிந்திருக்கும் மலைச்சுவரின் அடியில் செல்லும் இடைவெளியில் நுழைந்து வெளிவந்தால், சத்யமூர்த்தியின் ஆலயத்திற்கு வந்துவிடலாம்.

திருமயத்தில் மொத்தம் பத்தொன்பது கல்வெட்டுக்கள் இருக்கின்றன- சிவன் கோயிலில் ஐந்து, விஷ்ணு கோயிலில் பதிநான்கு. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச்(அல்லது ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியைச்) சேர்ந்த சில கல்வெட்டுக்கள், சத்யமூர்த்திப் பெருமாளின் சன்னதியின் மேற்கு பிராகாரத்தில் காணப்படுகின்றன. முத்தரையர் தலைவரான சாத்தன் மாறன் என்பவரின் தாயார், குடைவரைக் கோயிலைத் திருப்பணி செய்து, நிதியும் கொடுத்துதவினார் என்கின்றன இந்தக் கல்வெட்டுக்கள். 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கல்வெட்டுகளும், 15, 16ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த விஜயநகர அரசின் கல்வெட்டுக்களும் காணக்கிடைக்கின்றன.

சிவன் கோயில் மண்டபத்தின் வலப்புறம் இருக்கும் சுவற்றில், பரிவாதினி-தா என்று ஆரம்பமாகும் இசைக்கல்வெட்டுக்கள் இருக்கின்றன. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கல்வெட்டுக்கள், கிரந்த எழுத்துக்களில் வெட்டப்பட்டிருக்கின்றன. இந்தக் கல்வெட்டைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான செய்தி: கல்வெட்டின் மேல் பகுதியில் 13ம் நூற்றாண்டின் தமிழ் எழுத்துக்கள் காணப்படுகின்றன. அவற்றுக்கடியில் இசைக்கல்வெட்டு உருத்தெரியாமல் அழிந்திருக்கிறது. 13 ம் நூற்றாண்டில் அப்படியென்ன நடந்தது?

வேறொன்றுமில்லை- சிவன் மற்றும் விஷ்ணுக் கோயில்களின் நிர்வாகத்தினருக்குள் எற்பட்ட சச்சரவு, ஹொய்சள சேனாதிபதி அப்பண்ண தண்டநாயகரால் தீர்த்து வைக்கப்பட்டது. அந்தச் செய்தியைத் தான் குறிப்பிட்டிருக்கிறார்கள். (ஆழ்வார்க்கடியானும் வீரசைவரும் அடித்துக் கொண்டது ந்னைவுக்கு வரவில்லை?)

கோயிலுக்கு கிழக்கே, எண்கோண வடிவில், (பாசியின் மிகுதியால்) பச்சை நிறத்தில் பள பளக்கும் நீருடன், கச்சிதமாக அமைந்திருக்கும் சத்ய புஷ்கரணியை ரசித்துவிட்டு, கோயிலிலிருந்து கிளம்பினோம். (சத்யகிரீஸ்வரர் கோயில் கொண்டிருக்கும் சிவன் கோயிலை நாங்கள் பார்க்கவில்லை. )

Sathya Pushkarani

ஊமையன் கோட்டை என்று அந்தப் பகுதியில் அழைக்கப்படும் கோட்டையை நாங்கள் நெருங்கிய பொழுது மணி ஒன்பதைத் தாண்டியிருந்தது. கோட்டை வாயிலைத்தாண்டி நாங்கள் உள்ளே பிரவேசித்தோம். பாறையிலேயே குடையப்பட்ட படிகளைக் கடந்து மேலே சென்றால், ஒரு சிறிய கதவு தென்படுகிறது. கதவின் மறுபக்கம் ஒரு பெரிய லமரம். வலது பக்கம் செல்லும் சிறிய ஒற்றையடிப் பாதை. நேர் எதிரே மேலும் படிகள்.

ஆலமரத்தின் விழுதுகளைப் பார்த்தால் தொங்காமல் விடலாமா என்ன? மரம் ஏறுவதிலிருந்து விழுதில் தொங்குவது வரை எல்லாம் ஒரு புறம் நடக்க, மறுபுறம் ஒற்றையடிப்பாதையின் முடிவு என்ன என்ற விசாரணை நடந்தது. பாதையை நூல் பிடிப்பதுபோல் பிடித்துக் கொண்டே சென்றால், அது இன்னொரு பாறையில் சென்று முடிவடைந்தது. இந்தப் பாறையின் அடியில் இருக்கும் படிகளில் இறங்கினால், ஒரு சிறிய மறைந்த மண்டபம் (நிஜமாகத்தான்!) இருந்தது. வேப்பமரங்கள் கவிந்திருந்த மண்டபத்தின் கூரைமேல் ஏறிப் பார்த்தால்...நேர் எதிரே, செங்குத்தாக ஏறிய மலைச்சுவரில்- ஒரு சிறிய சன்னதிக்குள் சிவலிங்கம்.


The Sivalinga Sannithi


இன்னும் மேலே ஏறியவுடன், மலையின் உச்சியில் சென்று கோட்டை முடிவடைந்தது. காற்று ளைத் தூக்கிக் கொண்டு செல்ல, சிலர் கோட்டைச் சுவர் ஓரங்களுக்குச் சென்றனர். மற்றவர்கள் உச்சியில் வைக்கப்பட்டிருந்த பீரங்கியை நோக்கி நடந்தனர். கோட்டையின் அடிவாரத்தில் பரந்து விரிந்த வயல்வெளிகளையும், கிராமப்புறங்களையும், வளைந்து நெளியும் சாலைகளையும் பார்த்து ரசித்தோம். பீரங்கியின் மேல் உட்கார்ந்து 'போஸ்' கொடுப்பதிலிருந்து, கோட்டை சுவற்றிலிருந்து கீஈஈஈழே தெரிந்த குளம் வரையில் எட்டிப்பார்ப்பது வரையில் எல்லாம் செய்த பிறகு, அங்கிருந்து கிளம்பலாம் என்று முடிவாகியது.

மலையிலிருந்து இறங்கி வந்து, ஆளுக்கு இரண்டு மூன்று இளநீரை கபளீகரம் செய்த பிறகு ஒரு மாதிரி தாகம் தணிய, பயணத்தின் அடுத்த கட்டத்திற்குச் சென்றோம்.

   5 comments

NBA Caps
September 20, 2012   04:51 PM PDT
 
I want all the stuff about Season 3 and I want no more loan comments! Now-se!,174415,http://pavithra.blogdrive.com/comments?id=6
Princess
April 6, 2004   09:00 PM PDT
 
Thanks Mary...I wish I knew who you were.:-)
Mary!
April 1, 2004   03:49 AM PST
 
Pavithra,
Great writing. I have gone past thirumeyyam fort dozens of times, never been to the temples or to the Kottai though. There is a little Pillayar kovil there and on our way to Chennai the bus will always stop for a sidharukkai. Very nicely written
Princess
March 22, 2004   01:43 AM PST
 
Thank you. That makes it really worthwhile:-)
Kannan
March 22, 2004   12:34 AM PST
 
š Ҿ Ȣ. ¡ 󾾡 ɢ ú Ţ, ɡ ̨Ȩ Ψ 츢Ţ. :-)
http://fossils.textamerica.com/?r=478522

Leave a Comment:

Name


Homepage (optional)


Comments