Entry: Aavudaiyar Koil Wednesday, April 07, 2004ஆவுடையார்கோயில்


For a picture version of this post, go here.

திருமயத்தை விட்டுக் கிளம்பி, நாங்கள் திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோயிலை வந்து அடையும் பொழுது மதியம் மணி பன்னிரண்டைத் தாண்டியிருந்தது.

இதுவரை நாங்கள் பார்த்து வந்த கோயில்களைப் போல் அல்லாமல், ஆவுடையார் கோயில் சாலை முழுக்கத் தண்ணீருடனும், வீதி முழுதும் மக்களுடனும், திருவிழாக்கோலத்துடன் எங்களை வரவேற்றது. அன்று ஏதோ விசேஷம் போலும்- எங்கே பார்த்தாலும் பக்திப் பெருக்குடன் மக்கள் வெள்ளம். அவ்வப்போது லாரி லாரியாகத் தண்ணீரை நிரப்பி வீதி முழுதும் இரைத்துவிட்டுப் போனார்கள். சள சளவென்று சேற்றில் நடந்து ஆவுடையார் கோயிலை நெருங்கினோம். கூரை முழுதும் தோரணங்கள், தரையெங்கும் கிழிந்த வாழை இலைகள், ப்ளாஸ்டிக் குப்பைகள். இங்கும் அங்கும் ஓயாமல் நடமாடும் மனிதர்கள், அழும் குழந்தைகள்.

இவற்றாலெல்லாம், முன் மண்டபத்தின் ஆளுயரச் சிலைகளின் கவர்ச்சியையோ, ஆவுடையார் கோயிலின் பெயர் பெற்ற கொடுங்கைகளின் வனப்பையோ சிறிதும் குறைக்க முடியவில்லை.

முன் மண்டபம் வரையிலும்தான் இந்த ஜன வெள்ளம். அதைத் தாண்டிய பின் கோயில் அமைதியான அழகுடன் விளங்கியது.

சோழநாட்டின் தெற்கு எல்லையாகவும், பாண்டிய நாட்டின் கிழக்கு எல்லையாகவும், தோப்பும் சோலையுமாகச் செழித்திருக்கும் ஊர் திருப்பெருந்துறை. ஏறக்குறைய ஆயிரத்து இருநூறு வருடங்களுக்கு முன்னால்...

பாண்டிய நாட்டை அரிமர்த்தன பாண்டிய மன்னன் ண்டு கொண்டிருந்த பொழுது, தென்னவன் பிரம்மராயன் என்பவர் அம்மன்னனின் அமைச்சராகப் பதவி வகித்து வந்தார்.  பாண்டியர் குதிரைப் படைக்குக் குதிரைகள் வாங்கும் பொருட்டு, அரச ஆணையை ஏற்று, வேண்டிய பொன்னுடன், கிழக்குக் கடற்கரைக்குப் பயணமானார் அமைச்சர்.

குதிரைகளைப் பார்வையிடுவதற்காகத் திருப்பெருந்துறை வழியே சென்று கொண்டிருந்த அமைச்சர், குருந்த மரத்தடியிலே, சிவபெருமானே குருவாக அமர்ந்து உபதேசம் செய்யும் தேவகானம் காதில் விழ, சட்டென்று நின்றார். பரவசத்துடன் கேட்கத்தொடங்கினார். அந்த நிமிடமே அவருக்குத் தன் பதவி மறந்துவிட்டது. தான் வந்த காரியம் மறந்துவிட்டது. கையிலிருந்த பொன்னை வைத்துக் கொண்டு, திருப்பெருந்துறையில் கோயில் கட்டுவதற்கான ஆயத்தங்களில் இறங்கினார்.

குதிரை வாங்கச் சென்ற அமைச்சர் பொன்னைக் கொட்டி கோயில் கட்டுகிறார் என்ற செய்தி கேட்டு எந்த மன்னன் சும்மாயிருப்பான்? தென்னவன் பிரம்மராயரைக் கைது செய்து சிறையில் அடைத்தான் பாண்டிய மன்னன். இந்த நிமிடமே குதிரைகள் வேண்டும் என்று த்திரத்துடன் கட்டளை பிறப்பித்தான். அமைச்சர் சிவபெருமானை மனதிற்குள் தியானித்தார்.

அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. காட்டிலிருந்த நரிக்கூட்டங்கள் குதிரைகளாக உருவம் பெற்றன. அன்று இரவே, அட்டகாசமான அரேபியக் குதிரைகள் அரண்மனையை வந்து அடைந்தன. குதூகலமடைந்த மன்னன் அமைச்சரை விடுவித்தான். மறுநாள் காலையில், குதிரைகள் அனைத்தும் மீண்டும் நரிகளாகியிருந்தன. கடுங்கோபமடைந்த மன்னன் அமைச்சரை மேலும் சித்திரவதைக்குள்ளாக்கினான். இறையருளால் அவற்றை அமைச்சர் வெல்ல, இவர் சாதாரண மனிதரல்ல என்பது மன்னனுக்கு உறைத்தது.

   நரியைக் குதிரைப் பரியாக்கி
   ஞாலமெல்லாம் நிகழ்வித்து
   பெரிய தென்னன் மதுரை யெல்லாம்
   பிச்ச தேற்றும் பெருந்துறையாய்...

அமைச்சர் நன்றிப்பெருக்குடன் இறைவனைத் துதித்துப் பாடிய பாடல்கள் அனைத்துமே மாணிக்கத்தைப் போல் சிறப்புப் பெற்றிருந்ததால்- மாணிக்க வாசகர் என்று பெயர் பெற்றார். இதுதான் தலவரலாறு.

அப்படிப்பட்ட மாணிக்க வாசகர் கட்டிய கோயில்தான் ஆவுடையார் கோயில். பிற்காலத்தில் பல மன்னர்கள் கோபுரங்களையும், மண்டபங்களையும் சேர்த்துக் கட்டினார்கள்.

ஆவுடையார் கோயிலின் தனிச்சிறப்பு அதன் கொடுங்கைகள்தான். (கோயில் ஸ்தபதிகள் ஆவுடையார் கோயில் கொடுங்கை நீங்கலாகச் செய்து தருவோம் என்று சொல்லித்தான் கோயில் பணி செய்யவே ஒப்புக்கொள்வார்களாம். இந்த வழக்கம் இன்று வரை தொடர்கிறது என்றும் சொல்கிறார்கள்). மிக மெல்லிய- ஓர் அங்குல கனமேயான தகடுகளாகச் பெரிய கற்களைச் செதுக்கி, அவற்றைத் தாங்க உத்திரங்களையும் செதுக்கிப் பொருத்தியுள்ளனர்.

இந்தக் கோயிலின் இன்னொரு சிறப்பு- கற்சங்கிலிகள். முழுதும் கல்லினாலேயே செதுக்கப்பட்ட கல் வலையங்கள் ஒன்றிற்குள் ஒன்றாகக் கோர்க்கப்பட்டு, மண்டபத்தின் உச்சியிலிருந்து தொங்குகின்றன. எப்படிப்பட்ட அதிசயம் இது!

ஆவுடையார் கோயிலில், சிவபெருமான் ஆத்மநாதராக எழுந்தருளியிருக்கிறார். இதனால், கருவறையில் லிங்க வடிவம் கிடையாது. அருவமாக இறைவன் காட்சி தருகிறார். கருவறையில் அமைந்திருக்கும் மேடையே ஆவுடையாராகக் கருதப்படுகிறது. இதனால்தான் கோயிலுக்கு ஆவுடையார் கோயில் என்ற பெயரும் ஏற்பட்டது.

மாணிக்கவாசகருக்குத் தனி சன்னதி இருப்பதும் இந்தக் கோயிலில்தான். அவர் தீட்சை பெற்றதாகக் கருதப்படும் மரமும், சிற்பமாக செதுக்கப்பட்டிருக்கிறது. ஒரு மண்டபத்தின் தூணில், மாணிக்க வாசகர் அமைச்சராக, பட்டுப் பீதாம்பரங்கள் உடுத்தி, அமர்க்களமாகக் காட்சி தருகிறார். அருகிலிருக்கும் தூண் ஒன்றில், இடுப்பில் ஒற்றை ஆடை தரித்த துறவியாகத் தெரிகிறார்.

இந்தத் தலமே, மாணிக்க வாசகரின் திருவாசகம் தோன்றிய தலம் என்று கூறப்படுகிறது.

ஆவுடையார் கோயிலின் கொடுங்கைகளை ரசித்துவிட்டு, நீண்ட பிரகாரங்களை ஒரு சுற்று சுற்றிவிட்டு, சற்று நேரம் முன் மண்டபத்தில் உட்கார்ந்து குதிரைச் சிற்பங்களை பார்த்து அனுபவித்துக் கொண்டிருந்தோம். கோயிலின் முன் வாயிலில் பூஜை அமர்க்களங்கள் முடிந்திருந்தன. சப்தங்கள் அடங்கி, அமைதி சூழ ஆரம்பித்தது.

மதியம் என்றாலும், கதவுகளைச் சார்த்திக் கொள்ளாமல் எங்களை வரவேற்ற த்மநாதரை இன்னொரு முறை வணங்கிவிட்டு, ஆவுடையார் கோயிலுக்கு விடை கொடுத்தோம். 


 

   0 comments

Leave a Comment:

Name


Homepage (optional)


Comments